தேடுதல்

புத்தகத்தின் அட்டைப்படம் புத்தகத்தின் அட்டைப்படம்  

PAOLO DALL’OGLIO பற்றிய புத்தகத்திற்கு திருத்தந்தையின் முன்னுரை

2013ஆம் ஆண்டு ஜூலை 29ஆம் நாள் ISIS இன் தலைநகரான சிரியாவில் உள்ள ரக்காவை அடைந்த அவரைப் பற்றிய எந்த செய்தியும் இதுவரை அறியப்படாத நிலையில் அவர் சிரியாவிலிருந்து வெளியேற்றப்படுவதற்கு முன்பு எழுதிய கருத்துக்கள் புத்தகமாக வெளிவந்துள்ளன.

மெரினா ராஜ் – வத்திக்கான்

சிரியாவில் பணியாற்றி காணாமல் போன PAOLO DALL’OGLIO அவர்கள், நவீனகால இறைவாக்கினராக ஆன்மிக சாட்சியாகத் திகழ்ந்தவர் என்றும், கிறிஸ்துவின் இரக்கத்தின் வல்லமையினால் அனைத்தையும் தாங்கும் ஆற்றலையும் அதனை மகிழ்வுடன் அனுபவிக்கும் மறைப்பணியாளரின் பார்வையையும் கொண்டவர் என்றும் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஜூலை 7 வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட அருள்பணி PAOLO DALL'OGLIO அவர்களின் கருத்துக்கள் அடங்கிய IL MIO TESTAMENTO அதாவது எனது சான்றுகள் என்னும் புத்தகத்திற்கு எழுதிய முன்னுரையில் இவ்வாறு தெரிவித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

விவிலியத்தில் குறிப்பிடப்படும் மம்ரேவின் கருவேலமரம் போன்று சிரியாவில் அவர் உருவாக்கிய துறவற குழுமம் கடவுளை நம் விருந்தாளியாகவும் நம்மை அவருடைய விருந்தாளிகளாகவும் மாற்றும் இடமாகச் செயல்படுகின்றது என்று எடுத்துரைத்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

அருள்பணி பவுலோ, பிரச்சனைகளைப் புறக்கணிக்காது தன் உடன்சகோதரர்களான கிறிஸ்தவ அரபு சகோதரர்கள், காப்டிக், கல்தேய, அசீரிய, மேரோனைட் வழிபாட்டுமுறை சகோதரர்கள் ஆகியோருக்கு செவிமடுத்தார் என்றும், மனித உடன்பிறந்த உறவின் பாதையை தனது குறிப்பிட்ட பணியாக உணர்ந்து செயல்பட்டார் என்றும் எடுத்துரைத்துள்ளார் திருத்தந்தை.

மறைப்பணி பார்வை என்னும் அடிப்படைவாதமற்ற ஒரு பார்வையை, நம்பிக்கை ஒளி நிறைந்த பாதையைக் கொண்டிருந்தவர் என்றும், கடவுளால் நிறைந்திருக்கும் நம்பிக்கையின் பாதை புன்னகை நிறைந்ததாக இருக்கும் என்பதைத் தன் செயல்களால் வெளிப்படுத்தியவர் என்றும் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

தனது தனிப்பட்ட நம்பிக்கையின் பயணம், திருஅவை மற்றும் உலகத்தின் புதிய எல்லைகளைத் திறக்கும் இறைவாக்குப் பார்வை, கிறிஸ்தவ ஒன்றிப்பு, ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையிலான உடன்பிறந்த உறவு, இஸ்லாமியத்துடனான உரையாடல் என்பன போன்ற பல கருத்துக்கள் அப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ளன.

அருள்பணி PAOLO DALL'OGLIO

1954ஆம் ஆண்டு பிறந்த அருள்பணி PAOLO DALL'OGLIO அவர்கள் 1975 ஆம் ஆண்டு முதல் இயேசுசபையின் அருள்பணியாளராக தன்னை இணைத்துக் கொண்டவர். 1982 ஆம் ஆண்டு சிரியாவில் டெய்ர் மார் மூசா அல்-ஹபாஷி என்னும் துறவற குழுவை உருவாக்கி, 1984 ஆம் ஆண்டு முதல் சிரோ-கத்தோலிக்க தலத்திருஅவையின் அருள்பணியாளராகப் பணியாற்றினார்.

1991 இல் ஒரு புதிய துறவற அனுபவத்தின் தொடக்கமாக விருந்தோம்பல், கிறிஸ்தவ ஒன்றிப்பு, அரபு-இஸ்லாமிய சூழலில் கலாச்சாரம், இஸ்லாமியத்துடன் உரையாடல் ஆகியவற்றிற்கான பாதைகள் இவரது செயல்களால் நடைபெற்றன. 2011 முதல், சிரியாவிற்கான ஆர்ப்பாட்டங்கள், அமைதி மற்றும் ஜனநாயகமயமாக்கல் தொடர்புடைய செயல்பாடுகளில் ஈடுபட்டதால் அவரது பொறுப்புக்களும், குடியிருப்பு அனுமதியும் இரத்து செய்யப்பட்டன. இதனால் 2012ஆம் ஆண்டு ஜூன் மாதம் சிரியாவை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அமைதி மற்றும் நல்லிணக்கத்திற்கான தனது உறுதிப்பாட்டை தொடர்ந்து செயல்படுத்தியதால் 2013ஆம் ஆண்டு ஜூலை 29ஆம் நாள் ISIS இன் தலைமையிடமான சிரியாவில் உள்ள ரக்காவை அடைந்த அவரைப் பற்றிய எந்த செய்தியும் இதுவரை அறியப்படாத நிலையில் அவர் சிரியாவிலிருந்து வெளியேற்றப்படுவதற்கு முன்பு எழுதிய கருத்துக்கள் புத்தகமாக வெளிவந்துள்ளன.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

07 July 2023, 13:39