தேடுதல்

மாசற்ற மரியின் கிளாரிட்டன் மறைபோதக சபையினருடன் திருத்தந்தை மாசற்ற மரியின் கிளாரிட்டன் மறைபோதக சபையினருடன் திருத்தந்தை  (Vatican Media)

இறைவனின் அன்பு அரசு இவ்வுலகில் நிலைகொள்ள உதவுதல்

அகில உலக திருஅவையில் இணைந்து பணியாற்றும் கிளாரியேசன் அருள்சகோதரிகள், பணியாற்றும் இடங்களில் செவிமடுக்கவும், நற்செய்தியை அறிவிக்கவும் வாய்ப்புக்களை உருவாக்குகின்றனர்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

மாசற்ற மரியின் கிளாரிட்டன் மறைபோதக சபைச் சகோதரிகளின் 18வது பொதுஅவை அமர்வில் கலந்துகொண்டோரை ஜூலை 24 திங்கள்கிழமையன்று திருப்பீடத்தில் சந்தித்து உரையாடினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

எம்மாவுஸ் செல்லும் வழியில் இயேசுவின் இரு சீடர்கள் இயேசுவைச் சந்தித்த நிகழ்வைப் பற்றி முதலில் குறிப்பிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்த எம்மாவுஸ் நிகழ்வு, இன்று திருஅவையில் இடம்பெறும் சந்தித்தல், பங்குகொள்ளுதல், உரையாடுதல், ஒன்றிணைதல், மறைப்பணியாற்றுதல் என்ற உலக ஆயர் பேரவையின் ஒன்றிணைந்து நடத்தலின் பாதையை சுட்டிக்காட்டுவதாக உள்ளது என்றார்.

இந்த பாதையையே கிளரியேசன் அருள்சகோதரிகளும் பின்பற்றிவருவதைக் காணமுடிகிறது என்ற திருத்தந்தை, இத்தகைய தனிவரத்துடன் அகில உலக திருஅவையில் இணைந்து பணியாற்றும் இவர்கள், தாங்கள் பணியாற்றும் இடங்களில் செவிமடுக்கவும், நற்செய்தியை அறிவிக்கவும் வாய்ப்புக்களை உருவாக்கி வருவதற்கு தன் நன்றியையும் வெளியிட்டார்.

இவர்கள் மரியின் வழியைப் பின்பற்றுபவர்கள், மறைபோதகர்கள் மற்றும் கிளாரிஸ்ட் சபையினர் என்ற மூன்று கூறுகளைத் தங்களுள் கொண்டுள்ளனர் என்பதை சுட்டிக்காட்டிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்த அருள்சகோதரிகள் மரியின் வழிகளை பின்பற்றுபவர்கள் என்ற வகையில், அன்னை மரியும் அவர்களின் துணை நின்று இயேசுவின் திருஇதயத்தை அவர்களுக்கு சுட்டிக்காட்டி அவர் கூறுவதெல்லாம் செய்யும்படி அவர்களுக்கு அறிவுரை வழங்குகிறார், என்றார்.

அன்னமரியில் நம்பிக்கைக் கொண்டு தாங்கள் செல்லும் இடங்களிலெல்லாம் இயேசுவின் செய்தியை அறிவிக்கும் மறைப்பணியை  ஆற்றிவரும் இந்த கிளாரியேசன் சகோதரிகள், இறைவனின் அன்பு அரசு இவ்வுலகில் நிலைகொள்ள உதவுகிறார்கள் எனவும் எடுத்துரைத்தார்.

புனித நல்லாயனாகவும் மறைபோதகராகவும், சபை நிறுவனராகவும் செயல்பட்ட புனித அந்தோனி மரிய கிளாரட் அவர்களின் புதல்வியாகிய மரியின் மாசற்ற இதயத்தின் கிளாரிட்டன் மறைப்பணி சகோதரிகள், அன்னைமரியின் துணையுடன் தங்கள் நற்செய்தி அறிவிப்புப் பணியையும் மறைப்பணியையும் ஆற்றி வருகின்றனர் எனவும் தன் பாராட்டுக்களை வெளியிட்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

24 July 2023, 15:22