புனித பூமியிலும் உக்ரைனிலும் அமைதி திரும்ப செபியுங்கள்
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்
ஜூலை 09, ஞாயிற்றுக்கிழமை நண்பகல் மூவேளை செபவுரைக்குப்பின், உலகில் அமைதிக்காக செபிக்குமாறு அனைவருக்கும் மீண்டுமொருமுறை அழைப்புவிடுத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புனித பூமியில் அமைதிப் பேச்சுவார்த்தைகள் இடம்பெறவேண்டும் எனவும், போரால் சிதறுண்டு கிடக்கும் உக்ரைன் நாட்டில் அமைதி திரும்பவேண்டும் எனவும் சிறப்பான விதத்தில் இறைவேண்டல் செய்யுமாறு விசுவாசிகளை விண்ணப்பித்தார்.
வத்திக்கான் தூய பேதுரு பேராலய வளாகத்தில் குழுமியிருந்த விசுவாசிகளை நோக்கி இவ்விண்ணப்பத்தை முன்வைத்த திருத்தந்தை, புனித பூமியான யெருசலேமில் அண்மைக்காலங்களில் இடம்பெற்றுவரும் வன்முறைகள் குறித்து ஆழ்ந்த கவலையை வெளியிட்டதோடு, இஸ்ராயேலர்களுக்கும் பாலஸ்தீனியர்களுக்கும் இடையே அமைதியும் ஒப்புரவும் இடம்பெறவேண்டும் என்ற விண்ணப்பத்தையும் முன்வைத்தார்.
அதிக அளவு துன்பங்களை அனுபவித்துவரும் உக்ரைன் மக்களுக்காக அனைவரும் செபிக்குமாறும் விசுவாசிகளைக் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஜூலை 09, ஞாயிற்றுக்கிழமையன்று கடல் ஞாயிறு சிறப்பிக்கப்பட்டது பற்றியும் தன் மூவேளை செபவுரையின் இறுதியில் எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கடல்சார் பணியாளர்களுடன் தன் அன்பையும் நெருக்கத்தையும் வெளியிடுவதாக உரைத்ததுடன், மத்தியதரைக்கடல் பகுதியில் அடைக்கலம் தேடி வருவோரின் உயிர்களைக் காப்பாற்ற சோர்வின்றி பணிபுரிந்துவருவோர்க்கு தன் சிறப்பான நன்றியையும் வெளியிட்டார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்