தேடுதல்

உரோம் நகர் குண்டுவீச்சுக்கு உள்ளான வேளையில் மக்களை சந்தித்த திருத்தந்தை 12ஆம் பயஸ் உரோம் நகர் குண்டுவீச்சுக்கு உள்ளான வேளையில் மக்களை சந்தித்த திருத்தந்தை 12ஆம் பயஸ் 

1943ல் உரோம் தாக்கப்பட்டதையொத்த வன்முறைகள் இன்றும் உலகில்

1943ஆம் ஆண்டு ஜூலை மாதம் 19ஆம் தேதி உரோம் நகர் முழுவதும் இடம்பெற்ற குண்டுவீச்சுகளால் 3000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர், 11000 பேர் காயமடைந்தனர்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

எண்பது ஆண்டுகளுக்கு முன்னால், 1943ஆம் ஆண்டு உரோம் நகரின் சில பகுதிகள் குண்டுவீச்சுக்கு ஆளானத்தைப் பற்றி, ஜூலை 16, ஞாயிறு நண்பகல் மூவேளை செபவுரைக்குப்பின் நினைவுகூர்ந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்நினைவு நம்மை நோக்கி போர் வேண்டாம் என்ற விண்ணப்பத்தை மீண்டும் புதுப்பிக்க அழைப்புவிடுக்கிறது என  உரைத்தார்.

உரோம் நகர் அன்று தாக்கப்பட்டதையொத்த வன்முறை நிகழ்வுகள் இன்றும் உலகின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன என்பதை எடுத்துரைத்த திருத்தந்தை, கடந்த கால நிகழ்வுகளின் நினைவுகள் நம் மனங்களிலிருந்து மறைந்து போனதேன், இன்னும் போர்கள் தொடர்ந்து கொண்டிருப்பதன் காரணம் என்ன என்ற கேள்விகளையும் முன்வைத்தார்.

போரின் துன்பநிலைகளிலிருந்து மனித குலத்தைக் காப்பாற்ற கடவுளின் கருணையை நோக்கி இறைஞ்சுவோம் எனவும் கேட்டுக்கொண்ட திருத்தந்தை, போரால் தொடர்ந்து துன்பங்களை அனுபவித்துவரும் உக்ரைன் மக்களுக்கு செபிக்குமாறு அனைவருக்கும் மீண்டும் விண்ணப்பம் ஒன்றையும் விடுத்தார்.

1943ஆம் ஆண்டு ஜூலை மாதம் 19ஆம் தேதி உரோம் நகரின் சான் லொரென்சோ என்ற பகுதியில் இடம்பெற்ற முதல் குண்டுவீச்சைத் தொடர்ந்து  உரோம் நகர் முழுவதும் இடம்பெற்ற குண்டுவீச்சுகளால் 3000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர், 11000 பேர் காயமடைந்தனர். சான் லொரொன்சோ பகுதியில் மட்டும் 717 பேர் உயிரிழக்க, 4000 பேர் காயமடைந்தனர்.

உரோம் நகர் முழுவதும் அந்நாட்களில் 10 ஆயிரம் வீடுகள் அழிவுக்குள்ளாகி 40 ஆயிரம் குடிமக்கள் உறைவிடங்களை இழந்தனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

16 July 2023, 13:40