தேடுதல்

230723 அன்று தாத்தா பாட்டிகள் தின திருப்பலி மறையுரையின்போது 230723 அன்று தாத்தா பாட்டிகள் தின திருப்பலி மறையுரையின்போது  (ANSA)

தீமையை எதிர்கொள்வதற்கான சிறந்த வழி பொறுமையே

பயிர்களும் களைகளும் ஒரே நிலத்தில் ஒரே நேரத்தில் அருகருகே வளர்கின்றன என்பது, வாழ்வை எவ்வாறு நோக்க வேண்டும் என்பதை கிறிஸ்தவர்களுக்குச் சொல்லித் தருகிறது

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

தாத்தா பாட்டிகளுக்கும் இளையோருக்கும் இடையேயான கனிதரும் பரிமாற்றங்கள் வழி, அவர்கள் இணைந்து வளரவும், திருஅவையின் வாழ்வைப் பலப்படுத்தவும் இயலும் என எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

தாத்தா பாட்டிகள் மற்றும் முதியோருக்கான திருஅவையின் மூன்றாவது உலக தினத்தையொட்டி வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவிலில் ஏறக்குறைய 8000 முதியோருக்கு திருப்பலி நிறைவேற்றி மறையுரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அந்நாளின் நற்செய்தி வாசகம் கோடிட்டுக் காட்டும், இணைந்து வளர்தல் என்பதை மையமாக வைத்து தன் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்.

தலைமுறை தலைமுறையாக அவரின் இரக்கம், என்ற தலைப்புடன் சிறப்பிக்கப்பட்ட இந்த உலக தினத்தின் நற்செய்தி வாசகம் எடுத்துரைத்த, பயிர்களும் களைகளும், கடுகு விதை, புளிப்புமாவு என்ற மூன்று உவமைகளையும் முன்வைத்து, ஒன்றிணைந்து வளர்தலே இந்த மூன்றிலும் காணப்படுகிறது என்பதை விவரித்தார்.

பயிர்களும் களைகளும் ஒரே நிலத்தில் ஒரே நேரத்தில் அருகருகே வளர்கின்றன என்பதை பயிர்களும் களைகளும் என்ற உவமையிலிருந்து சுட்டிக்காட்டிய திருத்தந்தை, இது வாழ்வை எத்தகையக் கண்ணோட்டத்துடன் நோக்க வேண்டும் என்பதை கிறிஸ்தவர்களுக்குச் சொல்லித் தருகிறது என்றார்.

பயிர்களும் களைகளும் இணைந்தே வளர்வதுபோல், நம் வாழ்விலும் ஒளியும் நிழலும், அன்பும் சுயநலமும், நன்மையும் தீமையும் ஒன்றுக்கொன்று பின்னிப் பிணைந்து, பிரிக்கமுடியாதவைகளாக நமக்கு காட்சித் தருகின்றன எனவும் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

தீமை என்பது நமக்கு வெளியே மட்டும் இல்லை, நமக்குள்ளேயும் காணப்படுகிறது என்பதை உணர்ந்து அதனை எதிர்கொள்ளவேண்டும் என்ற திருத்தந்தை, தீமைகளைக் காணும்போது அவைகள் குறித்து நாம் பொறுமையை இழக்காமலும், அவைகளைக் களைவதில் வன்முறை வழிகளைக் கையாளாமலும் செயல்படவேண்டியது அவசியம் என்பதையும் சுட்டிக்காட்டினார்.

தீமையை எதிர்கொள்வதற்கான சிறந்த வழி பொறுமையைக் கடைப்பிடிப்பதே என்பதையும் சுட்டிக்காட்டிய திருத்தந்தை, தீமையை முற்றிலுமாக வெற்றிக்கொள்வது இறைவனின் செயலே என்பதையும் எடுத்துரைத்தார்.

முதியோர் தங்கள் கடந்தகாலத் தவறுகள் குறித்தக் கவலையில் மூழ்கிப்போகாமல், தீர்ப்புகளை இறைவனிடம் விட்டுவிட்டு வாழ்வின் மறையுண்மையை பொறுமையுடன் ஏற்றுக்கொள்ளப் பழகவேண்டும் என கேட்டுக்கொண்டார் திருத்தந்தை.

இறையரசு எவ்வாறு கடுகுவிதைபோல் இருந்தாலும் பறவைகள் வந்து தங்கும் பெரும் மரமாக வளர்வதுபோல், முதியோரும் தங்கள் முதுமைப் பருவத்தில் மற்றவர்களுக்கு நிழலாகவும் ஆறுதலாகவும் செயல்படமுடியும் எனவும் எடுத்துரைத்தார் திருத்தந்தை.

தாத்தா பாட்டிகள் எப்போதும் நல்லவைகளையும் இல்லத்தின் கதகதப்பையும் தங்கள் குழந்தைகளுடனும் பேரக்குழந்தைகளுடனும் பரிமாறிக்கொள்ளும்போது, வாழ்வின் அழகை ஒவ்வொருவரும் புரிந்துகொள்ளவும், உடன்பிறந்த உணர்வுடன் கூடிய சமூகத்தைக் கட்டியெழுப்பவும் முடிகிறது என மேலும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

புளிக்காரத்தை மாவில் கலக்கியபின், அம்மாவு பொங்கி வழிவதைப் பற்றிக் குறிப்பிடும் மூன்றாவது உவமையைக் கையிலெடுத்த திருத்தந்தை, இவ்வகையில் தலைமுறைகளுக்கிடையேயான பரிமாற்றங்கள் இடம்பெறுகின்றன என்றார்.

தலைமுறைகளுக்கிடையேயான பரிமாற்றங்களுக்கான அழைப்புவிடப்படும்போது, தனியார் நலவாதங்களும், சுயலப்போக்குகளும் வெற்றிகொள்ளப்பட்டு, முதியோர் கைவிடப்படாமலும், தனிமைக்கு கையளிக்கப்படாமலும் இருக்க உதவுகின்றது என்றார் திருத்தந்தை.

இளையோரும் முதியோரும் தங்களுக்குரிய கொடைகளை ஒருவருக்கொருவர் பகிர்ந்து ஒன்றிணைந்து வாழ உதவும் நோக்கத்தில் ஒருவருக்கொருவர் செவிமடுக்கவும், ஒருவரோடு ஒருவர் உரையாடல் நடத்தவும், ஒருவருக்கொருவர் ஆதரவு வழங்கவும் முன்வர வேண்டும் என்ற விண்ணப்பத்துடன் தன் மறையுரையை நிறைவுச் செய்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

23 July 2023, 13:37