தேடுதல்

அசிசியில் திருத்தந்தை பிரான்சிஸ் அசிசியில் திருத்தந்தை பிரான்சிஸ்   (ANSA)

திசைகாட்டும் புனித பிரான்சிஸ் அசிசியாரின் ஒழுங்கு

கிறிஸ்தவ வாழ்வின் இன்றியமையாத, முக்கியத்துவமான நற்செய்தியின் இதயமாக விளங்கும் பகிர்தலை எடுத்துக்காட்டும் வாழ்க்கை செயல்முறையின் கதையை புனித பிரான்சிஸ் அசிசியார் நமக்குத் தருகிறார் : திருத்தந்தை பிரான்சிஸ்

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

புனித பிரான்சிஸ் அசிசியாரின் ஒழுங்கு (Rule) என்பது நம் வாழ்வின் பயணத்தை வழிநடத்தும் ஒரு திசைகாட்டி என்று புகழாரம் சூட்டியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

புனித பிரான்சிஸ் அசிசியார் எழுதிய ஒழுங்குமுறையின் 800-ஆம் ஆண்டை அச்சபையினர் கொண்டாடும் இவ்வேளை, அச்சபையைச் சேர்ந்த போலந்து நாட்டு அருள்பணியாளர் Zdzisław Józef Kijas அவர்கள் எழுதியுள்ள "Brulicante di vita" அதாவது, ‘வாழ்வு நிரம்பி வழிகிறது’  என்ற புதிய நூலிற்கு எழுதியுள்ள அணிந்துரையில் இவ்வாறு கூறியுள்ளார் திருத்தந்தை 

ஒர் ஒழுங்கு என்பது, அதன் இதயத்தில் நற்செய்தியையும், அதன் படிப்பினைகளையும் காண்கின்றது என்றும், புனித அசிசியாரிடம் கேட்பவர்களுக்கு, இயேசு மட்டுமே தலைவர் என்பதைக் காட்டுகிறார் என்றும் கூறியுள்ள திருத்தந்தை, தெளிந்துதேர்தலின் இதயம் என்பது நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் அடிச்சுவடுகளைப் பின்பற்றுவதை அடிப்டையாகக் கொண்டுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

புனித பிரான்சிஸ் அசிசியார் தனது தோழர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி மற்றும் அன்பின் முழுமையை நோக்கி உரையாற்றியதால், அவர் ‘மனித வாழ்வின் கைவினைஞர்’ என்று வரையறுக்கப்படுகிறார் என்று உரைத்துள்ள திருத்தந்தை, அவர் ‘பகுத்தறிவில் ஒரு கைவினைஞர்’ என்றும், அவரது இறைவேண்டலின்போது  இறைவன் எவ்வாறு அவரைத் தனது பணிக்கு அழைத்தார் என்பதற்கு அவரின் மூன்று தோழர்களும் சான்றுபகர்ந்துள்ளனர் என்றும் எடுத்துக்காட்டியுள்ளார்

எல்லைகளைக் கடந்து விரக்தியின் விளிம்பில் வாடும் மக்களுக்கு உதவுவதற்கான வலிமையையும், அன்பை பரப்பும் ஆற்றலையும் புனித அசிசியார் நற்செய்தி காட்டும் படிப்பினைகளின் அடிப்படையில்தான் பெற்றுக்கொண்டார் என்றும் கூறியுள்ளார் திருத்தந்தை.

புனித அசிசியாரின் ஒழுங்கு என்பது மனிதநேயத்தை வளர்க்கவும், கடவுளுடனும் மற்றவர்களுடனும் உறவுகளை வளர்க்கவும் நம் இதயத்தையும் மனதையும் தூண்டியெழுப்புகிறது என்றும், இது படிப்படியாக, அன்பினால் அழைக்கப்படுவதற்கும், அன்புகூர்வதற்குமான மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறது என்றும் விளக்கியுள்ளார்  திருத்தந்தை.

மேலும் அவரது ஒழுங்கானது  கடவுளைச் சந்திப்பது, 'கிறிஸ்தவ சகோதரர்கள்' என்று அவர் அழைத்த நிராகரிக்கப்பட்டவர்களைச் சந்திப்பது, பொதுவான இல்லமாகிய இப்பூமியைப் பாதுகாப்பதற்கான ஆதரவையும் கூட்டுப்பொறுப்பையும் வளர்த்துக்கொள்வது ஆகியவற்றுக்கான பார்வையைப் புதுப்பித்துக்கொள்ள உதவுகிறது என்றும் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

28 July 2023, 14:03