இளையோரே, உலகத்திற்கான அமைதியின் அடையாளம் நீங்கள்!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
ஆகஸ்ட் 6 இஞ்ஞாயிறன்று, போர்த்துக்கல்லின் தலைநகர் லிஸ்பனில் நிகழ்ந்த ஆண்டவரின் உருமாற்றப் பெருவிழாத் திருப்பலியின் இறுதியில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கிய நண்பகல் முவேளை செபஉரை.
மனமுவந்து நன்றி கூறுகின்றேன்
அன்புக்குரிய சகோதரர் சகோதரிகளே! இந்த நாட்களில் நாம் அடிக்கடி கேள்விப்பட்ட ஒரு வார்த்தை நன்றி என்பதுதான். இது பெறுவதை மட்டுமல்ல கொடுப்பதையும் உள்ளடக்கியுள்ளது. இந்த அருள் நிறைந்த நிகழ்வில் நாம் பலவற்றைப் பெற்றுள்ளோம். இப்போது, நாம் இல்லம் திரும்பும்வேளை, கடவுள் நம் இதயங்களில் ஊற்றிய நன்மைக்கு மகிழ்ச்சியாகவும் ஆர்வமாகவும் சான்று பகரவும், பகிர்ந்து கொள்ளவும், கொடுக்கவும் வேண்டியதன் அவசியத்தை இறைவன் நமக்கு உணர்த்துகிறார்.
முதலாவதாக, கர்தினால் Clemente அவர்களுக்கும், அவருடன் இத்தலத்திருஅவை, ஒட்டுமொத்த போர்த்துகீசிய மக்களுக்கும் நன்றிகள். இந்த நாட்களின் நிகழ்வுகளின் போது நம்முடன் உடனிருந்த அரசுத் தலைவரின் ஆதரவிற்காகவும், உதவிக்காகவும் நன்றிகள் மற்றும் நமக்கு உதவிய தேசிய மற்றும் உள்ளூர் நிறுவனங்களுக்கும் ஆயர்கள், அருள்பணியாளர்கள், இருபால் துறவியர், பெண்கள் மற்றும் பொதுநிலையினருக்கும் நன்றிகள்.
கர்தினால் Farrell மற்றும் இந்த உலக இளையோர் தினத்தைத் தயார் செய்தவர்களுக்கும், இந்த நாட்களின் நிகழ்வுகளில் செபத்துடன் நம்மோடு இணைந்தவர்களுக்கும் நான் ஆழ்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். தன்னார்வலர்களுக்கும் நன்றிகள், அவர்களின் சிறந்த பணிக்காக நாம் அனைவரும் அவர்களைப் பாராட்டுகிறோம்!
இறைவன் விதைப்பதைப் பாதுகாத்திடுங்கள்
அன்பான இளையோரே, உங்கள் அனைவருக்கும் அன்பான வாழ்த்துகள்! நீங்கள் எவ்வளவு நல்லவர் என்று கடவுள் உங்களைப் பார்க்கிறார். அவர் உங்கள் இதயங்களில் எதை விதைத்திருக்கிறார் என்பது அவருக்கு மட்டுமே தெரியும். தயவுகூர்ந்து அவைகளைக் சிறந்த கருவூலமாகப் பாதுகாத்திடுங்கள். இந்நாட்களில் நிகழ்ந்த முக்கியமான தருணங்களை மனதில் கொள்ளுங்கள். உங்கள் வாழ்க்கைப் பயணத்தில் சோர்வு மற்றும் ஊக்கமின்மையின் தவிர்க்க முடியாத நேரங்கள் வரும்போது, இந்த நாட்களின் நீங்கள் பெற்றுக்கொண்ட அனுபவங்களையும் அருளையும் மீண்டும் நினைவு கூர்ந்திடுங்கள். நீங்கள் உண்மையில் யார் என்பதை ஒருபோதும் மறந்துவிடாதீர்கள். அதாவது, நற்செய்தியின் மகிழ்ச்சியில் நடக்கும் கடவுளின் தூய மக்களினம் என்பதை மறவாதீர்கள்.
அமைதியான எதிர்காலத்தை உருவாக்குங்கள்
இவ்வேளை, இந்நிகழ்வுகளில் பங்குபெற முடியாத இளையோருக்கும், அவர்களின் நாடுகளில் மறைமாவட்டங்கள் மற்றும் ஆயர்பேரவைகளால் ஏற்பாடு செய்யப்பட்ட தலத்திருஅவைகளின் நிகழ்ச்சிகளில் பங்கேற்றவர்களுக்கும் நான் சிறப்பு வாழ்த்தொன்றைத் தெரிவிக்க விரும்புகிறேன். இன்னும் குறிப்பாக, ஆயுத மோதல்கள் மற்றும் போர்கள் காரணமாக நம்முடன் இருக்க முடியாதவர்களை நம் எண்ணங்கள் மற்றும் செபங்களுடன் இணைத்துக்கொள்வோம். இந்தக் கண்டதை நான் நினைத்துப் பார்க்குக்கும்போது அவர்களைப்போல் இன்னும் பலர் உள்ளனர் என்பதை உணரமுடிகிறது. இத்தருணத்தில் போரினால் துயருறும் உக்ரைனை நினைத்து நான் மிகவும் மனவேதனை அடைகிறேன். அன்பான இளையோரே, எனக்குள் நான் சுமந்து கொண்டிருக்கும் கனவொன்றை உங்களுடன் பகிர்ந்து கொள்ள வயதான நபராக என்னை அனுமதியுங்கள்: இது அமைதிக்கான கனவு, அமைதிக்காக இறைவேண்டல் செய்யும் இளையோரின் கனவு. ஆகவே, அமைதியாக வாழ்ந்து, அமைதியான எதிர்காலத்தை உருவாக்குங்கள்.
நீங்கள் வெவ்வேறு உலகத்திற்கான நம்பிக்கைகள்.
நாம் மேற்கொள்ளும் இந்த நண்பகல் முவேளை செபஉரையில் மனித குலத்தின் எதிர்காலத்தை அமைதியின் அரசியாம் அன்னை மரியாவிடம் ஒப்படைப்போம். நீங்கள் இல்லம் திரும்பும்போது, அமைதிக்காகத் தொடர்ந்து இறைவேண்டல் செய்யுங்கள். மேலும், உலகத்திற்கான அமைதியின் அடையாளமாக விளங்கும் உங்களின் பிரசன்னம், வெவ்வேறு நாடுகள், மொழிகள் மற்றும் வரலாறுகள் பிளவுபடுவதற்குப் பதிலாக எவ்வாறு அவைகளை ஒன்றிணைக்க முடியும் என்பதைக் காட்டுகிறது. நீங்கள் வெவ்வேறு உலகத்திற்கான நம்பிக்கைகள்.
உடன் பயணிக்கும் இயேசுவும் மரியாவும்
இறுதியாக, இந்த நாட்களில் நம்மோடு உடன் பயணித்த ஆண்டவர் இயேசுவுக்கும், அவரது அன்புத் தாயாம் அன்னை மரியாவுக்கும் நன்றி கூறுவோம். இவர்கள் இருவரும் இப்போது மட்டுமல்ல எப்போதும் நம்முடன் இருக்கின்றனர் மற்றும், நம் அனைவர்மேலும் தங்களின் பார்வையைப் பதித்துள்ளனர். மேலும் இவர்களைப் போல் நம்மை வேறு யாரும் அன்பு செய்ய முடியாது. ஆண்டவராம் இயேசுவே உமக்கு நன்றி. ஆசீர்பெற்ற அன்னை மரியாவே உமக்கும் நன்றி!
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்