தேடுதல்

இத்தாலியில் அடைக்கலம் தேடும் புலம்பெயர்ந்தோர் இத்தாலியில் அடைக்கலம் தேடும் புலம்பெயர்ந்தோர்  (ANSA)

புலம்பெயர்ந்தோர் படகு விபத்து குறித்து திருத்தந்தை ஆழ்ந்த கவலை

இவ்வாண்டில் மட்டும் வடஆப்பிரிக்காவிலிருந்து ஐரோப்பா நோக்கி அடைக்கலம் தேடி வந்த மக்களுள் ஏறக்குறைய இரண்டாயிரம் பேர் கடலில் உயிரிழந்தது குறித்து எண்ணிப்பார்ப்போம்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

புலம்பெயர்ந்தோரை ஏற்றிவந்த படகு ஒன்று இத்தாலியின் லேம்பதூஸா தீவு அருகே விபத்துக்குள்ளாகி 41பேர் உயிரிழந்ததைக் குறித்து தன் ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளதுடன், புலம்பெயரும் மக்களுக்கான உதவிகளுக்கும் அழைப்புவிடுத்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆகஸ்ட் 13, ஞாயிற்றுக்கிழமையன்று வத்திக்கான் புனித பேதுரு வளாகத்தில் குழுமியிருந்த மக்களுக்கு நண்பகல் மூவேளை செபவுரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அதன் இறுதியில் இவ்வழைப்பை வெளியிட்டதுடன், இத்தகைய மனிதகுல திறந்த காயங்கள் தடுக்கப்படவேண்டும் என்ற விண்ணப்பத்தையும் விடுத்தார்.

துனிசியாவிலிருந்து அகதி மக்களுடன் புறப்பட்ட படகு ஒன்று இத்தாலிய தீவுக்கருகில் கவிழ்ந்து 41பேர் உயிரிழந்ததுக் குறித்து ஆழ்ந்த கவலையை வெளியிட்ட திருத்தந்தை, இவ்வாண்டில் மட்டும் வடஆப்பிரிக்காவிலிருந்து ஐரோப்பா நோக்கி அடைக்கலம் தேடி வந்த மக்களுள் ஏறக்குறைய இரண்டாயிரம்பேர் கடலில் உயிரிழந்தது குறித்து எண்ணிப்பார்ப்போம் என்ற அழைப்பையும் விடுத்தார்.

மனிதகுலத்தின் திறந்த காயமாக இருக்கும் இத்தகையப் படகு விபத்துக்களை தடுத்து அகதி மக்களைக் காப்பாற்றும் முயற்சிகளை ஒருமைப்பாடு மற்றும் உடன்பிறந்த உணர்வுடன் அரசியல் தலைவர்கள் முன்னின்று ஏற்று நடத்தவேண்டும் என அழைப்புவிடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மேலும், இந்நண்பகல் மூவேளை செபவுரையின் இறுதியில், ஹவாயிலுள்ள மயுய் தீவில் ஏற்பட்ட தீ விபத்தால் பாதிக்கப்பட்டோரையும் நினைவுக் கூர்வதாக அறிவித்தார் திருத்தந்தை. மேற்கு மத்திய நாடான கமருனில் அமைதி நிலவ செபிப்பதாகவும் கூறினார்.

மயுயி தீ விபத்து குறித்து தன் ஆழ்ந்த அனுதாபங்களை சில நாடகளுக்கு முன் அமெரிக்க ஐக்கிய நாட்டிற்கான திருப்பீடத்தூதருக்கு அனுப்பிய தந்தியில் தெரிவித்திருந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இஞ்ஞாயிறு நண்பகல் மூவேளை செபவுரைக்குப் பின்னரும் தன்  ஆழ்ந்த அனுதாபங்களை வெளியிட்டார்.

மயுயில் இடம்பெற்ற தீவிபத்தால் இதுவரை 93 பேர் உயிரிழந்துள்ளனர்.

மரியன்னையின் விண்ணேற்புவிழாவான இச்செவ்வாய்க்கிழமையன்று கமரூன் நாட்டின் Bafoussam என்னுமிடத்தில் நாட்டிற்கான அமைதி ஊர்வலம் இடம்பெற உள்ளதைப் பற்றிக் குறிப்பிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வன்முறைகளாலும் போராலும் துன்புறும் கமரூன் நாட்டிற்காக அனைவரும் செபிக்குமாறும் அழைப்புவிடுத்தார்.

தன் நண்பகல் மூவேளை ஜெபவுரையின் இறுதியில், உக்ரைன் நாட்டிற்காவும் செபிக்குமாறு மீண்டும் ஒருமுறை விண்ணப்பித்தார் திருத்தந்தை.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

13 August 2023, 14:10