தேடுதல்

இளையோருடன் இரவு நேர வழிபாட்டில் திருத்தந்தை

சந்தித்தல், எழுதல், புறப்படுதல் என்னும் மூன்று கருப்பொருளின் அடிப்படையில் இவ்வழிபாடு, மிகச்சிறப்பான முறையில் இளையோரால் வழிநடத்தப்பட்டது

மெரினா ராஜ் - வத்திக்கான்

உள்ளூர் நேரம் இரவு 8.15 மணிக்கு தேஹோ பூங்காவை வந்தடைந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்,  திறந்த வாகனத்தில் இளையோரிடையே வலம்வந்தார். ஆரவாரத்துடனும் மகிழ்வுடனும் இளையோர் திருத்தந்தையை வரவேற்றனர். அதன்பின் பாடல்களுடன் திருவிழிப்பு வழிபாடு ஆரம்பமானது. 21 வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த 50 இளைஞர்களைக் கொண்ட Ensemble23 என்ற குழுவின் உறுப்பினர்கள் தங்களது இயல்பான நடிப்புத்திறமையினால் அனைவரையும் கவர்ந்தனர்.   ஒரு பெண், மீண்டும் மீண்டும் தன்னைத் துன்புறுத்தும் வாழ்வின் வழக்கத்தில் சிக்கியிருப்பதாகவும்,  கடவுள் தனக்கு விடுக்கும் சவால்களை அனுமதிக்கும் சூழ்நிலைகளையும் தத்ரூபமாக அக்குழுவினர் சித்தரித்தனர். இறைவனுடனான சந்திப்பு அப்பெண்ணின் வாழ்க்கை நிகழ்வுகளின் போக்கை மாற்றுகிறது. வாழ்க்கை படிப்படியாக மீண்டும் மலர்கிறது, அவள் நம்பிக்கையுடனும் மகிழ்ச்சியுடனும் தன் பாவத்திலிருந்து மனமாற்றமடைவதாக அழகாக நடனமாடி வெளிப்படுத்தினர் இளையோர்.

அப்பெண்ணின் நடிப்புத்திறன் கன்னி மரியின் வாழ்க்கையோடு இணைந்து வெளிப்படுத்தப்பட்டது. வானதூதரின் சந்திப்பால் அன்னை மரியாவின் வாழ்க்கை தலைகீழாக மாறி அவரது உறவினரான எலிசபெத்தை சந்தித்து மகிழ்வைப் பகிர்ந்து கொள்வதில் ஆரம்பானதை எடுத்துரைத்தது. சந்தித்தல், எழுதல், புறப்படுதல் என்னும் மூன்று கருப்பொருளின் அடிப்படையில் நடைபெற்ற இவ்வழிபாடு,  மிகச்சிறப்பான முறையில் இளையோரால் வழிநடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து திருத்தந்தையின் உரை ஆரம்பமானது.  திருத்தந்தை தனது உரையை நிறைவு செய்ததைத் தொடர்ந்து திருநற்கருணை ஆராதனை நடைபெற்றது. புகழ்ச்சிப் பாடல்களுடன் பக்தியான முறையில் அனைவரும் இந்நிகழ்வில் பங்கேற்றனர். பங்கேற்ற அனைவருக்கும் சிறப்பான நற்கருணை ஆசீரை அளித்தார் திருத்தந்தை. புகழ்பாடல்கள் மற்றும் ஆராதனையால் சிறப்பு பெற்ற இச்செபவழிபாட்டின் நிறைவிற்குப் பின் திருப்பீடத்தூதரகத்தை உள்ளூர் நேரம் இரவு 10. 30 க்கு வந்தடைந்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.        

மாதத்தின் முதல் சனிக்கிழமையும், உரோம் அன்னை மரியா பெருங்கோவில் திருவிழாவுமான ஆகஸ்ட் 5 அன்று காலை, போர்த்துக்கல் தூய பாத்திமா அன்னை திருத்தலம் சென்று செபமாலை செபித்தும் மாலையில் ஜான் தே பிரிட்டோ பள்ளியில் இயேசு சபை அருள்பணியாளர்களைச் சந்தித்தும், தேஹோ பூங்காவில் இளையோருடன் இரவு நேர செபவழிபாட்டிலும் கலந்து கொண்டு, அந்த நாளை நிறைவு செய்த திருத்தந்தை, திருப்பீடத் தூதரகம் திரும்பி அங்கேயே நித்திரைக்குச் சென்றார். இத்துடன் அவரின் சனிக்கிழமை திருத்தூதுப்பயணத் திட்டங்கள் நிறைவுக்கு வந்தன.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

06 August 2023, 12:23