போர்த்துக்கலில் திருத்தந்தை நான்காம் நாள் பயண நிகழ்வுகள்
மெரினா ராஜ் - வத்திக்கான்
42ஆவது வெளிநாட்டுத் திருப்பயணத்தை போர்த்துக்கல்லில் மேற்கொண்டுவரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அத்திருத்தூதுப் பயணத்தின் நான்காம் நாளை பாத்திமா அன்னையின் திருத்தலத்திற்குச் சென்று விசுவாசிகளோடு இணைந்து செபமாலை செபித்தபின், மீண்டும் லிஸ்பன் வந்து, மாலையில் ஜான் தே பிரிட்டோ பள்ளியில் போர்த்துக்கல் நாட்டில் உள்ள இயேசு சபை அருள்பணியாளர்களைச் சந்தித்தார். அதன் பின் அதே நாளில் இளையோரின் திருவிழிப்புக் கொண்டாட்டத்தில், அதாவது மறுநாள் கொண்டாட்டத்திற்கான தயாரிப்பு நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஜான் தே பிரிட்டோ கல்வி நிறுவனம்
Colégio de São João de Brito என்பது ஒரு இயேசு சபை அருள்பணியாளர்களால் வழிநடத்தப்படும் ஒரு தனியார் போர்த்துகீசியப் பள்ளியாகும். 1940ஆம் ஆண்டின் பிற்பகுதியில் தலைநகரில் ஒரு உறைவிடப் பள்ளியை உருவாக்க எண்ணி ஆரம்பமானது இது. 1947ஆம் ஆண்டில் மாநிலத் தலைவராக இருந்த அருள்தந்தை டோபியாஸ் ஃபெராஸ் என்பவர் அல்மேதா தாஸ் லின்ஹாஸ் தி தோரஸில் உள்ள ஸ்ட்ரோம்ப் குடும்பத்தின் பண்ணையாகவும் பெரிய இல்லமாகவும் இருந்த குயின்தா அலமேதாவை வாங்கினார். 1947 அக்டோபர் 23 இல் இவ்விடம் இயேசு சபை அருள்பணியாளர்கள் தங்குமிடமாக மாறியது. அக்டோபர் 28இல் அதிகாரப்பூர்வமாக நிறுவப்பட்ட இப்பள்ளியானது, 1947ஆம் ஆண்டு ஜூன் மாதம் புனிதராக உயர்த்தப்பட்ட ஜான் டி பிரிட்டோவின் பெயரால் அழைக்கப்படலாயிற்று. புனித இஞ்ஞாசியாரின் கற்பித்தல் மற்றும் ஆன்மீகத்தால் ஈர்க்கப்பட்ட இந்நிறுவனம், பல ஆண்டுகளாக மாணவர்களின் எண்ணிக்கையின் வளர்ச்சியினால் விரிவுபடுத்தப்பட்டு மேம்படுத்தப்பட்டது. 1955 அக்டோபர் 7 இவ்விடத்தின் ஆலயமானது அன்னை மரியாவின் மாசற்ற இருதயத்துக்கு முதுபெரும்தந்தை கர்தினால் மனுவேல் கோன்சால்வ்ஸ் செரெய்ரா அவர்களால் அர்ப்பணிக்கப்பட்டது.
லிஸ்பன் உள்ளூர் நேரம் மாலை 5.45 மணிக்கு இந்திய இலங்கை நேரம் இரவு 10.15 மணிக்கு திருப்பீடத்தூதரகத்திலிருந்து புறப்பட்டு 7.4 கிமீ தூரம் பயணித்து ஜான் தே பிரிட்டோ பள்ளியை வந்தடைந்த திருத்தந்தையை, இயேசு சபை அருள்பணியாளர்கள் மகிழ்வுடன் வரவேற்றனர். அவர்களுடன் ஏறக்குறைய 45 நிமிடங்கள் உரையாடிவிட்டு அங்கிருந்து புறப்பட்டு மீண்டும் திருப்பீடத்தூதரகம் வந்து சேர்ந்தார் திருத்தந்தை பிரான்சிஸ். அங்கேயே இரவு உணவை உண்டபின், லிஸ்பன் உள்ளூர் நேரம் இரவு 8.00 மணிக்கு, அதாவது இந்திய இலங்கை நேரம் நள்ளிரவு 12.30 மணிக்கு திருப்பீடத்தூதரகத்திலிருந்து 11.3 கி.மீ. தூரம் காரில் பயணித்து தேஹோ பூங்காவை வந்தடைந்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மாதத்தின் முதல் சனிக்கிழமையும், உரோம் அன்னை மரியா பெருங்கோவில் திருவிழாவுமான ஆகஸ்ட் 5 அன்று காலை, போர்த்துக்கல் தூய பாத்திமா அன்னை திருத்தலம் சென்று செபமாலை செபித்தும் மாலையில் ஜான் தே பிரிட்டோ பள்ளியில் இயேசு சபை அருள்பணியாளர்களைச் சந்தித்தும், தேஹோ பூங்காவில் இளையோருடன் இரவு நேர செபவழிபாட்டிலும் கலந்து கொண்டு, அந்த நாளை நிறைவு செய்த திருத்தந்தை, திருப்பீடத் தூதரகம் திரும்பி அங்கேயே நித்திரைக்குச் சென்றார். இத்துடன் அவரின் சனிக்கிழமை திருத்தூதுப்பயணத் திட்டங்கள் நிறைவுக்கு வந்தன
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்