தேடுதல்

உலக இளையோர் தினக் கொண்டாட்ட சிறப்புத் திருப்பலி

‘‘2027ஆம் ஆண்டு உலக இளையோர் தினக் கொண்டாட்டமானது‘‘ தென் கொரியாவின் சியோலில் சிறப்பிக்கப்பட உள்ளதாக அறிவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மெரினா ராஜ் - வத்திக்கான்

ஆகஸ்ட் 6, போர்த்துக்கல் திருத்தூதுப் பயணத்தின் இறுதி நாளாகிய ஞாயிற்றுக்கிழமையன்று, உள்ளூர் நேரம் காலை 8 மணிக்கு இந்திய இலங்கை நேரம் நண்பகல் 12.30 மணிக்கு திருப்பீடத்தூதரகத்திலிருந்து புறப்பட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 11.3 கிமீ தூரம் காரில் பயணித்து மீண்டும் தேஹோ பூங்காவை வந்தடைந்தார். பூங்காவின் முகப்பிலிருந்து உள்பகுதி வரை திறந்த காரில் வலம் வந்து இளையோரை வாழ்த்தினார். அதன்பின் திருப்பலி உடைகளை அணிந்து உள்ளூர் நேரம் காலை 9.00 மணிக்கு, இந்திய இலங்கை நேரம் பிற்பகல் 1.30 மணிக்கு உலக இளையோர் தினக் கொண்டாட்டத்திற்கான சிறப்புத் திருப்பலியை நிறைவேற்றினார் திருத்தந்தை பிரான்சிஸ். இயேசுவின் உருமாற்றப் பெருவிழாவை திருஅவை சிறப்பிக்கும் இந்நாளில், போர்த்துக்கீசிய மொழியில் திருப்பலியானது நிறைவேற்றப்பட்டது. இலத்தீன் வழிபாட்டுமுறை முதுபெரும்தந்தை அவர்களின் வரவேற்புடன் ஆரம்பமான இத்திருப்பலியில் முதல் வாசகம் இஸ்பானிய மொழியிலும், இரண்டாம் வாசகம் ஆங்கில மொழியிலும்,  நற்செய்தி வாசகம், போர்த்துக்கீசிய மொழியிலும் வாசிக்கப்பட்டன. நற்செய்தி வாசகத்தைத் தொடர்ந்து திருத்தந்தையின் மறையுரை ஆரம்பமானது.  திருத்தந்தையின் மறையுரையை அடுத்து நம்பிக்கையாளர் மன்றாட்டுக்கள் போர்த்துக்கீசியம், சீனம், போலந்து,  ஆங்கிலம், அரபு, ஜெர்மானியம், இத்தாலியம் ஆகிய மொழிகளில் எடுத்துரைக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து திருப்பலியின் காணிக்கைப் பவனி மற்றும் நற்கருணை வழிபாட்டுக் கொண்டாட்டங்கள் நடைபெற்றன.  பல இலட்சக்கணக்கான மக்களும் இளையோரும் பங்கேற்ற இத்திருப்பலியின் நிறைவில் அனைவருக்கும் தன் சிறப்பு ஆசீரை அளித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

திருப்பலியின் நிறைவில்,  பொது நிலையினர், குடும்பம், மற்றும் வாழ்வு திருப்பீடத்துறையின் தலைவர் கர்தினால் கெவின் ஜோசப் ஃபாரல் அவர்கள் திருத்தந்தையை வாழ்த்தி நன்றி தெரிவித்தார். அதன்பின் திருத்தந்தை உலக இளையோர் தினத்திற்கான சிலுவைகளை ஐந்து கண்டங்களைச் சேர்ந்த இளையோர்ப் பிரதிநிதிகளிடம் ஒப்படைத்தார். அதன்பின் அடுத்த உலக இளையோர் தினக் கொண்டாட்டத்திற்கான இடத்தையும் ஆண்டையும் அறிவித்தார்.  2025ஆம் ஆண்டு இளையோர் யூபிலி தினக் கொண்டாட்டங்கள் உரோமிலும், 2027ஆம் ஆண்டிற்கான உலக இளையோர் தினக் கொண்டாட்டங்கள் தென் கொரியாவின் சியோலிலும் நடைபெற உள்ளதாக அறிவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ். 

அதனைத்தொடர்ந்து திருத்தந்தையின் ஞாயிறு மூவேளை செப உரை நடைபெற்றது. திருப்பலியில் பங்கேற்ற அனைவரையும் வாழ்த்தி நன்றி கூறி  விடைபெற்று, அங்கிருந்து புறப்பட்டு திருப்பீடத்தூதரகம் வந்து சேர்ந்தார் திருத்தந்தை பிரான்சிஸ். மதிய உணவிற்குப் பின் சற்று இளைப்பாறினார் திருத்தந்தை.

தனது 42ஆவது திருத்தூதுப் பயணத்தின் இறுதி நாள் காலையில்  உலக இளையோர் தினக் கொண்டாட்ட சிறப்பு திருப்பலி நிறைவேற்றிய திருத்தந்தை, மாலையில் உலக இளையோர் தினக் கொண்டாட்டங்களுக்கு உதவிய தன்னார்வலர்களைச் சந்தித்து உரையாற்ற உள்ளார்.

லிஸ்பன் உள்ளூர் நேரம் மாலை 5.30 மணிக்கு திருப்பீடத்தூதரகத்திலிருந்து புறப்பட உள்ள திருத்தந்தை உரோம் உள்ளூர் நேரம் இரவு 10.15 மணிக்கு அதாவது இந்திய இலங்கை நேரம் 1.45 மணிக்கு உரோம் பியுமிச்சினோ பன்னாட்டு விமான நிலையம் வந்தடைவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.   

 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

06 August 2023, 12:41