உக்ரைனை நினைத்து வருந்துகிறேன் - திருத்தந்தை
மெரினா ராஜ் - வத்திக்கான்
ஆகஸ்ட் 6 ஞாயிற்றுக்கிழமை 2023ஆம் ஆண்டிற்கான உலக இளையோர் தினக் கொண்டாட்ட சிறப்புத் திருப்பலியில் ஏறக்குறைய 15 இலட்சம் மக்கள் பங்கேற்றனர். 700 ஆயர்கள், 10000க்கும் மேற்பட்ட அருள்பணியாளர்கள் பங்கேற்று சிறப்பித்தனர். திருப்பலியின் நிறைவில் நண்பகல் மூவேளை செப உரையின் போது உலக அமைதிக்காகவும் உக்ரைன் நாட்டிற்காகவும் செபிக்க அழைப்பு விடுத்தார் திருத்தந்தை. தன் உள்ளத்தில் அமைதிக்கான கனவு ஒன்று இருப்பதாக எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அமைதியில் வாழ்ந்து அமைதியைக் கட்டியெழுப்பும் மற்றும் அமைதிக்காக ஜெபிக்கும் இளைஞர்களைத் தான் கனவு காண்பதாகவும் எடுத்துரைத்தார். மோதல்கள் மற்றும் போர்கள் காரணமாக உலக இளையோர் தினக் கொண்டாட்டத்தில் பங்கேற்க முடியாத அனைவரையும் நினைவுகூர்ந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மிகவும் பாதிக்கப்படும் உக்ரைனை நினைத்து வருந்துவதாகவும் எடுத்துரைத்தார்.
தனது 42 ஆவது திருத்தூதுப்பயணத்தில் 11 உரைகளை ஆற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஒவ்வோர் உரையிலும் நன்றி என்ற வார்த்தையை அடிக்கடி உச்சரித்தார். போர்த்துகீசிய மொழியில் "ஒப்ரிகாதோ ("Obrigado"), " அதாவது "நன்றி" என்ற வார்த்தை நாம் பெற்றுக்கொண்ட நன்மைகளுக்கு நன்றியை மட்டுமல்லாது நல்லதைத் திருப்பிச் செலுத்துவதற்கான விருப்பத்தையும் வெளிப்படுத்துகிறது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்