தேடுதல்

இளையோர் சிலுவைப்பாதையில் திருத்தந்தை

சிலுவைப்பாதையானது கிறிஸ்து அனுபவித்த துன்பங்களை நமது வாழ்வின் துன்பங்களுடன் ஒப்பிட்டு நிகழ்த்தப்பட்டு, இயேசுவின் பலம் நமது பலவீனங்களில் நமது வாழ்வை எப்படி மாற்ற வேண்டும் என்ற அடிப்படையில் இளையோரால் மிகச்சிறப்பாக நிகழ்த்தப்பட்டது.

மெரினா ராஜ் - வத்திக்கான்

ஆகஸ்ட் 4 வெள்ளிக்கிழமை செராபினா பங்குத்தளத்தில் பிறரன்புப் பணிகளில் ஈடுபடுவோரைச் சந்தித்து உரையாடிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மாலையில் மன்னர் எட்வர்ட் பெயரினாலான பூங்காவில் இளையோருடன் சேர்ந்து சிலுவைப்பாதை வழிபாட்டில் பங்கேற்று லிஸ்பனில் தன் மூன்றாம் நாள் பயணத்திட்டங்களை நிறைவுச் செய்தார்.

லிஸ்பன் உள்ளூர் நேரம் மாலை 5மணிக்கு திருப்பீடத்தூதரகத்தில் இருந்து புறப்பட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 600 மீ. தூரம் திறந்த வாகனத்தில் வலம்வந்தபடியே இளையோரை சந்தித்தார். ஆகஸ்ட் மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை உள்ளூர் நேரம் மாலை 6.00 மணிக்கு, இந்திய இலங்கை நேரம் இரவு 10 மணி 30 நிமிடங்களுக்கு பூங்காவில் சிலுவைப்பாதை வழிபாடானது, திருத்தந்தையின் உரையைத் தொடர்ந்து ஆரம்பமானது.

இளையோர் சிலுவைப்பாதை

உலக இளையோர் தினக் கொண்டாட்டங்களின் சிறப்பு அம்சங்களுள் ஒன்றாகத் திகழ்வது இளையோர் சிலுவைப் பாதை. இச்சிலுவைப்பாதையானது கிறிஸ்து அனுபவித்த துன்பங்களை நமது வாழ்வின் துன்பங்களுடன் ஒப்பிட்டு நிகழ்த்தப்பட்டு, இயேசுவின் பலம் நமது பலவீனங்களில் நமது வாழ்வை எப்படி மாற்ற வேண்டும் என்ற அடிப்படையில் இளையோரால் மிகச்சிறப்பாக நிகழ்த்தப்பட்டது. மற்றவர்களின் வாழ்க்கைக்காகத் தனது உயிரைக் கொடுத்த இயேசுவின் தாராளமான அன்பு நம்மில் வெளிப்பட,  அதைக் குறித்து சிந்திக்க ஒவ்வொருவருக்கும் அழைப்புவிடுத்தது. இன்றைய இளையோரின் வாழ்க்கையில் இருக்கும் காயங்கள் மற்றும் பலவீனங்களான  வறுமை, தனிமை, சகிப்புத்தன்மை, இயற்கையை அழித்தல் மற்றும் சார்ந்திருத்தல்  உட்பட பல கருத்துக்கள் இச்சிலுவைப்பாதையில் வெளிப்படுத்தப்பட்டன. நவீன பலவீனங்களை சிலுவையின் 14 நிலையங்களுடன் இணைத்து, ஆழ்ந்த செபச்சூழலை மக்களிடத்தில் இது உருவாக்கியது. ஒவ்வொருவரும் இயேசுவிடமிருந்து பெறும் வலிமையினாலும் உந்துதலினாலும், ஒளியிலும் இருளிலும் தங்கள் வாழ்க்கையினை அடையாளம் காண வலியுறுத்தப்பட்டனர்.

சிலுவைப்பாதையின் ஒவ்வொரு நிலையத்தையும் குறிக்கும் தொடர்ச்சியான படங்கள், இசை, நடனம், கருத்தாழமிக்க செய்கைகள் என அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்த இச்சிலுவைப்பாதையானது, இயேசு சபை அருள்பணியாளரான நுனோ பிராங்கோ என்பவர் தலைமையில் உருவாக்கப்பட்டு வழிநடத்தப்பட்டது. போர்த்துக்கீசியம், இஸ்பானியம், இத்தாலியம், ஆங்கிலம், பிரெஞ்சு என பல மொழிகளில் நிகழ்த்தப்பட்ட இச்சிலுவைப்பாதை நிகழ்வில் இளையோர் தங்களது வாழ்வின் இன்னல், நெருக்கடி, துன்பம், நம்பிக்கையின்மை, வெறுப்பு, கோபம், பகைமை, அன்பு, மகிழ்ச்சி, என பல்வேறு உணர்வுகளை வெளிப்படுத்தினர். சிலுவைப்பாதையினை  மிகச்சிறப்பாக நிகழ்த்திய இளையோர் ஒவ்வொருவரையும் தனித்தனியாக கரங்களை குலுக்கி வாழ்த்து தெரிவித்தார் திருத்தந்தை. கண்களில் ஆனந்தக் கண்ணீர் நிறைய, இளையோர் திருத்தந்தையின் வாழ்த்தையும் ஆசீரையும் பெற்றது கூடியிருந்த அனைவரையும் உணர்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தியது. இறுதிப்பாடலுடன் சிலுவைப்பாதை நிகழ்வானது இனிதே நிறைவடைய திருத்தந்தை இளையோரை வாழ்த்தி அங்கிருந்து  விடைபெற்றார். திருப்பீடத்தூதரகம் வந்தடைந்த திருத்தந்தை, இரவு உணவுக்குப் பின் நித்திரைக்குச் சென்றார். தனது 42ஆவது வெளிநாட்டுத் திருத்தூதுப்பயணத்தின் மூன்றாம் நாளை, போர்த்துக்கல்லில் பிறரன்புப் பணிகள் ஆற்றுவோருடன் சந்திப்பு, இளையோருடன் மதிய உணவு, சிலுவைப்பாதை வழிபாடு ஆகியவற்றில் பங்கேற்று நிறைவு செய்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

05 August 2023, 11:51