தேடுதல்

பாத்திமா அன்னை திருத்தலத்தில் திருத்தந்தை

1917 இல் லூசியா (10 வயது), பிரான்செஸ்கோ (9 வயது) மற்றும் அவரது சிறிய சகோதரி ஜெசிந்தா (7 வயது) ஆகிய மூன்று சிறாருக்குக் கன்னி மரியா காட்சியளித்ததன் பலனாகப் புகழ்பெற்று விளங்குகின்றது போர்த்துக்கல் தூய பாத்திமா அன்னை ஆலயம்.

மெரினா ராஜ் - வத்திக்கான்

ஆகஸ்ட் 5 சனிக்கிழமை காலை லிஸ்பன் உள்ளூர் நேரம் காலை 5.45 மணிக்கு அதாவது இந்திய இலங்கை நேரம் காலை 10.15 மணிக்கு திருப்பீடத்தூதரகத்தில் திருப்பலி நிறைவேற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அங்கிருந்து புறப்பட்டு போர்த்துக்கலின் பாத்திமா அன்னை திருத்தலம் நோக்கிப் பயணமானார். லிஸ்பன் உள்ளூர்  நேரம், 7.45 மணிக்கு லிஸ்பனின் Figo Maduro விமானதளத்தை அடைந்த திருத்தந்தை, ஹெலிகாப்டரில் 103 கி.மீ. தூரத்தை 50 நிமிடங்களில் கடந்து பாத்திமா நகரத்தை வந்தடைந்தார். விமான நிலையத்தில் Leiria-Fatima  மறைமாவட்ட ஆயர், பாத்திமா நகர மேயர் ஆகியோர் திருத்தந்தையை வரவேற்றனர்.   

2021ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, போர்த்துக்கலின் பாத்திமா நகரின் மக்கள்தொகை ஏறக்குறைய 13,212 ஆகும். தலைநகர் லிஸ்பனுக்கு வடக்கே 120 கிலோமீட்டர் தொலைவில் போர்த்துக்கலின் மையத்தில், Ourem என்ற நகராட்சியில் உள்ள பாத்திமா என்பது ஓர் அரபுப் பெயராகும். 1917இல் லூசியா (10 வயது), பிரான்செஸ்கோ (9 வயது) மற்றும் அவரது சிறிய சகோதரி ஜெசிந்தா (7 வயது) ஆகிய மூன்று சிறாருக்குக் கன்னி மரியா காட்சியளித்ததன் பலனால் புகழ்பெற்று விளங்குகின்றது பாத்திமா நகர். கோவா தா இரியா" என்று அழைக்கப்படும் இடத்தில் அன்னை மரியா காட்சியளித்ததனால் அங்கு செபிப்பத்தற்கான ஓர் இடமாக அன்னை மரியாவுக்கு ஆலயம் ஒன்று எழுப்பப்பட்டது. வடக்கு முனையில் பசிலிக்கா "நோசா சென்ஹோரா தோ கார்மோ" என்ற ஆன்மிகப் பயிற்சிக்கான இல்லம் உள்ளது. எதிர் முனையில் திருத்தல முதல்வர் மற்றும் பொறுப்பில் இருக்கும் நிர்வாக அதிகாரிகள் தங்கும் "நோசா சென்ஹோரா தாஸ் டோரஸ்” என்னும் இல்லம் உள்ளது.

திருத்தலத்தின் இடதுபுறத்தில் "கேபெலின்ஹா" என்னும் சிற்றாலயம்  உள்ளது. 1919 இல் கட்டப்பட்ட இச்சிற்றாலயமானது அன்னை மரியா காட்சியளித்த இடத்தில் எழுப்பப்பட்டுள்ளது. இங்கு வைக்கப்பட்டுள்ள பிரேசில் நாட்டு தேவதாரு மரத்தால் செய்யப்பட்ட 1.10 மீ உயரம் கொண்ட அன்னை மரியாவின் திருவுருவச் சிலைக்கு 1920ஆம் ஆண்டு முதல் திருப்பயணிகளால் வணக்கம் செலுத்தப்பட்டு வருகின்றது. இத்திருவுருவச் சிலையானது, 1984  மார்ச் 25 அன்று உரோம் தூய பேதுரு பெருங்கோவிலுக்கு, யூபிலி ஆண்டை முன்னிட்டுக் கொண்டுவரப்பட்டது. பாத்திமா அன்னை பெயரில் அளவற்ற நம்பிக்கையும் பாசமும் கொண்டிருந்த அப்போதைய திருத்தந்தை புனித இரண்டாம் ஜான் பால் அவர்கள், அப்போது மனிதகுலத்தை அன்னை மரியாவின் மாசற்ற இதயத்திற்கு அர்ப்பணித்தார்.

பாத்திமா அன்னையின் திருத்தலத்தையும் பிற அலுவலகங்களையும் இணைக்கும் தூண்களின் வரிசையில் ஹங்கேரிய கத்தோலிக்கர்களால் வழங்கப்பட்ட சிலுவைப்பாதையின் 14 நிலைகளும், ஹங்கேரியின் பாதுகாவலரான புனித ஸ்தேவானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு சிற்றாலயமும் உள்ளன. 1928இல் கட்டப்பட்ட பாத்திமா அன்னையின் திருத்தலத்தின் உள்பகுதியில் லூசியா, ஜெசிந்தா, பிரான்சிஸ்கோ ஆகியோரின் கல்லறைகளும் உள்ளன. 1989ஆம் ஆண்டில், பிரான்சிஸ்கோ மற்றும் ஜெசிந்தாவின் புனிதத்துவ வாழ்க்கை ஏற்கப்பட்டு 2000 மே 13, அன்று அருளாளர்களாக அறிவிக்கப்பட்டனர், பின்னர் 2017 மே 13, இல் புனிதர்களாக அறிவிக்கப்பட்டனர். 2005 பிப்ரவரி 13இல் இறந்த லூசியா, 2023, அதாவது இவ்வாண்டு ஜூன் 22 அன்று, அருளாளராக அறிவிக்கப்படுவதற்கு முந்தைய படியான, ‘வணக்கத்துக்குரியவராக’ அறிவிக்கப்பட்டார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

05 August 2023, 11:55