பாத்திமா அன்னைமுன் திருத்தந்தையின் செபம்
மெரினா ராஜ் - வத்திக்கான்
பாத்திமா அன்னைமுன் திருத்தந்தையின் செபம்
ஓ தூய மரியே, இதோ நாங்கள் உம் முன் நிற்கிறோம். நீர் ஒரு தாயாக எங்களைக் கவனித்துக் கொள்கிறீர். எங்களின் துயரங்களையும், போராட்டங்களையும் நீர் அறிவீர். நாங்கள் உம்மை நோக்கி எம் கண்களை உயர்த்துகிறோம், உமது அன்பான இதயத்தில் எங்களை ஒப்படைக்கிறோம்.
நாசரேத்தூரில் வானதூதர் உம்மைச் சந்தித்தபோது பயத்தையும், பெத்லகேமில் தங்குமிடம் இல்லாது தவித்தபோது அச்சத்தையும், கோவிலில் இயேசுவை இழந்தபோது வேதனையையும் அனுபவித்தீர். அச்சங்களும் பயங்களும் கேள்விகளும் உம் மனதிலும் நிறைந்து இருந்தன. ஆயினும்கூட, இந்த சோதனைகளில் நீர் தைரியத்துடனும் துணிவுடனும் இருந்தீர். எல்லாவற்றையும் கடவுளிடம் ஒப்படைத்தீர். பயத்திற்கு அன்புடனும், அச்சத்திற்கு அக்கறையுடனும், துன்பத்திற்கு தாராளமான மனத்துடனும் பதிலளித்தீர். வாழ்வின் முக்கியமான தருணங்களில், நீர் ஒருபோதும் விட்டுவிடாது முன்முயற்சி எடுத்து செயலாற்றினீர். விடாமுயற்சியுடன் எலிசபெத்தை சந்தித்தீர், கானா ஊர் திருமண விருந்தில் இயேசுவின் இதயக் கதவைத் தட்டினீர், மேல் அறையில் சீடர்களை ஒற்றுமையாக வைத்திருந்தீர், கல்வாரியில் ஒரு துன்ப வாள் உம் ஆன்மாவைத் துளைத்த போதும் நீர் ஒரு தாழ்ச்சியுள்ள வலிமையான பெண்ணாக, துக்கமான இரவையும் பாஸ்கா நம்பிக்கையுடன் ஒளிரச் செய்தீர்.
இப்போது, நீர் எம்மைப் பார்க்கின்றீர் எங்களுடனும் எங்களுக்காகவும் துன்பப்படுகிறீர், எங்கள் பிரச்சனைகள் உம் இதயத்தை நகர்த்துகின்றன, அவை அனைத்தையும் நாங்கள் உங்களுக்கு கையளிக்கின்றோம். அநீதியால் சுருக்கப்பட்டு, ஆயுதங்களால் அழிந்துபோகும் இக்காலத்தில், எங்களுக்காக மீண்டும் ஒருமுறை முன்முயற்சி எடும். அமைதியின் பாதையில் இருந்து விலகி, மனித சகோதரத்துவ உணர்வுடன் இல்லத்தில் ஒன்றித்திருப்பதையும் இழந்துவிட்ட மனித குடும்பமாகிய எம்மீது உமது தாய்க்குரிய பார்வையை செலுத்தும். குழப்ப மனமுடைய எங்களுக்காகவும் நாங்கள் வாழ்கின்ற உலகிற்காகவும் பரிந்து பேசும். இதனால் நாங்கள் வாழ்கின்ற வாழ்க்கையை வரவேற்கவும், போரை நிராகரிக்கவும், துன்பப்படுபவர்களைக் கவனித்து, படைப்பைப் பாதுகாக்கவும் அருள்தாரும். உமது மாசற்ற இதயத்தில் அடைக்கலம் தேடி உம்மிடம் திரும்புகிறோம் இரக்கத்தின் தாயே. உமது இரக்கத்திற்காக வேண்டிக்கொள்கிறோம், அமைதியின் அரசியே அமைதிக்காக செபிக்கின்றோம். வெறுப்பை வளர்த்து, மோதல்களைத் தூண்டுபவர்களின் ஆன்மாக்களையும், போர் பிரச்சனைகளைத் தீர்க்கும் என்று நம்புபவர்களின் ஆன்மாக்களையும் மாற்றியருளும். கடவுளை அறியாதவர்கள், அவரை விட்டு வெகு தொலைவில் இருப்பவர்களின் இதயங்களைத் தொட அருள்புரியும். தனிமையில் இருப்பவர்களுக்கு உதவும், நோயுற்றவர்களைத் தாங்கியருளும், மனமுடைந்தவர்களுக்கு ஆறுதல் அளித்தருளும்.
புனித ஜெபமாலையின் அரசியே உம்முடன் மேற்கொண்ட இந்த உரையாடலில், தாய்க்குரிய அன்போடு நீர் எமக்கு வலியுறுத்தியவற்றை நினைவில் கொள்கின்றோம். எத்தனை முறை மற்ற காரியங்களால் கவரப்பட்டும், எங்கள் சொந்த தேவைகளால் ஈர்க்கப்பட்டும் உமது குரலுக்கு, அழைப்பிற்கு செவிகொடாமல் இருந்திருக்கின்றோம். இருப்பினும், நீர் எங்களை அன்பு செய்கின்றீர். எங்களை அன்பு செய்வதில் நீர் ஒரு போதும் தளர்வடையமாட்டீர், எங்கள் வாழ்வில் முதல் இடம் இறைவனுக்கே என்பதை மீண்டும் ஒருமுறை நினைவூட்டும், மனமாற்றம் அடைய எங்களுக்கு உதவும். திருஅவை, சித்தாந்தக் கருத்துக்கள் மற்றும் திருஅவையின் பிள்ளைகளால் பாதிக்கப்படும் போதும், உலக மக்களால் சோதிக்கப்படும் போதும் திருஅவையின் ஒற்றுமையைப் பாதுகாக்க உதவும். சிறியவராக நீர் இருந்த போதே கடவுள் உன்னில் பெரிய காரியங்களைச் செய்தார். மனத்தாழ்ச்சியும், மென்மையும் கடவுள் இதயத்தின் கொடைகளைத் திறக்கும் திறவுகோல்கள் என்பதையும், அவருடைய ஆவி உலகத்தின் மீது ஊற்றப்பட அவை அனுமதிக்கின்றன என்பதையும் எமக்கு நினைவூட்டும், . சாதாரணமானவர்கள், சிறியவர்கள், நம்பிக்கையுள்ளவர்கள், அன்பு செய்பவர்கள், அனைவருக்கும் ஆறுதல் அளித்தருளும், அவர்கள் செய்யும் பணியில் ஊக்கம் அளித்தருளும், எம்மிடம் அப்போஸ்தலிக்க பேரார்வத்தைத் தூண்டி, இளையோரைக் கரம்பிடித்து வழிநடத்தும். மகத்தான மற்றும் அற்புதமான கனவுகளை நிறைவேற்றுவதற்கான விருப்பத்தை அவர்களில் பிரகாசமாக எரியச் செய்யும்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்