தன்னார்வலர்களே, உங்கள் நற்பணியின் பயணம் தொடரட்டும்!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
ஆகஸ்ட் 6, இஞ்ஞாயிறன்று, போர்த்துக்கல்லின் தலைநகர் லிஸ்பனில் உலக இளையோர் தின தன்னார்வலர்களுடன் நிகழ்த்த சந்திப்பில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கிய அருளுரை.
அன்பு நண்பர்களே, அமைதியாக, எவ்வித சலசலப்பும் இல்லாமல், பெயரையும் புகழையும் தேடாமல் இவ்விளையோர் தின வெற்றிக்காக மாதக்கணக்கில் நீங்கள் உழைத்திருக்கிறீர்கள். இதுவே, இயேசு நம்மோடு வாழ்கிறார், அவர் நம்மைத் தனியே விட்டுவிடவில்லை, அதனால் நாம் ஒருபோதும் அவரை அன்புகூர்வதை நிறுத்தமாட்டோம் என்று ஒன்றிணைந்த மனநிலையில் நம்மைப் பாட வைத்திருக்கின்றது.
எடுத்துக்காட்டாகத் திகழ்கிறீர்கள்
அதுமட்டுமன்று, நீங்கள் அனைவரும் ஒரு குழுவாக இணைந்து உழைத்திருக்கிறீர்கள். அதனால் எல்லோருக்கும் நீங்கள் ஒரு எடுத்துக்காட்டாகத் திகழ்கிறீர்கள். உங்களின் அயராத உழைப்பு உங்களின் நற்பணிகளுக்குச் சான்று பகர்ந்துள்ளது. "இவ்வாறு பாடுபட்டு உழைத்து நலிவுற்றோர்க்குத் துணை நிற்க வேண்டுமென்று அனைத்திலும் உங்களுக்கு வழிகாட்டினேன். அதோடு, பெற்றுக் கொள்வதைவிட கொடுத்தலே பேறுடைமை என்று ஆண்டவர் இயேசு கூறியதை நினைவு கூருங்கள் என்றும் கூறினேன்.” (திப 20:35) என்ற பவுலடியாரின் வார்த்தைகளுக்குச் சான்றாகி நிற்கின்றீர்கள்.
தனது உறவினரான எலிசபெத்தை சந்தித்து வயது முதிர்ந்த அவருக்கு உதவும்பொருட்டு 'மரியா புறப்பட்டு விரைந்து சென்றார்' (லுக் 1:39) என்பதை அவரின் வாழ்வில் காண்கின்றோம். மரியா மட்டுமல்ல, சக்கேயு, பெண்கள் மற்றும் சீடர்கள் அனைவருமே பிறருக்கு உதவிசெய்ய விரைந்து சென்றவர்கள்தாம். எல்லாவற்றிக்கும் மேலாக எருசலேமின் கல்வாரி மலையில் நமதாண்டவர் இயேசுவும் நமக்காகத் தன்னை வழங்கி நாம் மீட்படைய உதவியவர்தான். பிறரை அன்புகூரும் யாரும் வெறுமனே இருக்கமாட்டார்கள், மாறாக, அவர்களுக்கு உதவி செய்ய எழுந்து விரைந்து செல்வார்கள்.
அவ்வாறே, நீங்களும், "மானிடமகன் தொண்டு ஏற்பதற்கு அல்ல, மாறாகத் தொண்டு ஆற்றுவதற்கும் பலருடைய மீட்புக்கு ஈடாகத் தம் உயிரைக் கொடுப்பதற்கும் வந்தார்” (மாற் 10:45) என்று கூறி பணியாற்றிய இயேசுவின் வழியில், முன்னோக்கிச் சென்று உங்களின் சகோதரர் சகோதரிகளுக்கு உதவியிருக்கின்றீர்கள்.
கிறிஸ்துவுடனான சந்திப்பே முக்கியமானது
கிறிஸ்துவை சந்திப்பதே மிக முக்கியமான சந்திப்பு என்பதை நீங்கள் எங்களுக்கு நினைவூட்டி இருக்கின்றீர்கள். ஆம், இதுவே வாழ்க்கையை முன்னோக்கி நகர்த்துகிறது. ஒவ்வொரு நாளும் இயேசுவோடு தனிப்பட்ட சந்திப்பை புதுப்பித்தலே கிறிஸ்தவ வாழ்வின் இதயமாகத் திகழ்கின்றது. இயேசுவுக்காகப் பணிபுரிய ‘ஆம்’ என்று சொல்லும்போது அது நம் வாழ்வையே மாற்றுகின்றது. அதையே நாம் பிறரிடத்திலும் கூறும்போது அது மிகுந்த பயனைத் தருகின்றது. நாம் நம் இதயத்தை பெரிதாக விரிவுபடுத்த வேண்டும். அன்பின் பணிகளுக்காக நம் இதயங்களை திறப்பதன் வழியாகத்தான் அவற்றை நாம் விரிவுபடுத்த முடியும். இந்த வழியில் நாம் செயல்படும்போது எல்லாமே நலம் தருவதாக அமையும். நீங்கள் அனைவரும் ஒவ்வொருவரையும் நோக்கி, ‘நான் ஒரு புனிதராக வேண்டும்’ என்று குரலெழுப்பி ஆர்ப்பரித்தீர்கள். நீங்கள் சொல்வது சரிதான், ஏனென்றால் நம் வாழ்வின் இறுதியில் அது மட்டுமே கணக்கிடப்படும், அதுவே நம்மை மகிழ்ச்சியடையச் செய்யும். எனவே, நாம் மீண்டும் ஒருமுறை, ‘நான் புனிதராக விரும்புகின்றேன்’ என்று இப்போது கூறுவோம்.
இந்நாட்களில் நீங்கள் இருவிதமான சந்திப்புக்களை அதாவது, இயேசுவுடனும் பிறருடனும் எதிர்கொண்டதாக இங்கே கூறினீர்கள். இது முக்கியமானது. இயேசுவுடனான சந்திப்பு என்பது ஒரு தனிப்பட்ட மற்றும் தனித்துவமான தருணமாக அமைகிறது. இதனை ஒரு குறிப்பிட்ட நிலை வரை மட்டுமே நம்மால் விவரிக்கப்பட முடியும். ஆனால், இச்சந்திப்பு என்பது எப்போதும் மற்றவர்களுடன் மேற்கொண்ட பயணத்தின் வழியாகவும், மற்றவர்களின் பரிந்துரையின் வழியாகவும் நிகழ்கிறது.எனவே, நீங்கள் கடந்து வந்த பாதையில் தொடர்ந்து செல்லுங்கள். அப்பொழுதுதான், இந்த உலக இளையோர் தினத்தின் தொடர்பயணம் எதிர்வரும் நாள்களிலும் தொடரும். மேலும் இல்லத்திலும், பங்குத்தளத்திலும், பள்ளியிலும் மற்றும் பல்கலைக்கழகத்திலும், மற்றவர்களுடன் குழுவாகப் பயணம் மேற்கொண்டு, எப்போதும் இயேசுவுக்குச் சான்று பகர்ந்திடுங்கள்.
தொடரட்டும் உங்கள் நற்பணியின் பயணம்!
தொடருங்கள் உங்களின் இந்தச் சேவையின் பயணத்தை. அன்பால் உந்தப்படுங்கள். உங்களின் உலக இளைஞர் தின சேவை நன்மையின் பலபடிகளில் முதன்மையானதாக அமையட்டும். இத்தகைய உங்கள் சேவையின் பயணமானது ஒவ்வொருமுறையும் உங்களை வாழ்வின் உயரத்திற்குக் கொண்டு செல்வதுடன் நீங்கள் கடவுளுக்கு மிகவும் நெருக்கமாகவும் கொண்டுசெல்லப்படுவீர்கள். அப்போது உங்கள் வாழ்வின் பாதையை சிறந்ததொரு கண்ணோட்டத்துடன் நீங்கள் பார்க்க முடியும். உங்கள் அனைவருக்கும் இறையாசீர்!
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்