தேடுதல்

ஆறாம் பவுல் அரங்கத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் ஆறாம் பவுல் அரங்கத்தில் திருத்தந்தை பிரான்சிஸ்  (ANSA)

வரவேற்கும் உள்ளம் படைத்தவர்களாக நம் வாழ்வு மாற வேண்டும்

நற்கருணை இயேசுவின் சீடர்கள் சபையானது 1923 ஆம் ஆண்டு அக்டோபர் 4 ஆம் தேதி ஆயர் ரஃபேல்லோ தெல்லே நோச்சே மற்றும் லிண்டா மச்சினா, சில்வியா தி சோமா என்னும் இரு துணிவான இளம்பெண்களால் தொடங்கப்பட்டது.

மெரினா ராஜ் – வத்திக்கான்

திறந்த மற்றும் அகலமான பாத்திரங்கள் போன்று அனைவரையும் வரவேற்கும் உள்ளம் கொண்டவர்களாகவும், கடவுளின் இதயத்திற்கு முன் அனைவரையும் கொண்டு வந்து சேர்ப்பவர்களாகவும் இருக்க அழைப்புவிடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆகஸ்ட் 25 வெள்ளிக்கிழமை நற்கருணை இயேசுவின் சீடர்கள் சபையின் நூற்றாண்டை முன்னிட்டு அச்சபையின் அருள்சகோதரிகளை வத்திக்கானில் சந்தித்தபோது இவ்வாறு கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சபையை உருவாக்கிய துணிவான பெண்களின் உண்மையான செபமானது அக்காலத்தில் நிலவிய அனைத்து எதிர்பார்ப்புகளையும் தாண்டி பொருளாதார, கலாச்சார மற்றும் ஆன்மிக மீட்பு பணிகளை மேற்கொள்ளவும் ஊக்குவிக்கவும் வழிவகுத்தது என்றும் கூறினார்.

1923 ஆம் ஆண்டு அக்டோபர் 4 ஆம் தேதி ஆயர் ரஃபேல்லோ தெல்லே நோச்சே மற்றும் லிண்டா மச்சினா, சில்வியா தி சோமா என்னும் இரு துணிவான இளம்பெண்களால் தொடங்கப்பட்ட இச்சபையின் நூற்றாண்டு விழாவையொட்டி திருத்தந்தையைக் காணவந்த அச்சபையின் ஏறக்குறைய 2600 அருள்சகோதரிகள் தங்கள் வாழ்க்கையின் மையமாக நற்கருணையைக் கொண்டிருப்பதை எடுத்துரைத்து வாழ்த்தினார் திருத்தந்தை.

அன்பின் புனிதம், ஒற்றுமையின் அடையாளம், நற்செயல்களின் பிணைப்பு என்று இரண்டாம் வத்திக்கான் சங்கம் வலியுறுத்தும் கருத்துக்களை நினைவுகூர்ந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அன்பு, ஒற்றுமை மற்றும் பிறரன்புச் செயல்கள் பற்றியும் அவர்களுக்கு விளக்கினார்.

மென்மை என்பது கடவுளின் குணம்

அன்பு, ஒற்றுமை, இரக்கம் என்பது வழிபடுதல், பணியாற்றுதல், பழுதுபார்த்தல் அதாவது மென்மையால் நம்மை நிரப்புதல் என்று கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மென்மை என்பது கடவுளின் குணாதிசயங்களில் ஒன்று என்பதை நாம் மறந்துவிடக் கூடாது என்றும், கடவுளின் குணம் என்பது நெருக்கம், இரக்கம், மென்மை ஆகியவற்றால் சூழப்பட்டது என்றும் எடுத்துரைத்தார்.

மனிதனிலும் சமுதாயத்திலும் பாவத்தால் உண்டான காயங்களையும் வெற்றிடங்களையும் மென்மையால் நிரப்ப வேண்டும் என்று எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஆயர் இரபேல்லோ கூறியது போல நற்கருணை இயேசுவின் முன் மண்டியிட்டு, நீண்ட நேரம் அங்கேயே இருந்து செபிப்பது இயேசு அங்கே இருக்கின்றார் என்பதை எல்லோருக்கும் வெளிப்படுத்தும் ஒரு செயல் என்றும் அச்சகோதரிகளுக்கு வலியுறுத்தினார்.

முதலாம் உலகப்போர் ஏற்படுத்திய பஞ்சத்தை விடவும் கொடுமையான அநீதிக்கு எதிராக அக்காலத்தில் அன்பை அகிலம் முழுதும் பரப்பியவர்கள் அச்சபையை ஆரம்பித்த இளம்பெண்கள் என்றும் அவர்களைப் போல அன்பைப் பரப்புபவர்களாக  வாழவும் வலியுறுத்தினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

25 August 2023, 14:29