தேடுதல்

அன்னை மரியா எப்போதும் நம்முடன் இருக்கின்றார் : திருத்தந்தை

இயேசு மற்றும் அன்னை மரியாவின் மாசற்ற திருஇதயங்கள் உங்கள் மன்றாட்டுகளின் குரல்களைக் கேட்கின்றன : திருத்தந்தை பிரான்சிஸ்

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

ஆகஸ்ட் 5, இச்சனிகிழமையன்று, போர்த்துக்கலின் பாத்திமா நகரில் நிகழ்ந்த இளம் நோயாளார்களுக்கான செபமாலை சொல்லும் நிகழ்வில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கிய அருளுரை.

அன்பான சகோதரர் சகோதரிகளே, நாம் அனைவரும் இணைந்து செபமாலை செபித்தோம். இது மிகவும் அழகான மற்றும் முக்கிமான செபம். செபமாலை முக்கியமானது ஏனென்றால் இது இயேசு மற்றும் மரியாவின் வாழ்க்கையுடன் நம்மை இணைக்கிறது. நமது திருஅவை மகிழ்ச்சியின் இல்லமாக மட்டுமே இருக்கமுடியும் என்பதன் அடையாளமாக இன்று நாம் மகிழ்ச்சியின் மறையுண்மைகள் குறித்துத் தியானித்தோம். இந்தப் பேராலயம் திருஅவையின் அழகிய உருவமாகத் திகழ்கின்றது. கதவுகளின்றி நம்மை வரவேற்கும் இந்தச் சதுக்கத்தின் மையமானது வானத்தை நோக்கித் திறந்திருக்கும் ஒரு சரணாலயமாகக் காட்சியளிக்கின்றது. இது ஒரு தாயின் அரவணைப்பை நமக்கு நினைவுபடுத்துகிறது.

திருஅவை அனைவருக்குமானது

ஒரு தாயாக விளங்கும் நம் திருஅவையிலும், எல்லோரும் கடவுளைச் சந்திக்கும் வகையில் அதன் கதவுகள் அனைவருக்கும் திறந்திருக்கட்டும். அத்திருஅவை அனைவருக்குமான ஓர் இடமாக இருக்கட்டும், ஏனென்றால் நாம் ஒவ்வொருவரும் இயேசு மற்றும் நம் அன்னையின் பார்வையில் மிகவும் முக்கியமானவர்கள். நீங்கள் சிலுவைகளைச் சுமக்கிறீர்கள், ஆனால் அவைகளைக் கடவுளுடன் இணைந்து சுமக்கும்போது அவைகள் உங்களுக்கு ஒன்றுமில்லை. ஆனால் அதேவேளையில், அச்சிலுவைகள் மகிமைக்கான கதவுகளாக இருக்கும். இது உண்மைதான், ஏனென்றால் இயேசுவோடு இணைந்து சுமக்கும் ஒவ்வொரு சிலுவையும் உயிர்த்தெழுதலிலும், ஒவ்வொரு இருளும் ஒளியிலும், ஒவ்வொரு கைவிடுதலும் ஒன்றிப்பிலும் முடிவடைகிறது.

மரியா, உங்களோடு இருக்கின்றார்

அன்னை மரியா உங்களோடு இருக்கின்றார். வெற்றி, அதிகாரம், செல்வம் அல்லது உலகப் புகழ் ஆகியவற்றைத் துரத்துவதன் வழியாக அல்ல, மாறாக, கடவுளின் வழியிலும், உண்மையான மகத்துவத்தின் வழியிலும் நடப்பதன் வழியாகத் தான் நினைத்ததைவிட பெரிய கனவுகளை அடைந்ததாக அவர் உணர்ந்தார். இதைத்தான் தாழ்ச்சியின் உன்னத வழி என அழைக்கின்றோம். கடவுள் எப்போதும் தாழ்மையான மனம் கொண்டவர்களைத் (சிறியோர்களை) தேர்ந்துகொள்கின்றார், ஏனென்றால் கடவுள் அவர்களைப் பெரியவர்களாகக் கருதுகின்றார்.

நற்செய்தியில் வரும் சீடர்களைப் போலவும், பாத்திமாவின் குழந்தைகளைப் போலவும், கடவுள் சாதாரண மக்களைத் தேர்ந்தெடுத்து, அவர்கள் வழியாக வரலாற்றில் தனது பெரிய திட்டங்கள் நிறைவேற அனுமதிக்கிறார். இத்தகையோரைக் கடவுள் அதிகம் விரும்புகின்றார். ஆகவே, ஒன்றாகக் கரம்கோர்த்து, கால்களைத் தரையில் ஊன்றி, நமது பார்வையை விண்ணகத்தை நோக்கித் திருப்பியபடி, ஒன்றிணைந்து முன்னோக்கிச் செல்ல ஒருவருக்கொருவர் உதவுவோம். நம்முடைய பலவீனங்கள் கடக்க முடியாத தடைகள் அல்ல, ஆனால், அவைகள் உயர்ந்த தளத்தை அடைவதற்கான படிக்கட்டுகள் என்று உண்மையில் நம்புவோம், ஏனென்றால் துல்லியமாக சிறியவர்களாகிய நம் வழியாகக் கடவுள் பெரிய காரியங்களைச் செய்கிறார்.

மேலும், அவர் உண்மையில் சிறியோர்களுடன் தன்னை அடையாளப்படுத்திக்கொள்கின்றார். "‘மிகச் சிறியோராகிய என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவருக்கு நீங்கள் செய்ததையெல்லாம் எனக்கே செய்தீர்கள்" (மத் 25:40) என்று இயேசு நற்செய்தியில் மொழிவதைக் காண்கின்றோம். ஆகவே, நண்பர்களே, இயேசு உங்களுடன் தன்னை அடையாளப்படுத்திக்கொள்ளும் அளவிற்கு உங்களை அவர் அன்புகூர்கின்றார். மேலும் உங்களது பரிந்துரை செபத்தின் வழியாக அவருடன் இணைந்து பணியாற்றுமாறு அவர் உங்களிடம் கேட்கின்றார்.

மரியா, உங்களைப் பணிக்கு அழைக்கின்றார்

இயேசு மற்றும் அன்னை மரியாவின் மாசற்ற திருஇதயங்கள் உங்கள் மன்றாட்டுகளின் குரல்களைக் கேட்கின்றன.  கடவுள் எப்போதும் நம் செபங்களைக் கேட்கிறார்; அவை ஒருபோதும் பயனற்றவை அல்ல. ஆனால், அவை எப்போதும் அவசியமானவை, ஏனென்றால் செபம் வரலாற்றை மாற்றுகிறது. உண்மையில், அன்புடன் செய்யப்படும் செபங்கள் மற்றும் தியாகங்கள் உலகில் அமைதியைக் கொண்டு வருகின்றன.   

உலகில் நிகழும் கடவுளுக்கு எதிரான செயல்கள் குறித்து அன்னை மரியா குறைகூறவில்லை. தலைசிறந்ததொரு தாயாக அவர் எந்தயொரு நபரையோ அல்லது சமூகத்தையோ குறைகூறும் விதமாகத் தன் விரைகளை நீட்டுவதில்லை, மாறாக, கடவுளிடமிருந்து தொலைவில் உள்ளவர்களிடம் இரக்கம் இல்லாதது குறித்துதான் கவலைப்படுகிறார். ஏனென்றால் செபம் மற்றும் தியாகம் செய்ய யாரும் இல்லை மற்றும் அன்பும் பற்றார்வமும் குறைவாகவே உள்ளது. அப்படியானால், விசுவாசமற்றவர்களையும், நம்பிக்கையற்றவர்களையும், அன்பற்றவர்களையும் கவனித்துக்கொள்ளும் பொறுப்பினை ஏற்றுக்கொள்ள அன்னை மரியா நமக்கு விடுக்கும் அழைப்பினை ஏற்போம்.

மரியா, அமைதிக்காக செபிக்கக் கேட்கின்றார்

கடவுள் நிச்சயம் நம்மைக் கவனித்துக்கொள்வர். இறைவேண்டலின் கல்விக்கூடமாக விளங்கும் இவ்விடத்தில் இணைந்து செபிப்போம். உலகில் அமைதியை ஏற்படுத்தவும் போரை முடிவுக்குக் கொணரவும் அன்றும் தனது காட்சியின்போது கேட்டுக்கொண்டதுபோலவே இன்றும் நம்மிடம் வலியுறுத்திக் கேட்கின்றார். உலகில் அமைதி நிலவ செபமாலை செபிக்கும்படி அன்னை மரியா நம்மைக் கேட்கிறார். ஆகவே, ஒருமனம் கொண்டவர்களாக நாம் அமைதிக்காக செபிப்போம். மீண்டும் ஒருமுறை திருஅவையையும்  உலகையும் இளகிய மனம்கொண்ட அன்னையின் மாசற்ற இதயத்திற்கு அர்ப்பணிப்போம். அனைவருக்கும் இறையாசீர்!

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

05 August 2023, 13:39