நம்பிக்கையுள்ள செபத்தினால் நாம் கேட்பதைப் பெற்றுக்கொள்ள முடியும்
மெரினா ராஜ் - வத்திக்கான்
நாம் இயேசுவிடம் மிகவும் வருந்தி செபிக்கும் போது நமது விண்ணப்பத்தை அவரால் மறுக்க முடியாது எனவும், கிறிஸ்துவுடனான நமது தனிப்பட்ட உறவை நாம் வளர்த்துக்கொள்வதன் வழியாக நம்பிக்கையில் உறுதியானவர்களாக நாம் மாற முடியும் என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஆகஸ்ட் 20 ஞாயிற்றுக்கிழமை வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் கூடியிருந்த திருப்பயணிகளுக்கு ஞாயிறு மூவேளை செபஉரை வழங்கிய போது இவ்வாறு கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கானானியப் பெண்ணின் நம்பிக்கை இயேசுவின் மனநிலை ஆகிய இரண்டைக் குறித்தும் எடுத்துரைத்தார்.
கானானியப் பெண்ணின் நம்பிக்கையின் பலமே இயேசுவை, அவருடைய மனநிலையை மாற்றியது என்று எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கிறிஸ்தவர்களாகிய நாம் கிறிஸ்துவைப் பின்பற்ற விரும்பினால், மாற்றத்திற்குத் தயாராக இருக்குமாறு அழைக்கப்படுகிறோம் என்றும், கானானியப் பெண் மேல் இயேசு கொண்டிருந்த இரக்கம், நம் உறவுகளில் மட்டுமல்ல, நம்பிக்கை வாழ்விற்கும் மிகவும் நல்லது என்றும் வலியுறுத்தினார்
பொதுக்காலம் 20 வாரத்தின் ஞாயிறு நற்செய்திப் பகுதியான கானானியப் பெண்ணுடன் இயேசு உரையாடிய பகுதியைக் குறித்து திருப்பயணிகளுக்கு விளக்கம் அளித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அப்பெண்ணின் துணிவான செபம், நம்பிக்கையின் பலமே அவளது மகளைக் குணப்படுத்தியது என்றும் மற்றவர்களின் நன்மைக்காக தாழ்ச்சியுடன் கீழ்ப்படிதல், உண்மையாக செவிமடுத்தல், உறவுகளுக்கு முக்கியமானது என்றும் சுட்டிக்காட்டினார்.
இயேசு அன்பானவர் நம்மை முழுமனதுடன் ஏற்று அன்புசெய்பவர் என்று கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நமது உறுதியான செபங்களால் மக்கள் தன்னை தொடவும் நகர்த்தவும் தன்னை அனுமதிப்பவர் என்றும் எடுத்துரைத்தார்.
கானானியப் பெண்ணின் நம்பிக்கை, "இறையியல் துணிச்சல் நிறைந்ததல்ல, மாறாக வலியுறுத்தல் நிறைந்தது. வார்த்தைகளால் அல்ல மாறாக செபத்தால் அவரது விருப்பத்தை, விண்ணப்பத்தை பெற்றுக்கொண்டார் என்று கூறிய திருத்தந்தை, கேளுங்கள், உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள், கண்டடைவீர்கள்; தட்டுங்கள், அது உங்களுக்குத் திறக்கப்படும் என்ற விவிலிய வரிகளையும் மேற்கோளிட்டு காட்டினார்.
நமது நம்பிக்கை எப்படிப்பட்டது?
நமது நம்பிக்கை எப்படி இருக்கவேண்டும் என்று நம்மை நாமே கேள்வி கேட்டுக்கொள்ளவேண்டும் என்று எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள், இயேசுவின் இந்த மாற்றத்தை மனதில் வைத்து, நமது "கருத்தை மன நிலையை மாற்றும் திறன் நமக்கு இருக்கின்றதா? புரிந்துகொள்ளவும் இரக்கமாக இருப்பது எப்படி என்றும் நமக்கு தெரியுமா? என்ற கேள்விகளை திருப்பயணிகள் முன் வைத்து, சிந்திக்க அழைப்புவிடுத்தார்.
நமது மனதில், நம்பிக்கையில் ஏதேனும் கடினத்தன்மை இருக்கிறதா என்று தங்களைத் தாங்களே கேட்டுக்கொள்ளும்படி திருப்பயணிகளை ஊக்குவித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நமது செபம் செயல்களுடன் இணைந்து செல்கின்றதா என்று சீர்தூக்கி பார்க்கவும் அழைப்பு விடுத்தார்.
வார்த்தைகள் மற்றும் கருத்துக்களுடன் எனது செபம் நின்றுவிடுகின்றதா அல்லது செயல்பாடுகளுடன் இணைந்து என்னுடைய செபம் செல்கின்றதா என்பதை நாம் அனைவரும் கண்டறிந்து இறைவனுடனான உரையாடலையும் உறவையும் வளர்த்துக்கொள்ள வலியுறுத்தினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இவ்வாறு தனது மூவேளை செப உரையை நிறைவு செய்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நன்மையானவற்றிற்கு நம் உள்ளத்தைத் திறக்கவும், நம்பிக்கையில் உறுதியானவர்களாக இருக்கவும் அன்னை மரியாளின் உதவியை நாடி மூவேளை செபத்தினை செபித்தார் அதன்பின் கூடியிருந்த திருப்பயணிகளுக்குத் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்