தேடுதல்

இளையோரே, கிறிஸ்துவின் ஒளியால் ஒளிர்ந்திடுங்கள்!

பூமிக்கு மழைத் தேவைப்படுவது போல், திருஅவைக்கும் உலகத்திற்கும் இளையோரே, நீங்கள் தேவைப்படுகிறீர்கள் : திருத்தந்தை பிரான்சிஸ்

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

ஆகஸ்ட் 6 இஞ்ஞாயிறன்று, போர்த்துக்கல்லின் தலைநகர் லிஸ்பனில் நிகழ்ந்த ஆண்டவரின் உருமாற்றப் பெருவிழாத் திருப்பலியில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கிய மறையுரைச் சிந்தனைகள்.

அன்பு நிறைந்த சகோதரர், சகோதரிகளே,

இன்று நாம் நற்செய்தியில் வாசிக்கக் கேட்ட இறைவார்த்தைகளின் அடிப்படையில் மூன்று காரியங்களை உங்களோடு பகிர்ந்துகொள்ள விரும்புகின்றேன். அவைகள் ; ஒளிர்ந்திட, செவிசாய்த்திட மற்றும் அச்சமகன்றிட

01. ஒளிர்ந்திட (to shine)

அங்கே அவர்கள்முன் அவர் தோற்றம் மாறினார். அவரது முகம் கதிரவனைப் போல் ஒளிர்ந்தது (மத் 17:2) என்று இன்றைய நற்செய்தி கூறுகின்றது. இந்த உருமாற்ற நிகழ்விற்கு முன்பு இயேசு தனது சாவை முதன்முறை அறிவிக்கின்றார். இப்போது பாடுகள் மற்றும் மரணம் வழியாக இயேசு பெறவிருக்கும் மாட்சிக் குறித்து அறிந்துகொள்ளும் பொருட்டு பேதுருவையும் யாக்கோபையும் அவர் சகோதரரான யோவானையும் அவர் தன்னுடன் அழைத்துச் செல்கின்றார். இந்த அற்புதமான ஒளியின் வழியாக, இயேசு தனது சீடர்களை அவர்கள் தாங்க வேண்டிய இருண்ட இரவுக்குத் தயார்படுத்துகிறார். ஒளியின் இந்தப் பெரும் அனுபவம் கெத்சமனி மற்றும் கல்வாரியின் இருண்ட நேரத்தைத் தாங்க அவர்களுக்கு உதவியாக அமைகிறது.

அன்பான நண்பர்களே, இரவின் இருளையும், வாழ்க்கையின் சவால்களையும், நம்மை ஆட்கொள்ளும் அச்சங்களையும், அடிக்கடி நம்மை ஆட்கொள்ளும் துயரங்களின் இருளையும் நாம் எதிர்கொள்ள வேண்டுமானால், நமக்கும் ஓர் ஒளி  தேவைப்படுகிறது. அந்த ஒளிக்கு ஒரு பெயர் உண்டு என்று நற்செய்தி சொல்கிறது. ஆம், உலகத்தை ஒளிரச் செய்ய வந்த இயேசுவே அவ்வொளி (காண். யோவான் 1:9). அவர் ஒருபோதும் மறையாத சூரியன், ஆனால் இரவின் இருளுக்கு மத்தியிலும் அவர் தொடர்ந்து ஒளிர்ந்துகொண்டே இருக்கின்றார். கிறிஸ்துவின் ஒளியில், நாமும் உருமாற்றம் செய்யப்பட்டுள்ளோம். ஆதலால், நமது கண்களும் முகங்களும் புதிய ஒளியுடன் ஒளிர்ந்திட முடியும்.

சகோதரர் சகோதரிகளே, திருஅவையும் உலகமும் உங்களிடமிருந்து எதிர்பார்ப்பது இதைத்தான். உங்கள் இளமையில் ஒளிர்ந்திடவும், நற்செய்தியின் ஒளியை எங்கும் கொண்டு செல்லவும், இந்த இருண்ட காலங்களில் நம்பிக்கையின் கலங்கரை விளக்கங்களாக ஒளிவீசிடவும் அவைகள் உங்களிடம் எதிர்பார்க்கின்றன.

ஸ்பாட்லைட்டில் நம்மை வைத்து, ஒரு சரியான படத்தை முன்வைப்பதன் வழியாக அல்லது வலிமைவாய்ந்த மற்றும் வெற்றிகரமானதாகத் தோன்றுவதன் வழியாக நாம் ஒளியைப் பரப்புவதில்லை. மாறாக, நாம் இயேசுவை நம் இதயங்களுக்குள் வரவேற்று, அவரைப் போலவே அன்புகூரக் கற்றுக் கொள்ளும்போது நாம் ஒளி வீசுகிறோம். இந்நிலையில் உண்மையான அழகின் ஒளி ஒளிர்கிறது. அன்பிற்காக எல்லாவற்றையும் பணயம் வைக்கத் தயாராக இருக்கும் வாழ்க்கையின் ஒளி அது.

வேறு வார்த்தைகளில் கூறவேண்டுமெனில், நமக்கு அடுத்திருப்போரை அவர்கள் இருப்பதுபோல் (as they are) அன்புகூர்வது, அவர்கள் நம்முடன் உடன்படும்போது மட்டுமல்ல, அவர்கள் இரக்கமற்றவர்களாகவோ அல்லது உடன்படாதவர்களாகவோ இருக்கும்போதும் கூட அவர்களை அவர்களாகவே ஏற்றுக்கொள்வது. நாம் பெற்றுள்ள இயேசுவின் ஒளியால் இதனைச் செய்வோம்.

இளையோராகிய நீங்கள் இந்த வகையான அன்பினை வெளிப்படுத்தும் திறன் கொண்டவர்கள். இதனால் சில வேற்றுமை சுவர்களையும் தவறான எண்ணங்களையும் உடைத்து, கிறிஸ்துவின் அன்பினால் விளைந்த மீட்பின் ஒளியை உலகிற்குக் கொண்டு வர முடியும். “உலகின் ஒளி நானே; என்னைப் பின்தொடர்பவர் இருளில் நடக்கமாட்டார்; வாழ்வுக்கு வழி காட்டும் ஒளியைக் கொண்டிருப்பார்” (காண்க யோவா 6:12).

02. செவிமடுக்க (to listen)

இரண்டாவதாக, இறைத்தந்தை கொடுக்கும் கட்டளை எளிமையானது மற்றும் நேரடியானது. "என் அன்பார்ந்த மைந்தர் இவரே, இவர்பொருட்டு நான் பூரிப்படைகிறேன். இவருக்குச் செவிசாயுங்கள்” (மத் 17:5) என்று கூறுகின்றார். மத்தேயுவின் நற்செய்தியில் தந்தை சொன்ன கடைசி வார்த்தைகளான 'இவருக்குச் செவிசாயுங்கள்' என்ற வார்த்தைகளில் கிறிஸ்தவ வாழ்க்கை முழுவதுமே அடங்கியுள்ளது.

நாம் இயேசுவின் வார்த்தைகளுக்குச் செவிசாய்க்க வேண்டும். அவருடன் பேச வேண்டும், அவருடைய வார்த்தைகளைப் படித்து அவற்றை நடைமுறைப்படுத்த வேண்டும், அவருடைய அடிச்சுவடுகளைப் பின்பற்ற வேண்டும். இயேசு நமக்காக நிலைவாழ்வு தரும் வார்த்தைகளைக் கொண்டிருக்கின்றார். ஏனென்றால் கடவுள் தந்தையாகவும் அன்பாகவும் இருக்கின்றார் என்பதை அவர் வெளிப்படுத்துகிறார், மேலும் தூய ஆவியாரில் நாமும் அவருடைய அன்பான குழந்தைகளாக மாறுகிறோம்.

இந்த வாழ்க்கையில் நமக்குத் தேவையானது இதுதான். புகழ், வெற்றி அல்லது பணம் அல்ல, ஆனால் நாம் தனியாக இல்லை, கிறிஸ்து எப்போதும் நம் அருகில்  இருக்கிறார். இதனால் ஒவ்வொரு நாளையும்  இறைவனின் அரவணைப்பில் உறுதியாகத் தொடங்கி முடிக்கலாம் என்பதை உணர்வோம்.

நாம் அன்புகூரப்படுகிறோம் ஒருபோதும் தோல்வியடையாத அன்பால் அரவணைக்கப்படுகிறோம் என்று நம்புவதற்கு நாம் இயேசுவுக்கு செவிசாய்க்க வேண்டும். இறைவன் சொல்வதைக் கேட்பதன் வழியாகவும், அவருடைய எல்லா வியப்புகளுக்கும் நம் மனங்களைத் திறந்திருப்பதன் வழியாகவும், நம்மைச் சுற்றியுள்ள சூழ்நிலைகள், பிற கலாச்சாரங்கள், ஏழைகள் மற்றும்  வலுகுறைந்தவர்களின்  வேண்டுகோள்கள் மற்றும் காயப்படுத்தப்பட்ட இப்பூமியின் அழுகுரல்களுக்கு செவிசாய்க்க முடியும் என்பதையும் நினைவில் கொள்வோம்.

03. அச்சமற்று இருப்பது (to be unafraid)

இவ்வுருமாற்ற நிகழ்வின் இறுதியில், இயேசு சீடர்களிடம் வந்து அவர்களைத் தொட்டு, “எழுந்திருங்கள், அஞ்சாதீர்கள்” (மத் 17:7) என்று திடப்படுத்துகின்றார். உயிர்த்தெழுதல் மாட்சியை முன்சுவைத்து, இறையொளியில் நீராடி, இறைத்தந்தையின் குரலைக் கேட்ட பிறகு, சீடர்கள் மலையிலிருந்து இறங்கி கீழே சமவெளியில் காத்திருக்கும் சவால்களை எதிர்கொள்ள தயாரானார்கள்.

ஆகவே, இயேசுவின் ஒளியையும் அவருடைய வார்த்தைகளையும் நமக்குள் நாம் போற்றினால், ஒவ்வொரு நாளும் அச்சமற்ற இதயத்துடன் நாம் வாழலாம். இளையோராகிய உங்களுக்கு பெரிய கனவுகள் இருக்கும், ஆனால் அவை நிறைவேறாது என்று நீங்கள் அடிக்கடி அச்சமடையலாம். சில வேளைகளில்  சவாலை ஏற்கும் அளவிற்கு நான் இல்லை என்று நீங்கள் நினைக்கலாம், மனம் சோர்ந்து போகலாம், தோல்வியடைவதாக நினைக்கலாம் அல்லது உங்கள் வலியை புன்னகையுடன் மறைக்கலாம். இளைஞர்களாகிய நீங்கள் உலகை மாற்றி, நீதி மற்றும் அமைதிக்காக உழைக்க விரும்புகிறீர்கள். உங்களின் முழு ஆற்றலையும் படைப்பாற்றலையும் இதற்காக நீங்கள் அர்ப்பணிக்கிறீர்கள். இன்னும் அது போதுமானதாக இல்லை. இருப்பினும், பூமிக்கு மழைத் தேவைப்படுவது போல், திருஅவைக்கும் உலகத்திற்கும் இளையோரே, நீங்கள் தேவைப்படுகிறீர்கள்.

அன்பான இளையோரே, நம் உலகின் நிகழ்காலமாகவும் எதிர்காலமாகவும் இருக்கும் இயேசு, இப்போது உங்கள் அனைவருக்கும் கூறும் வார்த்தை, "அஞ்சாதீர்கள்" என்பதுதான். ஆகவே, நானும் உங்கள் ஒவ்வொருவரின் கண்களையும் பார்த்துக் கூற விரும்புவது "அஞ்சாதீர்கள்" என்பதுதான். இப்போது நான் உங்களுக்கு இன்னும் அழகான ஒன்றைச் சொல்கிறேன். இயேசு இப்போது உங்களைப் பார்க்கிறார். அவர் உங்களை அறிவார்; உங்கள் இதயத்தில் உள்ளதை அவர் அறிவார்; அவர் உங்களைப் பார்த்து புன்னகைத்தவாறு, "உங்கள்மீது நான் முடிவில்லாத அன்பு கொண்டுள்ளேன்"என்று மீண்டும் ஒருமுறை உங்களிடம் கூறுகின்றார்.

எனவே, கடவுளின் ஒளிமயமான புன்னகையை அனைவருக்கும் கொண்டு வாருங்கள்! விசுவாசத்தின் மகிழ்ச்சிக்கும், உங்கள் இதயங்களை அரவணைக்கும் நம்பிக்கைக்கும், நீங்கள் செய்யும் எல்லாவற்றிலும் நீங்கள் கொண்டு வரும் அன்புக்கும் சாட்சியாக இருங்கள். கிறிஸ்துவின் ஒளியால் ஒளிர்ந்திடவும், நீங்களும் உலகத்தின் ஒளியாக மாறிடவும் அவருக்குச் செவிசாயுங்கள். அஞ்சாதீர்கள். ஆண்டவர் இயேசு உங்களை அன்புகூர்கிறார். உங்கள் அருகில் நடக்கிறார். இயேசுவுடன், வாழ்க்கை எப்போதும் புதிதாக பிறக்கிறது என்பதை நினைவில் நிறுத்துங்கள். அனைவருக்கும் இறையாசீர்!

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

06 August 2023, 14:53