தேடுதல்

திருத்தந்தையின் புதன் மறைக்கல்வியுரை – அண்மை திருப்பயண பகிர்வுகள்

நற்செய்தி வாக்குறுதியளிக்கும் நம்பிக்கையின் வருங்காலத்தை நோக்கி செல்வதற்கான விருப்பத்தை இளையோர் வெளியிட்டதை, உலக இளையோர் தினக் கொண்டாட்டத்தில் காண முடிந்தது.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

ஜூலை மாதம் முழுவதும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கோடைகால விடுமுறையில் இருந்தமையாலும், ஆகஸ்ட் முதல் வாரத்தில் போர்த்துக்கல் திருப்பயணத்தை மேற்கொண்டதாலும், ஏறக்குறைய 40 நாட்களுக்குப்பின் ஆகஸ்ட் ஒன்பதாம் தேதி புதனன்றுதான் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மறைக்கல்வி உரை வத்திக்கானில் இடம்பெற்றது. தன் அண்மை திருத்தூதுப் பயணம் குறித்த சிந்தனைகளை புனித திருத்தந்தை ஆறாம் பவுல் அரங்கில் குழுமியிருந்த திருப்பயணிகளுடன் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பகிர்ந்துகொள்வதற்கு முன்னர், லூக்கா நற்செய்தி முதல் பிரிவிலிருந்து, எலிசபெத், அன்னை மரியாவை வாழ்த்திய பகுதி பல மொழிகளில் வாசிக்கப்பட்டது.

அதன்பின் மரியா புறப்பட்டு யூதேய மலைநாட்டிலுள்ள ஓர் ஊருக்கு விரைந்து சென்றார். அவர் செக்கரியாவின் வீட்டை அடைந்து எலிசபெத்தை வாழ்த்தினார். மரியாவின் வாழ்த்தை எலிசபெத்து கேட்டபொழுது அவர் வயிற்றிலிருந்த குழந்தை மகிழ்ச்சியால் துள்ளிற்று. எலிசபெத்து தூய ஆவியால் முற்றிலும் ஆட்கொள்ளப்பட்டார். அப்போது அவர் உரத்த குரலில், “பெண்களுக்குள் நீர் ஆசி பெற்றவர்; உம் வயிற்றில் வளரும் குழந்தையும் ஆசி பெற்றதே!”....... என்றார். (லூக் 1,39-42)

அதன்பின் திருத்தந்தை தன் சிந்தனைகளை அங்கிருந்தோருடன் பகிர்ந்துகொண்டார்.

அன்பு சகோதரர்களே, சகோதரிகளே! நான் அண்மையில் உலக இளையோர் தினக்கொண்டாட்டத்தில் பங்குகொள்ள போர்த்துக்கல் நாட்டிற்கு பயணம் மேற்கொண்டபோது, உயிர்த்த இயேசுவின் ஆவி, அதாவது தூய ஆவியார் அவர்களின் அசைவுநிலை, உலகம் முழுவதுமிருந்து வந்திருந்த கிறிஸ்தவ இளையோரின் இதயங்களிலும் வாழ்விலும் செயல்படுவதை நேரடியாகக் கண்டேன். இயேசுவின் பிறப்பறிவிப்பிற்கு செவிமடுத்த உடனேயே, அன்னை மரியா அவர்கள் விரைந்து சென்ற எடுத்துக்காட்டைப் பின்பற்றி, இளையோரும், நற்செய்தி வாக்குறுதியளிக்கும் நம்பிக்கையின் வருங்காலத்தை நோக்கி செல்வதற்கான விருப்பத்தை வெளியிட்டதைக் காணமுடிந்தது. இயேசு கிறிஸ்துவின் அன்பாலும், தூய ஆவியாரின் மகிழ்வாலும் பல்வேறு நாடுகளின் இளையோர் பங்குகொண்ட இச்சந்திப்பு, இறைமக்களின் கூட்டமாக நோக்கப்படும் திருஅவையின் முகத்தை பிரதிபலிப்பதாக இருந்தது. இந்த திருஅவையிலேயே அனைவரும், அனைத்துக் காலங்களிலும், அனைத்து இடங்களிலும் உறுப்பினர்களாக உணர அழைப்புப் பெறுகிறார்கள். ஏழ்மை, அநீதி மற்றும் போரால் சிதறுண்டு துண்டாக்கப்பட்டுள்ள இவ்வுலகிற்கு கடவுள் மட்டுமே தரவல்ல குணப்படுத்தலுக்காகவும், அமைதிக்காகவும், மனந்திரும்பல்களுக்காகவும், நற்செய்தியை பரப்புபவதற்காகவும் ஒன்றிணைந்து செபித்தோம். இதே உணர்வுடன் நான் பாத்திமா நகருக்கு திருப்பயணியாகச் சென்று  அன்னைமரியாவின் மாசற்ற இதயத்திற்கான அர்ப்பணத்தை புதுப்பித்தேன். இந்த இளையோர் தினக் கொண்டாட்ட நாட்களில் முக்கிய இடம் வகித்த ஆன்மீக மகிழ்வு மற்றும் கிறிஸ்துவின் மீதான அன்பின் அபரிவிதமான அருள்பொழிவு, தேவ அழைத்தல்கள் பெருகவும், போர்த்துக்கல், திருஅவை மற்றும் உலகின் வருங்கால நம்பிக்கைக்கான புளிக்காரமாகவும் விளங்குவதாக.

இவ்வாறு, தன் புதன் மறைக்கல்வி போதனையை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

09 August 2023, 13:17