உயிரோட்டமுள்ள நம்பிக்கை கொண்ட மங்கோலிய தலத்திருஅவை
மெரினா ராஜ் - வத்திக்கான்
மங்கோலிய நாட்டிற்கான இத்திருத்தூதுப்பயணம் தான் மிக அதிகமாக விரும்பிய ஒன்று எனவும், எண்ணிக்கையில் சிறிய அளவு கிறிஸ்தவர்களை கொண்டிருந்தாலும் நம்பிக்கையில் உயிரோட்டமுடையதாகவும், தொண்டுப்பணிகளில் சிறந்த தலத்திருஅவையாகவும் மங்கோலியா திகழ்கின்றது எனவும் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஆகஸ்ட் 27 ஞாயிற்றுக்கிழமை வத்திக்கானின் தூய பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் கூடியிருந்த மக்களுக்கு அளித்த மூவேளை செபஉரையின் இறுதியில் இவ்வாறு கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஆகஸ்ட் மாத இறுதியில் தான் மேற்கொள்ள இருக்கும் மங்கோலிய திருத்தூதுப்பயணம் நன்முறையில் அமைய செபிக்குமாறு திருப்பயணிகளிடம் கேட்டுக்கொண்டார்.
ஓர் உன்னதமான, சிறந்த கிறிஸ்தவ பாரம்பரியத்தைக் கொண்ட ஞானமுள்ள மக்களைத் தான் சந்திக்க இருப்பதாக எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 4 வரை மங்கோலியாவுக்கு திருப்பயணம் மேற்கொள்ள இருப்பதாகவும் குறிப்பாக செப்டம்பர் மாதம் 3ஆம் தேதி, மங்கோலியாவின் Hun Theatre என்னும் அரங்கில் பல்சமய மதங்களுக்கு இடையிலான ஒன்றிப்புக் கூட்டத்தில் தான் பங்கேற்க இருப்பதாகவும் எடுத்துரைத்தார்.
மங்கோலிய மக்களுக்கிடையில் உரையாற்ற இருக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அனைவரின் சகோதரனாக மங்கோலியாவில் உரையாற்ற இருப்பதில் தான் பெரிதும் மகிழ்ச்சி அடைவதாகவும் எடுத்துரைத்தார்.
மேலும் இப்யணத்திற்கு அழைப்புவிடுத்த மங்கோலிய அதிகாரிகள் அனைவருக்கும் நன்றியினைத் தெரிவித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இப்பயணத்திற்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருக்கும் அனைவருக்கும் தன் சிறப்பான நன்றியினையும் தெரிவித்தார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்