குழந்தைகள் மற்றும் காலநிலை பாதுகாக்கப்பட வேண்டும்
திமினா செலின் ராஜேந்திரன் – வத்திக்கான்
கிளிண்டன் குளோபல் முன்முயற்சியின் நேரடி வீடியோ அழைப்பில் கலந்துகொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நல்லெண்ணம் உள்ளவர்களை நோக்கி, பொது நன்மையை நாடவும், குறிப்பாக, பாதிப்புக்குள்ளாகும் குழந்தைகளின் நலனுக்காக உழைக்கவும் வலியுறுத்துவதாக எடுத்துரைத்தார்.
குழந்தைகள், காலநிலை மாற்றம் ஆகியவைகளை மையமாக வைத்து, திருதந்தை பிரான்சிஸ் அவர்கள் கிளின்டன் அறக்கட்டளைக்கு திங்களன்று ஆற்றிய உரையில், பொது நன்மைக்காக பங்களிப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.
ஒரு பெரிய சகாப்தத்தின் மாற்றத்தை அனுபவித்து வரும் நாம், அலட்சியத்தின் உலகமயமாக்கல் என்ற நோயிலிருந்து விடுபட்டால் மட்டுமே உலகைக் குணப்படுத்த முடியும் என்ற திருத்தந்தை, இன்றைய உலகளாவிய சவால்களை எதிர்கொள்ள, பகிரப்பட்ட பொறுப்பின் முக்கியத்துவத்திற்கும், சந்திப்பு மற்றும் உரையாடல் கலாச்சாரத்திற்கும் அழைப்பு விடுத்தார்.
இன்றைய பல்வேறு சவால்கள், காலநிலை மாற்றம், புலம்பெயர்ந்தோர் மற்றும் அகதிகளைப் பாதிக்கும் மனிதாபிமான நெருக்கடி போன்ற அழுத்தமான பிரச்சனைகளை ஒப்புக்கொண்டு, அறக்கட்டளை வழியாக செயலாற்றுவதற்காக அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளிண்டனுக்கு நன்றியும் தெரிவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
தன்னை மாற்றிக் கொள்வதற்கான சவாலையும், பெரிய பொறுப்பையும் எடுத்துக் கொள்வது இன்றியமையாதது, இந்த சவால்களை நாம் தனியாக எதிர்கொள்ளாமல், உடன்பிறந்தவர்களாகவும், கடவுளின் குழந்தைகளாகவும் ஒன்றுபட வேண்டும் என்றும் கூறினார் திருத்தந்தை.
சந்திப்பு, உரையாடல், செவிமடுத்தல் மற்றும் புரிந்து கொள்ளும் கலாச்சாரத்தை பரப்புவதும், பொது நன்மைக்கு பங்களிப்பதும் மிகவும் அவசியம் என்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வத்திக்கானுக்கு அருகிலுள்ள இயேசு பம்பினோ மருத்துவமனை, குழந்தைகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக அறிவியல் ஆராய்ச்சியை ஊக்குவித்து அர்ப்பணிப்புடன் செயல்படுவதைப் பாராட்டினார்.
வெவ்வேறு இடங்களிலிருந்து அவசர சிகிச்சைக்காக வரும் குழந்தைகள், போரால் குறிக்கப்பட்ட இந்த பயங்கரமான மாதங்களில் வந்த இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட இளம் உக்ரேனிய நோயாளிகள், என எண்ணற்றோருக்கு இந்த மருத்துவமனை சிகிச்சை அளித்துவருவதையும் திருத்தந்தை பாராட்டினார்.
உலகில் உள்ள அனைத்துக் குழந்தைகளின் பிரச்சனைகளையும் மருத்துவமனையால் சரி செய்ய முடியாவிட்டாலும், குழந்தைகளை கவனித்துக் கொள்வதும், பெரிய அறிவியல் ஆராய்ச்சிகளை ஒன்றிணைப்பதும் சாத்தியம் என்பதற்கு இயேசு பம்பினோ, அதாவது குழந்தை இயேசு மருத்துவமனை சாட்சியம் அளிக்க முயல்கிறது என்று மேலும் குறிப்பிட்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்