தேடுதல்

ஆசியாவின் இதயமான மங்கோலியா

மத்திய கிழக்கு ஆசியாவின் நிலத்தால் சூழப்பட்ட மங்கோலிய நாடு, வடக்கே ரஷ்யா மற்றும் தெற்கு மற்றும் கிழக்கில் சீனாவினை எல்லையாக் கொண்டு உள்ளது.

மெரினா ராஜ் – வத்திக்கான்

ஆசியாவின் இதயமான மங்கோலியா

மத்திய கிழக்கு ஆசியாவின் நிலத்தால் சூழப்பட்ட மங்கோலிய நாடு, வடக்கே ரஷ்யா மற்றும் தெற்கு மற்றும் கிழக்கில் சீனாவினை எல்லையாக் கொண்டு உள்ளது. மிகக் குறைந்த மக்கள்தொகை கொண்ட நாடுகளில் ஒன்றான மங்கோலியாவில் 33.5 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர். மலைகள், ஏரிகள், பாலைவனங்கள் மற்றும் பரந்த புல்வெளிகளுக்கு இடையில் நிலப்பரப்பு என மிக அழகான வேறுபட்ட பகுதியாக மங்கோலியா திகழ்கின்றது. மங்கோலியாவின் தெற்கெ பூமியின் மிகப்பெரிய குளிர்பாலைவனமாகக் கருதப்படும் கோபி பாலைவனம் அமைந்துள்ளது. மேலும் வடகிழக்கு பகுதியில் 4000 மீட்டர் உயரமுடைய மலைகள் காணப்படுகின்றன. சீனாவின் எல்லையில் உள்ள 4,356 மீட்டர் குய்டன் மலை உயர்ந்த மலைச்சிகரமாகக் கருதப்படுகின்றது.

மங்கோலிய நாட்டில் நம்பமுடியாத பல்வேறு வகையான தாவர வகைகளும் ஏராளமான விலங்கினங்களும் உள்ளன. பைக்கால் ஏரியின் முக்கிய துணை நதிகளில் ஒன்றான செலங்கா மற்றும் அதன் துணை நதியான ஆர்கான், கெர்லன், ஜெனிசெஜ் ஆகியவை முக்கிய நதிகளாக உள்ளன. உப்பு நீர் மற்றும் நன்னீர் ஆகிய இரண்டும், ஏராளமாகக் கிடைக்கும் மங்கோலியாவில் Uvs, Khar-Us, அக்பாஷ் தீவு, Kyargas Khövsgöl ஆகிய ஏரிகள் அமைந்துள்ளன. மிக நீண்ட, குளிர்ந்த குளிர்காலம் மற்றும் குறுகிய கோடைகாலத்துடன் கூடிய காலநிலையைக் கொண்டது இந்நாடு.

பரிசுப்பொருட்கள்

பரிசுப்பொருட்கள் என்பன ஒருவர் மற்றவர்களுக்கிடையில் உள்ள அன்பையும் நட்பையும் பலப்படுத்துவதற்கான ஒன்றாகப் பழங்காலம் தொட்டுக் கருதப்பட்டு வருகின்றது. அமைதியையும் மகிழ்வையும் வெளிப்படுத்தும் இப்பரிசுப்பொருட்கள் மக்களிடையே நட்புறவுகளின் கண்ணாடியாகத் திகழ்கின்றது.  திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தனது 43வது திருத்தூதுப்பயணத்தின் போது, ​​ மங்கோலிய அரசுத்தலைவர் மற்றும் அதிகாரிகளுக்கு வழங்கும் பரிசுகளில், பாரம்பரிய நினைவுப் பதக்கங்களும் உள்ளன. ஒவ்வொரு திருத்தூதுப்பயணத்தின் போதும் அந்த நாட்டின் சிறப்புக்களை, பழமையை நினைவூட்டும் விதமாக பரிசுகளையும்  நினைவுச் சின்னங்களையும் வழங்கும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மங்கோலிய திருத்தூதுப் பயணத்தின் போதும், தனது அன்பை பகிர்ந்து கொள்ளும் வண்ணம் பரிசுகளை பரிமாறிக்கொள்ள உள்ளார்.

மங்கோலியா பயணத்திற்கான நினைவுப் பதக்கம்

நினைவுப் பதக்கத்தின் பின்புறம் திருத்தந்தையின் 43ஆவது திருத்தூதுப்பயணம் என இலத்தீன் மொழியிலும் திருத்தந்தையின் இலச்சினையும் இடம்பெற்றுள்ளன. முன்புறத்தில்  மேல்பக்கத்தின் வலப்புறத் தொடக்கத்தில் தங்க மலைகள் என அழைக்கப்படும் Altaj மலைகளும், முடிவில் turco-mongolo altan என அழைக்கப்படும் மலைகளும் இடம்பெற்றுள்ளன. மலைகளைத் தொடர்ந்து இடப்பக்கத்தில் உலன்பதார் பேராலயம் அமைந்துள்ளது. திருத்தூதர்கள் பேதுரு, மற்றும் பவுலுக்காக அர்ப்பணிக்கப்பட்ட இப்பேராலயத்தின் அருகில் தான் மங்கோலிய அப்போஸ்தலிக்க நிர்வாக இல்லம் அமைந்துள்ளது. இதற்கு அருகில் வெள்ளி மரம் என அழைக்கப்படும் ஏஞ்சல் நீருற்று அமைந்துள்ளது. Gran Khan அதாவது, செஞ்சிஸ்கானால் உருவாக்கப்பட்ட Tumen Amugulang அரண்மனையில் இருந்ததாக நம்பப்படும் கலைவடிவமும் இங்கு பொறிக்கப்பட்டுள்ளது. நினைவுப்பதக்கத்தின் கீழே மங்கோலிய நாட்டு விலங்குகளான குதிரை, ஒட்டகம், மாடு, வெள்ளாடு மற்றும் செம்மறி ஆடுகள் பொறிக்கப்பட்டுள்ளன. அதற்கும் கீழே morin khuur என்னும் மங்கோலிய இசைக்கருவி மகிழ்வின் அடையாளமாக  வடிக்கப்பட்டுள்ளது. அதற்கும் சற்று மேலே மங்கோலியாவில் முதன் முதலில்  உருவாக்கப்பட்ட துறவற இல்லமான Erdene Zuu Khiid என்னும் புத்த துறவு இல்லமும் அமைந்துள்ளன. நினைவுப்பதக்கத்தைச் சுற்றிலும் திருத்த்தூதுப்பயண நாட்கள் குறிக்கப்பட்டுள்ளன. இவ்வாறாக, கலைஞர் அமலியா மிஸ்டிசெல்லி என்பவரால் வடிவமைக்கப்பட்ட நினைவுப்பதங்கங்கள் மங்கோலியா நாட்டிற்கு திருத்தந்தையால் வழங்கப்பட உள்ளன.

 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

01 September 2023, 11:04