ஊக்கமும் நம்பிக்கையும் தரும் இடமாகக் கருணை இல்லம்
மெரினா ராஜ் - வத்திக்கான்
இயக்குனர் ஆன்ட்ரூ அவர்களின் உரை
வெறுத்து ஒதுக்கப்பட்டவர்களை வரவேற்கும் இல்லமான இக்கருணை இல்லத்தினை திறந்து வைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை இல்லத்தின் இயக்குனரான அருள்சகோதரர் Andrew Tran Le Phuong அவர்கள் வரவேற்றார். அதன் பின் இல்ல இயக்குனர் அவர்களின் வாழ்த்துரையுடன் கூட்டம் ஆரம்பமானது.
சமூகத்தின் விளிம்பில் வாழ்பவர்களான ஏழைகள், பாதிக்கப்படக்கூடியவர்கள், பெண்கள், குழந்தைகள், புலம்பெயர்ந்தோர் அனைவரும் ஒவ்வொரு நாளும் இக்கருணை இல்லத்தில் வரவேற்கப்படுகிறார்கள் என்றும், உலகத்தால் நிராகரிக்கப்படும் இவர்களுக்கு உணவு, சுத்தமான ஆடைகள் வழங்கப்படுகின்றன என்று கூறிய ஆண்ட்ரூ அவர்கள், எல்லாவற்றிற்கும் மேலாக யார் வந்து கதவைத்தட்டினாலும் பேசுவதற்கு செவிமடுப்பதற்கு ஒருவர் இருக்கும் இல்லமாக கருணை இல்லம் செயல்படுவதை எடுத்துக்காட்டினார். வீடற்றவர்களுக்கான முதலுதவி மையமாகவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஊக்கமும் நம்பிக்கையும் தரும் இடமாகக் கருணை இல்லம் திகழ்வதையும் சுட்டிக்காட்டினார் இயக்குனர் ஆன்ட்ரூ.
சமூக நீதி, தேவைப்படுபவர்களுக்கு உதவுதல் ஆகிய துறைகளில் செயல்படும் தலத்திருஅவையின் அனைத்து நிறுவனங்களும் ஒன்றிணைந்து ஒரு மையத்தை உருவாக்க வேண்டும் என்னும் கர்தினால் ஜோர்ஜோ மரேங்கோ அவர்களின் யோசனையே இக்கருணை இல்லம் என்றும் எடுத்துரைத்தார் காசா தெல்லா மிசரிகோர்தியா என்னும் கருணை இல்லத்தின் இயக்குனர் ஆன்ட்ரூ.
அருள்சகோதரி வெரோணிக்கா அவர்களின் உரை
மங்கோலியாவில் உள்ள புனித அன்னை மரியா மருத்துவமனையில் பணியாற்றும் சார்ட்ரசின் புனித பவுல் சபை அருள்சகோதரி வெரோணிக்கா கூறுகையில், ஆண்டிற்கு 12,000 பேர் உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெறுகின்றனர் என எடுத்துரைத்து தனது 8 ஆண்டுகால பணியில் மகிழ்வுடன் ஏழைகளோடு ஏழையாகப் பணியாற்றி வருவதையும் எடுத்துரைத்தார். வீடற்ற மக்களுக்கு இலவச காலை உணவினையும் அடிப்படைப் பொருட்களையும் வழங்கிவருவதை எடுத்துரைத்த அருள்சகோதரி அவர்கள் ஏழை மக்களுக்குப் பணியாற்றும் போது தன்னை அவர்களை விட ஏழையாகப் பார்ப்பதாகவும் எடுத்துரைத்து மாறிவரும் உலகின் எதிர்மறைத் தாக்கங்களிலிருந்து ஆறுதலையும் பாதுகாப்பையும் தான் கண்டு கொண்டதாகக் கூறினார்.
மாற்றுத்திறனாளி லூசியா அவர்களின் உரை
மாற்றுத்திறனாளியான லூசியா தனது கருத்துக்களை திருத்தந்தையின் முன் எடுத்துரைக்கையில் சிலுவையில் அறையப்பட்ட இயேசுவைப் பார்க்கையில் இயேசு எனக்காக, என் பாவங்களுக்காக, அன்பினால் சிலுவையில் அறையப்பட்டார் என்பதைப் புரிந்துகொண்டதாகவும், இது, தான் சுமக்க வேண்டிய சிலுவை, மகிழ்ச்சியுடன் சுமக்க வேண்டிய சிலுவை என்று உணர்ந்ததாகவும் எடுத்துரைத்தார்.
இரண்டு கை மற்றும் இரண்டு கால்கள் இல்லாத லூசியா இயல்பான மற்றும் மகிழ்ச்சியான மனநிலையில் தன் வாழ்க்கை அனுபவங்களைத் திருத்தந்தையின் முன் பகிர்ந்த போது தனது ஊனமுற்ற சிலுவையை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டதாகவும் கூறினார்.
கடவுள் எல்லாவற்றையும் தருகிறார், ஒவ்வொருவருக்கும் வாய்ப்பளிக்கிறார், இந்த வாய்ப்பை நாம் எப்படிப் பார்த்து ஏற்றுக்கொள்கின்றோம் என்பதைப் பொறுத்து, நமது வாழ்க்கை கடவுளின் அன்பால் நிரம்பியுள்ளது என்றும் கூறினார் லூசியா. மேலும், இரண்டு கைகளையும் இரண்டு கால்களையும் இழந்த போதும் கடவுளின் அன்பை, இயேசுவின் அன்பை முழுமையாக ஏற்றுக்கொள்ளும் முடிவை தான் எடுத்ததால், உலகின் அதிர்ஷ்டசாலி என்று தன்னைக் கூறிக்கொள்வதாகவும் எடுத்துரைத்தார் லூசியா. அவரைத்தொடர்ந்து தனது 43ஆவது திருத்தூதுப்பயணத்தின் நான்காம் நாளின் இறுதி உரையை தொண்டுப்பணிகள் ஆற்றுவோருக்கு அளித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
திருத்தந்தையின் உரையினைத் தொடர்ந்து சிறிது நேர அமைதிக்குப் பின் அன்னை மரியாவை நோக்கிய செபம் செபிக்கப்பட்டது. அதன்பின் திருத்தந்தை கூடியிருந்த அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரை அளித்தார். இறுதிப்பாடல்களுடன் கூட்டம் இனிதே நிறைவடைந்தது. இறைஇரக்க இல்லத்திலிருந்து புறப்படும் முன் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அவ்வில்லத்தின் பெயர்ப்பலகையை புனித நீர் கொண்டு ஆசீர்வதித்தார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்