தேடுதல்

அரசுத்தலைவருடன் திருத்தந்தை பிரான்சிஸ் அரசுத்தலைவருடன் திருத்தந்தை பிரான்சிஸ் 

உலான்பாதர் அரசு மாளிகையில் திருத்தந்தை

அரசு அலுவலகம் மற்றும் அரச மாளிகை என்னும் பொருள்படும் வகையில் மங்கோலிய மொழியில் சாரல் ஆர்டன் அதாவது "கிரே பேலஸ்" என்று இம்மாளிகை அழைக்கப்படுகிறது.

மெரினா ராஜ் - வத்திக்கான்

செப்டம்பர் 2 உள்ளூர் நேரம் காலை 9 மணிக்கு இந்திய இலங்கை நேரம் காலை 6.30 மணிக்கு சுக்பாதர் வளாகத்தை வந்தடைந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அரசுத்தலைவர் அவர்களால் வரவேற்கப்பட்டார். மங்கோலிய நாட்டு அதிகாரிகள் மற்றும் தலைவர்களால் அதிகாரப்பூர்வமாக வரவேற்கப்பட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அதிகாரிகள் மற்றும் அரசுத்தலைவர்களுக்கு பரிசுபொருட்களை வழங்கினார். அதன்பின் அங்கிருந்து காரில் புறப்பட்டு அருகில் உள்ள அரசு மாளிகையை வந்தடைந்தார்.

உலான்பாதர் அரசு மாளிகை

அரசு அலுவலகம் மற்றும் அரச மாளிகை என்னும் பொருள்படும் வகையில் மங்கோலிய மொழியில் சாரல் ஆர்டன் அதாவது "கிரே பேலஸ்" என்று இம்மாளிகை அழைக்கப்படுகிறது, இது 2007 இல் வெள்ளை வர்ணம் பூசப்படுவதற்கு முன்பு இருந்த சாம்பல் நிறத்தின் காரணமாக, இப்பெயர் பெற்றது உலான்பாதரில் சுக்பாதர் சதுக்கத்திற்கு வடக்கே அமைந்துள்ள இந்த மாளிகையானது, அரசுத்தலைவர் மற்றும் பிரதமரின் அலுவலகங்களைக் கொண்டுள்ளது. மங்கோலியாவின் தேசிய கிரேட் ஹூரல் என அழைக்கப்படும் பாராளுமன்றமும் இங்குதான் உள்ளது. சோவியத் கட்டிடக் கலைஞர்களால் வடிவமைக்கப்பட்ட இம்மாளிகையானது 1952 இல் இறந்த சோய்பால்சன் மற்றும் சுக்பாதர் கல்லறைக்காகக் கட்டப்பட்டது. 1954 இல் கட்டி முடிக்கப்பட்ட இக்கல்லறையானது 2005ஆம் ஆண்டு புனரமைப்பிற்காக இடிக்கப்பட்டது அதன்பின் செங்கிஸ் கான், ஓகெடி கான் மற்றும் குப்லாய் கான் ஆகியோருக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு பெரிய நினைவுச்சின்னமும் இவ்விடத்தில் எழுப்பப்பட்டது. செங்கிஸ்கானின் முடிசூட்டு விழாவின் 800வது ஆண்டு விழாவையொட்டி, 2006ல் கட்டிடப் பணிகள் முடிக்கப்பட்டு, தற்போதைய அரசாங்க மாளிகை மற்றும் சுக்பாதர் சதுக்கம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

அரச மாளிகையில் திருத்தந்தை மங்கோலிய பயணத்தினை நினைவு கூரும் வண்ணம் அரச பதிவேட்டில் தனது வருகையைப் பதிவு செய்து கையெழுத்திட்டார். அரசுத்தலைவர் Ukhnaagiin Khürelsükh அவர்களைத் தனியாக சந்தித்து உரையாடிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மங்கோலிய அரசு அதிகாரிகள் மற்றும் தலைவர்களை அரசமாளிகையில் உள்ள IkhMongol என்னும் அறையில் சந்தித்தார். அரசியல் மற்றும் மதப்பிரதிநிதிகள், தொழில்துறையினர், அரசுத்தூதுவர்கள், சமூக மற்றும் கலாச்சாரப்பிரதிநிதிகள் என  ஏறக்குறைய 700 பேர் கூடியிருக்க, திருத்தந்தை தனது 43ஆவது திருத்தூதுப் பயணத்தின் முதல் உரையை ஆற்றத் தொடங்கினார். 

அதன்பின் தனது உரையை நிறைவுசெய்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அங்கிருந்து கிளம்பி அதே மாளிகையில் உள்ள மூன்றாவது மாடியின் ஓர் அறைக்கு வந்தார். அங்கு பாராளுமன்றத் தலைவர் Gombojav Zandanshatar, பிரதமர் Luvsannamsrai Oyun-Erdene என்பவர்களைத் தனிமையில் சந்தித்து உரையாடினார்.

அதன்பின் அங்கிருந்து 2.1கிமீ தூரம் காரில் பயணித்து திருப்பீடத்தூதரகம் வந்து சேர்ந்த திருத்தந்தை மதிய உணவினை உண்டு சற்று இளைப்பாறினார். 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

02 September 2023, 12:04