ஆண்டவர் எத்துணை இனியவர் என்று சுவைத்துப் பாருங்கள்
ஜான் போஸ்கோ - வத்திக்கான்
மங்கோலிய ஆயர்கள், குருக்கள், மறைப்பணியாளர்கள், துறவியர்கள் மற்றும் மேய்ப்புப் பணியாளர்களுக்குத் திருத்தந்தை வழங்கிய உரை
அன்பு சகோதர சகோதரிகளே பிற்பகல் வணக்கம்! ஆயர் அவர்களின் கனிவான வார்த்தைகளுக்கு நன்றி. அருள்சகோதரி சால்வியா, அருள்தந்தை சஞ்சாசாவ் மற்றும் ரூபினா ஆகிய உங்களின் சாட்சியப் பகிர்விற்கு நன்றி. நான் உங்களோடு இருப்பதில் மகிழ்ச்சி. நற்செய்தியின் மகிழ்ச்சிதான் நீங்கள் இங்கே இருப்பதற்கும், பொதுநிலையின சகோதர சகோதரிகளோடு இருப்பதற்கும், உங்களை அர்ப்பணித்துக் கொள்வதற்கும், ஆண்டவருக்கும் மற்றவர்களுக்கும் பணிபுரிய உங்களை உந்தித்தள்ளியுள்ளது. இதற்காக நான் ஆண்டவருக்கு அழகிய புகழ்ச்சி செபமான திருப்பாடல் 34ன் வழியாக நன்றி கூறுகின்றேன். இத்திருப்பாடலில் இருந்தே சில கருத்துக்களை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். இத்திருப்பாடல் (திபா-34,9) ஆண்டவர் எத்துணை இனியவர் என்று சுவைத்துப்பார்க்க நமக்கு அழைப்பு விடுக்கின்றது.
ஆண்டவரின் மகிழ்ச்சியும் நன்மைத்தனமும் விரைந்து ஓடுபவை அல்ல, அவைகள் நம்மோடு தங்கி, நம்முடைய வாழ்க்கைக்கு சுவை அளிக்கின்றன. புதிய வழியில் மற்றவைகளைப் பார்க்க வைக்கின்றன. நற்செய்திக்காக வாழ்வை செலவழிப்பது என்பது தான் கிறிஸ்தவ மறைபரப்பு அழைத்தலை அழகாக வரையறுப்பதாகும்.
இந்த பேராலயத்தை கட்டியெழுப்பிய மங்கோலிய தலத்திருஅவையின் முன்னோடியான திருத்தந்தையின் அப்போஸ்தலிக்க பிரதிநிதி ஆயர் வென்செஸ்லாவோ செல்கா பதில்லா அவர்களை நினைவுகூர்கின்றேன். இங்கே கிறிஸ்தவ நம்பிக்கை பண்டைய வேர்களை கொண்டிருக்கின்றது. நற்செய்திக்கான மிகப்பெரிய வரலாற்று ஆர்வம் முதலில் மரியாயின் மாசற்ற திருஇருதய சபை மறைப்பணியாளர்களால் புதுவாழ்வு பெற்றது. இப்பணியில் மற்ற நிறுவனங்களின் உறுப்பினர்கள், மறைமாவட்ட குருக்கள் மற்றும் பொதுநிலை மறைப்பணியாளர்களும் அடங்குவர். இவர்கள் அனைவரிலும் அருள்தந்தை ஸ்டீபன் செயோங் அய்யோன் அவர்களின் ஆற்றலையும் ஆர்வத்தையும் குறித்துக் காட்ட விரும்புகின்றேன்.
இயேசுவை நாம் சந்திக்கும்போதும், தொடும்போதும் நாம் கடவுளின் இதமான அன்பை சுவைக்கின்றோம். நம்முடைய வாழ்வில் அனுபவிக்கின்றோம். ஆம் இயேசுதான் அனைத்து மக்களுக்குமான நற்செய்தி. இதனைத்தான் திருஅவை தொடர்ந்து சுவாசித்துக் கொண்டும் அறிவித்துக் கொண்டும் இருக்கின்றது. கிறிஸ்தவ வாழ்வு ஆண்டவரின் திருமுகத்தை தியானிப்பதால் பிறக்கின்றது. அன்றாடம் இயேசுவை நாம் நற்கருணையிருலும் இறைவார்த்தையிலும், மற்றவர்களின் முகங்களிலும் காண வேண்டும். தேவையில் இருப்போர் மற்றும் ஏழைகளில் இயேசு பிரசன்னமாயிருக்கிறார்.
நல்ல சமாரியரான இயேசு
மங்கோலியாவில் கடந்த 31 ஆண்டுகால கிறிஸ்தவத்தின் இருப்பில் நல்ல சமாரியரான இயேசுவின் முகத்தை பிரதிபலிப்பதற்கு உங்களுடைய பிறரன்புப் பணிகளின் முன்னெடுப்புகளில் ஏராளமான ஆற்றலை செலவழித்துள்ளீர்கள். சமூக சேவை மற்றும் கல்வி பணிகள் வழியாக பலருக்கு பலன் அளித்திருக்கின்றீர்கள். அதே வேளையில் ஆண்டவரை சுவைத்துப் பாருங்கள், என உங்களை கேட்டுக்கொள்கின்றேன். இல்லையெனில் நம்முடைய வலிமை தோற்றுவிடும், நம்முடைய மேய்ப்புப்பணிகள் விரக்தியையும் தொய்வையும் ஏற்படுத்தி பாதிப்புக்குள்ளாகும். நாம் நற்கருணை பேழையின் முன்பாக அமைதியான ஆராதனையில் கிறிஸ்துவின் முகத்தை தியானித்திருப்போமானால் நாம் பணிபுரிவோரின் முகங்களில் கிறிஸ்துவைக் காண்போம். இவ்வனுபவம் உள்ளார்ந்த மகிழ்வையும், இடர்பாடுகளுக்கு மத்தியில் உள்மனஅமைதியையும் நமக்கு அளிக்கும். எப்போதும் ஓடிக்கொண்டும், திட்டங்களை செயல்படுத்திக் கொண்டும் இருப்பவர்களாக இல்லாது நமது தொடக்க அழைப்பிற்கு திரும்பி வருவோம். அவருடைய பிரசன்னத்தை சுவைப்போம். ஏனெனில் அவரே நமக்கு புதையல்.
நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து தனது சீடர்களை உலகில் அரசியல் கொள்கைகளை பரப்புவதற்காக அனுப்பவில்லை. மாறாக தந்தையாம் கடவுளுடனான உறவின் புதிய தன்மைக்கு சான்றுபகரவே அனுப்பினார். இதுதான் ஒவ்வொரு தனிப்பட்ட மற்றும் மக்களுக்கான சகோதரத்துவத்தின் உறுதியான அடிப்படை ஆதாரம் ஆகும். இப்பணியை ஆற்றுவதற்கு கிறிஸ்து தனது திருஅவையை மனித உடலின் பல்வேறு உறுப்பினர்களின் ஒருங்கிணைந்த இயங்குதலை நினைவூட்டும் வண்ணம் அமைத்திருக்கின்றார். அவர்தான் நம்மை தொடர்ந்து வழிநடத்தும் தலைவர்.
ஆயர் என்பவர் நல்லாயன் இயேசுவின் அடையாளம்
மங்கோலியாவில் உள்ள தூய மக்களே, ஆன்மிக கொடைகளின் முழுமையை கொண்டிருங்கள். உங்களின் ஆயரை ஒரு மேலாளராக பார்க்காமல் வாழும் நல்ல ஆயனான கிறிஸ்துவின் அடையாளமாக பாருங்கள். ஒன்றிணைதல் என்கிற வார்த்தையை அழுத்திக்கூற விரும்புகின்றேன். திருஅவையை வெறுமனே செயல்பாட்டு ரீதியாக புரிந்துகொள்ளக்கூடாது. மாறாக ஆன்மிக கொள்கைகளின் அடிப்படையில் புரிந்துகொள்ள வேண்டும். அங்கே இயேசு ஆயரின் வடிவில் பிரச்சன்னமாகி மறையுடலின் ஒற்றுமையை உறுதிப்படுத்துகின்றார். திருஅவையில் ஒற்றுமை என்பது ஒழுங்கு மற்றும் மதிப்பின் அடிப்படையிலானது அல்ல, மாறாக ஆண்டவர் மீதான நம்பிக்கை மற்றும் அன்பைப் பொறுத்தது.
அன்பான மறைப்பணியாளர்களே, மங்கோலியாவில் அவருடைய அன்பிற்கு சாட்சியாக உங்களை அழைத்த கிறிஸ்துவிற்கு முழுமையாக உங்களை அளிப்பதன் அழகை சுவைத்துப் பாருங்கள். ஒருமைப்பாட்டை வளர்ப்பதன் வழியாக இதனை தொடர்ந்து செய்யுங்கள். தினசரி செபத்திற்கு நேரம் ஒதுக்குங்கள். இது இறைவனிடமிருந்து ஆறுதலை உங்களுக்கு பெற்றுத்தரும். ஆண்டவருடனான நெருக்கம் திருப்பாடல் 34 கூறுவதைப்போல அவருக்கு அஞ்சுவோருக்கு எதுவும் தேவையில்லை. அவரை தேடுவோர்க்கு குறையேதும் இருக்காது. மறைப்பணியாளர்களின் குறைகளும் தவறுகளும் நம்பிக்கையுள்ள மக்களைப் பாதிக்கும். மறைப்பணியாளர்கள் கவலையின் சுமைகளிலிருந்து விடுபட்டவர்களுமில்லை. ஏனெனில் இது மனித நிலையின் ஒரு பகுதி.
அன்பு சகோதர சகோதரிகளே உங்களுடைய மறைபரப்புப்பணி சீடத்துவ பயணத்தில், உங்களுக்கு உறுதியான துணை நமது விண்ணகத் தாய், அவர் தன்னுடைய மென்மையான அக்கறை மிகுந்த இருப்பை உங்களுக்கு அளிப்பார். குறைவான எண்ணிக்கை, குறைவான வெற்றி இவைகளைக் குறித்து கவலைப்படாதீர்கள். இந்நிலையிலும் கடவுள் நம்மில் செயலாற்றுகின்றார். நமது பார்வையை மரியாவிடம் வைப்போம். நற்செய்திக்கு சான்று பகர, புதுப்பிக்கப்பட்ட ஆர்வம் மற்றும் அளவறற அன்பை அன்னையிடம் கேட்போம். முன்னோக்கிச் செல்லுங்கள். கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்