பல்சமயத் தலைவர்களின் செய்தி
மெரினா ராஜ் - வத்திக்கான்
பல்சமயத்தலைவர்களின் செய்தி
பல்சமய மற்றும் கிறிஸ்தவ ஒன்றிப்புக்கூட்டமானது உலான்பாதரின் ஹன் திரையரங்கில் 11 பல்சமயத்தலைவர்களின் வாழ்த்துரையுடன் ஆரம்பமானது.மனித உடன்பிறந்த உணர்வு, மற்றும் மனிதகுல மேம்பாட்டிற்காக ஒன்றுகூடிய இத்தலைவர்கள் ஒவ்வொருவரும் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டு திருத்தந்தையை வாழ்த்தினர். மங்கோலிய மக்களின் பாரம்பரிய ஜெர் இல்லத்தைப் போலவே, ஒவ்வொரு மனிதனும் அமைதி மற்றும் நல்லிணக்கத்துடன் ஒன்றிணைந்து வாழ கற்றுக்கொள்ள வேண்டும் என்பதே ஒவ்வொருவரின் முக்கிய நோக்கமாக இருந்தது.
மங்கோலிய புத்தமதத் தலைவர் Gabju Choijamts Dembere அவர்கள் பொது நோக்கத்திற்கான செபங்களும் செயல்பாடுகளும் மனிதகுலத்தின் நல்வாழ்விற்காகவே என்று எடுத்துரைத்தார்.
மனிதாபிமானமும் கருணையும் கொண்ட சமுதாயத்தை உருவாக்குங்கள் என்று வலியுறுத்திய Gandan Tegchenling துறவு இல்லத்தலைவர் Khamba Nomun Khan அவர்கள், மனிதகுலம் தகவல் தொழில்நுட்பத்தில் ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ள உலகில், கருணை, இரக்கம், ஒழுக்கம் போன்ற முக்கியமான உள் மதிப்புகளை இழக்கும் அபாயம் உள்ளது என்றும், சகிப்புத்தன்மை, மன்னிப்பு, கர்மா எனும் உள்மதிப்புக்களால் அனைத்து பாரம்பரிய மதங்களின் நோக்கங்களும் செயல்பாடுகளும் நம் மனதை நிரப்ப வேண்டும் என்றும் எடுத்துரைத்தார்.
மங்கோலியாவில் வழிபாட்டு சுதந்திரம்
Zuun Khuree Dashicholing, புத்த துறவு இல்லத்தலைவர் Danbajav Choijilav, அவர்கள், மங்கோலிய ஜெர் கூடாரத்தை தாங்க இரண்டு தூண்கள் இருப்பது போல, அமைதியும் நல்லிணக்கமும் மனித வாழ்க்கையை நிலைநிறுத்தும் இரண்டு கொள்கைகள் என்பதை அடிக்கோடிட்டுக் காட்டினார். மங்கோலியாவின் Sciamani வழிபாட்டு முறையின் ஒன்றியத்தலைவர் D. Jargalsaikhan அவர்கள், பெரிய உலகின் ஒரு சிறிய பகுதியான மனித வாழ்க்கை என்பது, சுதந்திரம், மனிதன், இயற்கையோடு இணைந்த வாழ்வு ஆகியவற்றின் அனைத்து செயல்முறைகளையும் கொண்டுள்ளது என்றும் கூறினார்.
மங்கோலிய மக்கள்தொகையில் ஏறக்குறைய 3விழுக்காட்டு மக்களைக் கொண்ட இச்சமயத்தின் தலைவர் பூமிக்கும் பிரபஞ்சத்திற்கும் இடையிலான தொப்புள்கொடி உறவின் வெளிப்பாடே நிலைவாழ்வான விண்ணகம் என்று வரையறுத்துள்ளார். இஸ்லாம் மதத்தை விட சில ஆயிரம் குறைவான எண்ணிக்கையில் இவ்வழிபாட்டு முறையை மக்கள் பின்தொடர்கின்றனர். மங்கோலியாவில் மிகவும் நடைமுறையில் உள்ள மூன்றாவது மதம் Sciamani.
கிமு இரண்டாம் மற்றும் முதல் நூற்றாண்டுகளுக்கு இடையில் மங்கோலியாவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட வழிபாட்டுச் சுதந்திரம் 53 விழுக்காடு மங்கோலிய மக்களால் நடைமுறைப்படுத்தப்பட்டது, 1992 இல் கம்யூனிசத்தின் முடிவிற்குப் பிறகு மத சுதந்திரத்தை மீட்டெடுப்பதன் வழியாக புத்தமதம் மற்றும் ஏனைய மதங்கள் மீண்டும் உருவாகத்தொடங்கின. துன்புறுத்தல்கள் மற்றும் சமயமுடக்கல்கள் நிறைந்த மங்கோலியாவில் இரஷ்ய ஆர்த்தடாக்ஸ் ஆலயமும் உள்ளது. இவ்வாலயத்தின் பங்குத்தந்தையும் இந்த பல்சமய மற்றும் கிறிஸ்தவ ஒன்றிப்புக் கூட்டத்தில் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்