தேடுதல்

மர்சேய்லில் திருத்தந்தையின் இரண்டாம் நாள் பயண நிகழ்வுகள்

செப்டம்பர் 23 சனிக்கிழமை மர்சேய்ல் உள்ளுர் நேரம் காலை 8.45 மணிக்கு அதாவது இந்திய இலங்கை நேரம் மதியம் 12.15 மணிக்கு பேராயர் இல்லத்தின் தோட்டப்பகுதியில் பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் ஏழைகள் சிலரை சந்தித்து உரையாடினார்.

மெரினா ராஜ் - வத்திக்கான்

மத்திய தரைக்கடல் கூட்டத்தின் நிறைவு நாள்

செப்டம்பர் 23 சனிக்கிழமை மர்சேய்ல் உள்ளுர் நேரம் காலை 8.45 மணிக்கு அதாவது இந்திய இலங்கை நேரம் மதியம் 12.15 மணிக்கு பேராயர் இல்லத்தின் தோட்டப்பகுதியில் பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் ஏழைகள் சிலரை சந்தித்து உரையாடினார். அதன்பின் அங்கிருந்து 2கிமீ தூரம் காரில் பயணித்து Palais du Pharo என்னும் இடத்தை வந்தடைந்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

Palais du Pharo கட்டிடம்

பலாய்ஸ் து பாரோ என்னும் இடம் மேற்கே பழைய துறைமுகத்திற்கு அருகில் ப்ரோமண்டரியில் அமைந்துள்ளது. 1852 ஆம் ஆண்டில், மர்சேய்லுக்கு வருகை தந்த நெப்போலியன் போனபார்ட்டின் மருமகன், இளம் லூயிஸ் நெப்போலியன், இவ்விடத்தை  மிகவும் விரும்பி, சுவிட்சர்லாந்து-பிரெஞ்சு கட்டிடக் கலைஞர் Samuel Vaucher இடம் தனது மனைவி யூஜெனியாவிற்கு பரிசாக அளிக்க ஓர் அரண்மனையைக் கட்டும்படி பணித்தார். கட்டிடக் கலைஞர் வௌச்சர், அவர் கேட்டுக்கொண்டதற்கிணங்க மத்தியதரைக் கடல்  அருகில் தோட்டங்களைக் கொண்ட ஒரு அழகான, கம்பீரமான, ஆடம்பரமான வீட்டை வடிவமைத்தார். இருப்பினும், மூன்றாம் நெப்போலியனான இளம் லூயிஸ் நெப்போலியன் ஆட்சிக்கு வருவதற்கு முன்பே இறந்துவிட கைம்பெண்ணான பேரரசி யுஜெனியா அந்த  மாளிகையை மர்சேய்ல் நகரத்திற்கு நன்கொடையாக வழங்கினார், 1904 இல் கட்டிடம் மருத்துவப் பள்ளியாக மாற்றப்பட்டது. 1997 ஆம் ஆண்டு முதல், மர்சேய்லின் அற்புதமான காட்சியை வழங்கும் Jardin Emile Duclaux கட்டடக்கலை வளாகம், மாநாடுகள், நிகழ்வுகள், கண்காட்சிகள், கலை கண்காட்சிகள் மற்றும் பல அரசு நிகழ்வுகள் நடக்கும் இடமாகவும் திகழ்கின்றது. 2013 ஆம் ஆண்டு புதுப்பிக்கப்பட்ட இக்கட்டிடமானது மேம்படுத்தப்பட்டு விரிவாக்கப்பட்டது.

Palais du Pharo கட்டிடத்தை வந்தடைந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பிரான்ஸ் ஆயர்கள், மத்திய தரைக்கடல் மறைமாவட்ட ஆயர்கள், இளையோர், அரசு அதிகாரிகள், என ஏறக்குறைய 900 பேர் கூடியிருந்த இடத்திற்கு வந்தார். அரங்கத்தின் நுழைவாயிலில் அரசுத்தலைவர் மர்சேய்ல் பேராயர், நகர மேயர், அவர்களால் வரவேற்கப்பட்டார். இரு சிறார் மலர்களைத் திருத்தந்தைக்கு பரிசாக அளித்து மகிழ்ந்தனர். மர்சேய்ல்  உயர் மறைமாவட்ட பேராயர் கர்தினால் Jean-Marc Aveline அவர்களின் வாழ்த்துரையுடன்  ஆரம்பமான கூட்டத்தில், மத்திய தரைக்கடல் கூட்டங்கள் பற்றிய சிறு காணொளி ஒன்று ஒளிபரப்பப்பட்டது. அதனைத் தொடர்ந்து இவ்வாண்டு நடைபெற்ற மத்திய தரைக்கடல் கூட்டங்கள் பற்றிய செயல்பாடுகளின் தொகுப்பின் அடிப்படையில் திருத்தந்தையிடம் இத்தாலியைச் ச்சார்ந்த செரேனா என்பவரும், ஆயர் ஒருவரும் தங்களது கருத்துக்களை எடுத்துரைத்து சில கேள்விகளையும் எழுப்பினர். அதனை தொடர்ந்து திருத்தந்தை தனது மர்சேய்ல் திருத்தூதுப் பயணத்தின் முக்கிய நோக்கமான மத்திய தரைக்கடல் கூட்டங்களில் பங்கேற்போருக்கான தனது உரையினைத் துவக்கினார் திருத்தந்தையின் உரைச் சுருக்கத்திற்கு இப்போது செவிசாய்ப்போம்.

இவ்வாறு தனது உரையை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் நிறைவு செய்ய, பிரான்ஸ் ஆயர் பேரவை தலைவர் தனது நன்றியினைத் திருத்தந்தைக்கு தெரிவித்தார். இறுதிப்பாடலுடன் கூட்டம் இனிதே நிறைவுற அங்கிருந்து கிளம்பிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மத்திய தரைக்கடல் மறைமாவட்ட ஆயர்களை வாழ்த்தி விடைபெற்றார்.

மத்திய தரைக்கடல் கூட்டங்கள்  நடைபெற்ற Palais du Pharo கட்டிடத்தில் உள்ள Salon d’honneur du Maire என்னுமிடத்தில் பிரான்ஸ் குடியரசின் அரசுத்தலைவர் Emmanuel Macron அவர்களைக் குடும்பத்தாருடன் சந்தித்து உரையாடினார். பரிசுப்பொருள்கள் பகிரப்பட்ட பின்னர் எடுக்கப்பட்ட புகைப்படத்திற்குப் பின் திருத்தந்தை அவர்களுக்கு, ஆசீர் அளித்து பேராயர் இல்லம் நோக்கிப் புறப்பட்டார். Palais du Pharo கட்டிடத்தை விட்டு மர்சேய்ல் உள்ளூர் நேரம் காலை 12.00 மணிக்கு அதாவது இந்திய இலங்கை நேரம் பிற்பகல் 3.30 மணிக்கு புறப்பட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 2 கிமீ தூரம் காரில் பயணித்து பேராயர் இல்லம் வந்து சேர்ந்து மதிய உணவிற்குப் பின் சற்று இளைப்பாறினார்.

செப்டம்பர் 23 சனிக்கிழமை காலை மத்திய தரைக்கடல் கூட்டங்களில் பங்கேற்போருக்கான உரையை நிறைவு செய்தும் அரசுத்தலைவர் மற்றும் அவரது குடும்பத்தாரை சந்தித்து உரையாடியும் தனது 44ஆவது மர்சேய்ல் திருத்தூதுப் பயணத்தின் இரண்டாம் நாளின் பாதியை நிறைவு செய்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மாலையில் வெலோட்ரோம் அரங்கத்தில் திருப்பலி நிறைவேற்றி தனது இரண்டாம் நாள் பயண நிகழ்வை நிறைவு செய்ய உள்ளார்.

 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

23 September 2023, 10:55