தேடுதல்

சந்திப்புப் பார்வைகளைக் கொண்டவர்களாக வாழ்வோம்

ஜான் போஸ்கோ – வத்திக்கான்

மர்சேய்ல் மறைமாவட்ட அருள்பணியாளர்கள் மற்றும் துறவறாத்தாருக்கு திருத்தந்தை வழங்கிய உரை.

அன்பு சகோதர சகோதரிகளே காலை வணக்கம்!

இச்செப நேரத்தை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன். கர்தினால் ஜீன் மார்க் அவேலின் அவருடைய வரவேற்பிற்கு நன்றி. பேராயர் எரிக் தெ மௌலின்ஸ் பியாபோர்ட், சகோதர ஆயர்கள், இல்லத்தந்தையர்கள் மற்றும் கடவுளையும், அயலாரையும் சந்திக்கும் சமூகத்தை கட்டியெழுப்புவதில் பரந்த மனத்தோடும், அர்ப்பணிப்போடும் இந்த உயர்மறைமாவட்டத்தில் பணிபுரியும் குருக்கள், திருத்தொண்டர்கள், குருமட மாணவர்கள் மற்றும் துறவற சகோதர சகோதரிகள் ஆகிய உங்கள் அனைவரையும் வாழ்த்துகின்றேன். உங்களுடைய பிரசன்னத்திற்காகவும், பணிகளுக்காவும் மற்றும் செபத்திற்காகவும் நன்றி.

புனிதர்களான இயேசுவின் குழந்தை தெரசா, சார்லஸ் தெ போக்கால்டு, இரண்டாம் அருள் சின்னப்பர் என பலர் அன்னையின் திருத்தலம் நோக்கி திருப்பயணம் மேற்கொண்டுள்ளனர். எனவே அன்னையின் முக்காட்டின் கீழ் மத்திய தரைக்கடலின் பலன்கள், நம்முடைய இதயங்களின் எதிர்பார்ப்புகள் மற்றும் நம்பிக்கைகளை ஒப்புக்கொடுப்போம்.

திருவிவிலியத்தில் இறைவாக்கினர் செப்பனியா மகிழ்ச்சி மற்றும் நம்பிக்கையை வலியுறுத்தி, கடவுளாகிய ஆண்டவர் நமக்கு வெகுதொலைவில் இல்லை, அவர் இங்கு நம் அருகில் நம்மை மீட்பதற்காக இருக்கின்றார் என்று எடுத்துரைக்கின்றார். ஒருவழியில் இந்த செய்தி இந்த திருத்தலத்தின் வரலாறு மற்றும் அது எதனை பிரதிபலிக்கிறது என்பதனை நமக்கு நினைவுபடுத்துகின்றது. உண்மையாகவே, இது புதுமையின் நினைவாகவோ அல்லது ஒரு குறிப்பிட்ட காட்சி அளித்ததன் நினைவாகவோ நிறுவப்படவில்லை. மாறாக பதிமூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்த கடவுளின் மக்கள் இம்மலையில் தங்களின் பாதுகாவலியாக மரியாவையும், ஆண்டவரின் பிரசன்னத்தை அந்த அன்னையின் கண்கள் வழியாகவும் கண்டறிந்தனர். ஆகவே தான் பல நூற்றாண்டுகளாக மர்சேய்ல் மக்கள் சிறப்பாக மத்திய தரைக்கடலில் பயணம் செய்கிறவர்கள் இங்கே செபிப்பதற்காக வருகின்றார்கள்.

இன்றுவரை நம்முடைய நல்ல தாயாம் அன்னை மரியா எல்லா மக்களுக்கும் மிகவும் மென்மையான சந்திப்புப் பார்வைகளை கொண்டுவருகிறார். முதலாவது, அன்னை மரியாவின் அன்புக்கு உரியவரும், கண்களில் அன்பை தியானிப்பவருமான இயேசுவைப் பார்க்கும் பார்வை. மற்றொன்று எல்லா வயது மற்றும் நிலையில் உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள்  மீதான பார்வை. நமது அன்னையின் பாதத்தில் எரியும் மெழுகுதிரியை வைத்து செபத்தின் தொடக்கத்தில் நாம் நினைவுகூர்ந்ததைப்போல அன்னை மரியா அனைத்தையும் ஒன்றுசேர்த்து கடவுளிடம் கொண்டு வருகிறார். மக்களின் ஒரு உண்மையான சந்திப்புப்புள்ளியாக மர்சேய்ல் இருக்கின்றது. மேற்குறிப்பிட்ட இரு பார்வைகளின் சந்திப்புகளைக் குறித்து நான் உங்களோடு சிந்திக்க விரும்புகின்றேன். ஏனெனில் இவ்விரு பார்வைகளும் நம்முடைய பணிகளில் மரியன்னையின் பரிமாணத்தை மிக நன்றாக வெளிப்படுத்துகின்றன. அருள்பணியாளர்கள் மற்றும் துறவறத்தாராகிய நாம் இயேசுவின் பார்வையை மக்கள் உணர உதவி செய்யவும், அதேநேரத்தில் நம்முடைய சகோதர சகோதரிகளின் பார்வைகளை இயேசுவிடம் கொண்டுவரவும் அழைக்கப்பட்டுள்ளோம். முதலாவதில் நாம் இரக்கத்தை தாங்கிவருபவர்கள் இரண்டாவதில் நாம் பரிந்துரையாளர்கள்.

முதல் பார்வை:

அனைத்து ஆண்களையும் பெண்களையும் மென்மையாக அரவணைக்கும் இயேசுவின் பார்வை. அவர் நம்மை தலைமுதல் பாதம்வரை தீவிரமாக உற்றுநோக்குகிறார், தீர்ப்பிடுவதற்காக அல்ல மாறாக தாழ்நிலையில் இருப்பவர்களை உயர்த்துவதற்காக. அவருடைய பார்வை என்பது மரியாவின் கண்களில் ஜொலிக்கும் மென்மை நிரம்பிய பார்வையாகும். இப்பார்வையை பிரதிபலிக்க அழைக்கப்பட்டுள்ள நாம், கட்டாயம் தாழ்ச்சியுள்ளவர்களாக இரக்கமுள்ளவர்களாக இருக்க வேண்டும். அதன்வழியாக  நமது பொறுமையும் ஊக்கமும் கொண்டு தொலைந்த ஆட்டை  தனது தோள்களில் சுமந்து, அது திரும்பி வந்ததற்காக மகிழ்வுடன் விழா கொண்டாடும் நல்லாயனின் நன்மைத் தனத்தை கொண்டவர்களாக நம்மை நாமே உருவாக்க முடியும்.

அன்பு சகோதர சகோதரிகளே கடவுள் நம்மீது காட்டிய பார்வையை உணர்ந்த நாம் இதனை நினைவுகூறாமல் ஒரு நாளையும் கடந்து செல்லக்கூடாது. கடவுளின் இப்பார்வையை நம்முடையதாக்கி இரக்கத்தின் மனிதர்களாக வாழ்வோம். நமது ஆலயங்கள் மற்றும் இல்லங்களை மட்டுமல்ல நமது இதயக் கதவுகளையும் திறப்போம். குறிப்பாக ஆண்டவரின் முகத்தை இரக்கம், கனிவு மற்றும் ஏற்றுக்கொள்ளுதல் வழியாக வெளிப்படுத்த நமது இதயங்களை திறப்போம். உங்களை அணுகி வருபவர்கள், தாழ்மை, மகிழ்ச்சியினால் விளைந்த பலன்களைக் காண வேண்டும். வாழ்வில் காயப்பட்டுள்ள மக்கள் உங்கள் பார்வையில் ஒரு பாதுகாப்பான இணக்கத்தையும், அரவணைப்பில் ஊக்கத்தையும், அவர்களின் கண்ணீர் துடைக்கும் உங்கள் கரங்களில் அக்கறையையும் கண்டுகொள்ளட்டும். உங்களது பல்வேறு தினசரி கவலைகளுக்கு மத்தியிலும் கடவுளின் தந்தைக்குரிய தாய்க்குரிய பார்வையை குறைக்காதீர்கள் என உங்களை கேட்டுக் கொள்கிறேன். அவருடைய மன்னிப்பை தாராளமாக அளிப்பது என்பது விந்தையானது, பாவத்தின் சங்கிலிகளை அருளின் வழியாக விலக்குவது, தடைகள், வருத்தங்கள், வெறுப்புகள், தனியாக வெற்றிகொள்ள முடியாத பயங்கள் ஆகியவற்றிலிருந்து மக்களை விடுவிப்பது மிகவும் உயர்வானது. மகிழ்ச்சி மற்றும் துயர தருணங்களின் நேரத்திலும், ஒளிரும் வாழ்க்கையின் மகிழ்வை அருளடையாளங்களிலும், ஆறுதலிக்கும் பிரசன்னம், குணப்படுத்தும் கருணை, தொடரும் மென்மை ஆகிய எதிர்பாராத நம்பிக்கைகளை கடவுளின் பெயரால் கடத்தும் இந்த ஆச்சர்யத்தைக் கண்டறிவது அழகானது. அனைவருக்கும் குறிப்பாக பலவீனமான மற்றும் குறைவான வசதியுள்ளவர்களுடன் இணைந்து இருங்கள். ஒருபோதும் துன்புறுவோர் உங்களின் நெருக்கம் மற்றும் விவேகமான உடனிருப்பு இல்லாமல் இருக்கக்கூடாது. இதன் வழியாக நிகழ்காலத்தை வழிநடத்தும் இறைநம்பிக்கை, எதிர்காலத்தை திறந்துவிடும் நம்பிக்கை, எப்போதும் நிலைத்திருக்கும் பிறரன்பு ஆகியவை அவர்களிலும், உங்களிலும் வளரும். இதுதான் இயேசுவின் பார்வை இதை உங்களுடைய சகோதார சகோதரிகளுக்கு கொண்டு வாருங்கள்.

இரண்டாம் பார்வை:

இயேசுவை நோக்கி வரும் ஆண் மற்றும் பெண்களினுடையது. கானாவூர் திருமணத்தில் புதிதாக திருமணமான இரண்டு இளம்தம்பதிகளின் கவலையை  இயேசுவிற்கு முன் கொண்டு வந்த அன்னை மரியா போல, மற்றவர்களுக்காக பரிந்துரைக்கும் குரலாக நீங்கள் அழைக்கப்பட்டுள்ளீர்கள். இதன் வழியாக திருப்புகழ்மாலை செபித்தல், தினசரி இறைவார்த்தை மீதான தியானம், செபமாலை, பிற செபங்கள் மற்றும் திருநற்கருணை ஆராதனை அனைத்தும் உங்கள் பாதையின் பாதுகாப்பு முகங்களாக இருக்கும். நீங்கள் உங்களோடு துன்புறும் மக்களின் கண்கள், குரல்கள் மற்றும் கேள்விகளை திருப்பலி பீடத்திற்கும், நற்கருணைப்பேழைக்கும் அமைதியான உங்களின் அறைக்கும் கொண்டு செல்வீர்கள். நீங்கள் அவர்களின் உண்மையுள்ள பரிந்துரையாளர்களாக இப்பூமியின் வானதூதர்களாக அதாவது ஆண்டவரின் மகிமைக்கு முன்பாக அனைத்தையும் கொண்டுவரும் தூதுவர்களாக இருப்பீர்கள்.

மூன்று திருஉருவச்சிலைகள் உணர்த்தும் கருத்துக்கள்

சுருக்கமாக இந்த தியானத்தை, இத்திருத்தலத்தில் வணங்கப்படும் அன்னை மரியாவின் மூன்று திருஉருவச்சிலைகளை வைத்து எடுத்துரைக்க விரும்புகிறேன். முதலாவது கோபுரத்தின் உச்சியில் ஆசீர்வதிக்கும் குழந்தை இயேசுவைக் கரங்களில் தாங்கி உள்ள அன்னையின் பெரிய திருஉருவச்சிலை. மரியாவைப்போன்று இயேசுவின் அமைதியை எல்லா இடங்களிலும், ஒவ்வொரு குடும்பம் மற்றும் இதயத்திலும் கொண்டு வருவோம். இது இரக்கதின் பார்வை. இரண்டாவது திரு உருவம், கீழே சிற்றாலயத்தில் உள்ள மலர்கொத்துக்களைக் கொண்ட கன்னி மரியா திருஉருவம் ஆகும். இது ஒரு தாராளமனம் கொண்ட பொது நிலையினர் ஒருவரின் பரிசு. அன்னை மரியா குழந்தை இயேசுவை ஒரு கரத்தில் சுமந்து கொண்டு, அவருக்கு நம்மை காட்டுகின்றார். மற்றொரு கரத்தில் செங்கோலுக்கு பதிலாக மலர்கொத்து ஒன்றை பிடித்துள்ளார். இது மரியாள் தனது மகனை நமக்கு காணிக்கையாக கொடுக்கும்போதும், நம்மை அவருக்கு காணிக்கையாக கொடுக்கும்போதும் மலர்கொத்தில் உள்ள மலர்களைப்போல  நாம் ஒவ்வொருவரும் தனித்தன்மை உள்ள, அழகான தந்தையின் பார்வையில் விலையேறப்பெற்றவர்கள் என்பதனை எடுத்துரைக்கின்றது. மேலும் அன்னை மரியா எப்படி திருஅவையின் தாயாக, மாதிரியாக இருக்கின்றார் என்பதனையும் வெளிப்படுத்துகின்றது. இறுதியாக மூன்றாவது திருஉருவம், பீடத்தில் ஒளிரும் கதிர்களால் நம்மை கவரும் அன்னை மரியாவின் திருஉருவம்.

அன்பு சகோதர சகோதரிகளே நாம் நம்மைக் கடந்து சென்று பகிரும் அளவிற்கு, தாழ்ச்சி, மகிழ்வான வாழ்வு, அப்போஸ்தலிக்க பேரார்வத்தில் வளமை என நற்செய்தின் ஒளியையும் அழகையும் பிரதிபலிக்கும் வாழும் நற்செய்தியாளர்களாக உருவாக வேண்டும். உலகெங்கும் இயேசு கிறிஸ்துவின் நற்செய்தியை பரப்ப இந்த உயரமான பகுதியிலிருந்து மறைபரப்புப்பணியாளர்களாக சென்றவர்கள் நமக்கு ஊக்கத்தின் ஆதாரமாக இருப்பார்களாக.

அன்பு நண்பர்களே நம்முடைய சகோதர சகோதரிகளுக்கு கடவுளின் பார்வையை கொண்டு வருவோம். அவர்களின் தாகத்தை கடவுளிடம் கொண்டு வருவோம். நற்செய்தியின் மகிழ்ச்சியை பரப்புவோம். இதுதான் நமது வாழ்வு. துன்பங்கள் மற்றும் தோல்விகள் இருந்தாலும் இது நம்பமுடியாத அளவிற்கு அழகானது. நம் அன்னையிடம் ஒன்றாக இணைந்து செபிப்போம். அவர் நம்முடன் இருப்பார் நம்மை பாதுகாப்பார். நான் என்னுடைய இதயத்திலிருந்து உங்களை ஆசீர்வதிக்கின்றேன். எனக்காக செபியுங்கள். நன்றி!    

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

23 September 2023, 11:03