தேடுதல்

திருத்தந்தை பிரான்சிஸ் திருத்தந்தை பிரான்சிஸ்  

செய்தித்தொடர்பாளர்களுடன் திருத்தந்தை பிரான்சிஸ்

ஏறக்குறைய 70 செய்தித்தொடர்பாளர்களுடன் மர்சேய்ல் திருத்தூதுப் பயணம் மேற்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மெரினா ராஜ் - வத்திக்கான்

செப்டம்பர் 22 வெள்ளிக்கிழமை உரோம் உள்ளூர் நேரம் பிற்பகல் 2.45 மணிக்கு அதாவது இந்திய இலங்கை நேரம் மாலை 6.15 மணிக்கு பிரான்சில் உள்ள மர்சேய்லுக்கு புறப்படுவதற்கு முன்பு வத்திக்கானில் உள்ள புனித அன்னை தெரசாவின் பிறரன்பு மறைப்பணியாளர்கள் சபையினரால் நடத்தப்படும் தோனோ தி மரியா இல்லத்தில் இருக்கும் பெண்கள் 20 பேர் அடங்கியக் குழுவைச் சந்தித்தார் திருத்தந்தை பிரான்சிஸ். அதன்பின் விமானத்தில் தன்னுடன் பயணித்த சமூகத்தொடர்பாளர்களுடன் உரையாடலில் ஈடுபட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தான் சொல்ல விரும்பும் அனைத்தையும் சொல்லும் துணிவு மர்சேய்லில் இருக்கும் என்று தான் நம்புவதாகவும் எடுத்துரைத்தார். மேலும் மர்சேய்ல் துறைமுகத்தை விமானம் நெருங்குகையில் மத்திய தரைக்கடலின் கதவு ஜன்னல் என்று குறிப்பிட்ட திருத்தந்தை அவர்கள், செய்தியாளர்களிடம் லாம்பதுசா புலம்பெயர்ந்தோர் அனுபவிக்கும் துயரங்கள் பற்றியும் பகிர்ந்து கொண்டார்.   

ஏறக்குறைய 70 செய்தித்தொடர்பாளர்களுடன் மர்சேய்ல் திருத்தூதுப் பயணம் மேற்கொண்ட திருத்தந்தை, புலம்பெயர்ந்தோருக்கு ஏற்படும் துன்பங்கள் அனைத்தும் மனிதாபிமானம் இல்லாததால் ஏற்படும் வலி என்றும், கொடுமை மற்றும் பயங்கரமான மனிதநேயமின்மை என்றும் அவற்றை அடிக்கோடிட்டுக் காட்டினார். மேலும் சில நாள்களுக்கு முன்பு காலமான பிரபலமான கொலம்பிய கலைஞரான பெர்னாண்டோ பொத்தேரோவுக்காக செபித்த திருத்தந்தை, பொத்தேரோவின் மகளுடன் காணொளியில் உரையாடி அவர்களுக்குத் தன் ஆறுதலையும் செபத்தையும் அளித்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

23 September 2023, 10:27