கடல் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கான நினைவுச்சின்னம்
மெரினா ராஜ் - வத்திக்கான்
லா கார்தே திருத்தலத்தில் மறைமாவட்ட அருள்பணியாளர்கள் மற்றும் துறவறத்தாரை சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை அங்கிருந்து புறப்பட்டு 200 மீட்டர் தொலைவிலுள்ள கடல்விபத்தில் உயிரிழந்த மாலுமிகள் மீனவர்கள் மற்றும் புலம்பெயர்ந்தோர் நினைவிடத்திற்குச் சென்றார்.
கடல்விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கான நினைவுச்சின்னம், மர்சேய்லின் 7வது பிரிவில் புனித ஜீன் கோட்டைக்கு எதிரில் Palais du Pharo தோட்டத்தில் அமைந்துள்ளது. 1913 ஆம் ஆண்டில், Bouches-du-Rhône இன் அதிகாரப்பூர்வ அதிகாரியான (செனட்டரான )Paul Peytral, கடல் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு நினைவுச்சின்னத்தை உருவாக்க முதல் குழுவை ஏற்படுத்தினார். இந்த பணிக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட சிற்பி அகஸ்டே கார்லி, அவரின் எதிர்பார்ப்புகளை நிவர்த்தி செய்யாததால், 1914 ஆம் ஆண்டில், இரண்டாவது குழு உருவாக்கப்பட்டது, இந்தத் திட்டத்திற்காக சிற்பி ஆண்ட்ரே அலெக்ஸாண்ட்ரே வெர்டில்ஹான் தேர்ந்தெடுக்கப்பட்டார். உலகப் போர் குறுக்கீட்டால் 1923ஆம் ஆண்டு ஜூலை 14ஆம் நாள் இந்த நினைவுச்சின்னம் திறக்கப்பட்டது. வெண்கலத்தால் செய்யப்பட்ட மூன்று மாலுமிகளை சித்தரிக்கும் இந்த நினைவுச் சின்னத்தில், முதலாமவர் ஒரு கையை உயர்த்திப் பிடித்தும் மற்றொரு கையால் இரண்டாமவரைத் தாங்கி இருப்பது போன்றும், மூன்றாமவர் கடல் அலைகளில் தத்தளிக்கும் படகில் இருந்து வீழ்ந்து மூழ்குவது போன்றும் சித்தரிக்கப்பட்டுள்ளது. இந்த நினைவுச் சின்னமானது 2009ஆம் ஆண்டு ஜூலை 23 முதல் நகரின் வரலாற்று நினைவுச்சின்னங்களின் ஒரு பகுதியாக சேர்க்கப்பட்டுள்ளது.
மர்சேய்ல் உள்ளூர் நேரம் மாலை 6 மணிக்கு அதாவது இந்திய இலங்கை நேரம் இரவு 9.30 மணிக்கு நினைவிடத்தை வந்தடைந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை மர்சேய்ல் உயர்மறைமாவட்ட பேராயர் கர்தினால் Jean-Marc Aveline அவர்கள் வரவேற்றார். Marseille Espérance, Stella Maris, Caritas Gap- Briançon, புலம்பெயர்ந்தோர்க்கான மறைமாவட்ட மேய்ப்புப்பணி அமைப்பு, கடலில் இறந்த புலம்பெயர்ந்தோர்க்காக செபிக்கும் கடல்சார் மீட்புப்பணியினர் ஆகியவற்றின் தலைவர்கள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.
பாடல்களுடன் ஆரம்பமான கூட்டத்தில் பேராயரின் வாழ்த்து மொழியினைத் தொடர்ந்து திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தனது இரண்டாவது உரையினைக் கூடியிருந்த மதத்தலைவர்களுக்கு எடுத்துரைத்தார் திருத்தந்தையின் உரைச்சுருக்கம் இதோ.
புலம்பெயர்ந்தோரை நன்கு கவனித்துக் கொள்ளுங்கள் அவர்களுக்கான பணியில் துணிவுடன் முன்னேறிச்செல்லுங்கள் என்று கூறியத் திருத்தந்தையின் உரையினைத் தொடர்ந்து, புலம்பெயர்ந்தோர் சார்பில் இளையோர் ஒருவர் திருத்தந்தையின் முன் தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார். அதன்பின் பாடப்பட்டப் பாடல்களைத் தொடர்ந்து, கூடியிருந்த அமைப்பின் பிரதிநிதிகள் நம்பிக்கையாளர் மன்றாட்டுக்களை எடுத்துரைத்தனர். இறுதியாக திருத்தந்தை கூடியிருந்த அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரை அளித்தார். அதன்பின் புலம்பெயர்ந்த இளையோர் இருவருடன் கடல் விபத்தில் உயிரிழந்த புலம்பெயர்ந்தோர்க்காக எழுப்பப்பட்ட நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார் திருத்தந்தை. மதத்தலைவர்களை ஒருவர் பின் ஒருவராக சந்தித்து வாழ்த்திய திருத்தந்தை அவர்கள், அங்கிருந்து 1கிமீ தூரம் காரில் பயணித்து பேராயரின் இல்லத்திற்கு வந்து சேர்ந்தார். பேராயர் இல்லத்தில் இரவு உணவினை உண்டு தனது முதல் நாள் பயண நிகழ்வினை மர்சேய்லில் நிறைவு செய்து நித்திரைக்குச் சென்றார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்