தேடுதல்

திருத்தந்தையின் புதன் பொதுமறைக்கல்வி உரை - மர்சேய்ல் பயண அனுபவம்

செப்டம்பர் 27 புதன்கிழமை வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் கூடியிருந்த மக்களுக்குப் புதன் மறைக்கல்வி உரையினை ஆற்றிய திருத்தந்தைபிரான்சிஸ் அவர்கள், கடந்த வாரம் தான் மேற்கொண்ட 44 ஆவது மர்சேய்ல் திருத்தூதுப் பயண அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்.

மெரினா ராஜ் – வத்திக்கான்

செப்டம்பர் 27 புதன்கிழமை வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் கூடியிருந்த மக்களுக்குப் புதன் மறைக்கல்வி உரையினை ஆற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கடந்த வாரம் தான் மேற்கொண்ட 44 ஆவது மர்சேய்ல் திருத்தூதுப் பயண அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்.

மத்தேயு 4: 12- 16 இறைவார்த்தைகள் பல்வேறு மொழிகளில் வாசித்தளிக்கப்பட்டன.

மத்தேயு 4: 12- 16

யோவான் கைது செய்யப்பட்டதை இயேசு கேள்விப்பட்டுக் கலிலேயாவுக்குப் புறப்பட்டுச் சென்றார். அவர் நாசரேத்தைவிட்டு அகன்று செபுலோன், நப்தலி ஆகிய இடங்களின் எல்லையில் கடலோரமாய் அமைந்திருந்த கப்பர்நாகுமுக்குச் சென்று குடியிருந்தார். இறைவாக்கினர் எசாயா உரைத்த பின்வரும் வாக்கு இவ்வாறு நிறைவேறியது: “செபுலோன் நாடே! நப்தலி நாடே! பெருங்கடல் வழிப்பகுதியே! யோர்தானுக்கு அப்பாலுள்ள நிலப்பரப்பே! பிற இனத்தவர் வாழும் கலிலேயப் பகுதியே! காரிருளில் இருந்த மக்கள் பேரொளியைக் கண்டார்கள். சாவின் நிழல் சூழ்ந்துள்ள நாட்டில் குடியிருப்போர் மேல் சுடரொளி உதித்துள்ளது.”

அதனைத் தொடர்ந்து திருத்தந்தை கூடியிருந்த திருப்பயணிகளுக்கு தன் மறைக்கல்வி உரையினை எடுத்துரைத்தார்.

புதன் பொது மறைக்கல்வி உரை

அன்பான சகோதர சகோதரிகளே!

கடந்த வார இறுதியில், மத்திய தரைக்கடல் கூட்டங்களுக்கான நிறைவு விழாவில் பங்கேற்க நான் மர்சேய்ல் சென்றேன், இதில் மத்தியதரைக் கடல் பகுதியின் ஆயர்கள், நகர மேயர்கள், ஏராளமான இளைஞர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.  இது எதிர்காலத்திற்கான திறந்த பார்வையாக வெளிப்பட்டது. மர்சேய்லில் நடைபெற்ற  நிகழ்வுகள், உறுதியான நம்பிக்கை என்ற தலைப்பில் இடம்பெற்றது. உறுதியான நம்பிக்கையே நமது கனவு, நமது சவால். மத்திய தரைக்கடல், நாகரிகம் மற்றும் அமைதியின் பயிற்சிக்கூடமாக அதன் தொழிலை மீட்டெடுக்கிறது.

மத்திய தரைக்கடல் நாகரிகம் மற்றும் வாழ்க்கைக்கானத் தொட்டில்! அது ஒரு கல்லறையாக மாறுவதையோ அல்லது மோதலுக்குரிய இடமாகவோ மாறுவதையோ பொறுத்துக்கொள்ள முடியாது. மத்தியதரைக் கடல், நாகரிகங்களுக்கு இடையிலான மோதல், போர் மற்றும் மனித கடத்தலுக்கு எதிரானது. ஆம் நேர் எதிரானது: மத்திய தரைக்கடல் ஆப்பிரிக்கா, ஆசியா மற்றும் ஐரோப்பாவை இணைக்கிறது. வடக்கு மற்றும் தெற்கு, கிழக்கு மற்றும் மேற்கு, மக்களின் கலாச்சாரங்கள், மொழிகள், தத்துவங்கள், மதங்கள் என அனைத்தையும் ஒன்றிணைக்கின்றது. கடல் அதனைக் கடக்கும்போது ஒரு படுகுழியாகவோ ஆபத்தான பகுதியாகவோ சில நேரங்களில் மாறுகின்றது ஆனால் கடல்நீர், வாழ்வின் கொடைகளை வைத்திருக்கிறது, அதன் அலைகள் மற்றும் காற்று எல்லா வகையான படகுகளையும் சுமந்து செல்கிறது. சுருக்கமாக கடல் சந்திப்புக்கான இடமாகத் திகழ்கின்றது. மோதல் மற்றும் மரணத்தின் இடமாக அல்ல மாறாக, வாழ்க்கைக்கான இடமாக திகழ்கின்றது.

நாம் விண்ணுலகில் இருக்கும் ஒரே தந்தையின் பிள்ளைகள் என்பதையும், சகோதர சகோதரிகளாக வாழ அழைக்கப்பட்டுள்ளோம் என்பதையும், அனைத்து மக்களுக்கும் அறிவிக்க அதன் கிழக்குக் கரையிலிருந்து, இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, இயேசு கிறிஸ்துவின் நற்செய்தி புறப்பட்டது. கடவுளின் அன்பு, நமது சுயநலம் மற்றும் மூடிய மனங்களை விட மேலானது என்றும், அவருடைய இரக்கத்தின் உதவியால், நீதியான மற்றும் அமைதியான மனித வாழ்வு சாத்தியமாகும் என்பதனையும் எடுத்துரைக்கின்றது.

இது நிச்சயமாக மாயமந்திரத்தால் நடக்காது. ஒருமுறை மட்டும் உணர்வதால் அடையமுடியாதது. ஒவ்வொரு தலைமுறையும் தாங்கள் வாழும் காலத்தின் அடையாளங்களைப் படித்து, நீண்டு பயணிக்க அழைக்கப்படும் பயணத்தின் பலன் இது. வரலாற்றின் இத்தகையக் காலகட்டம் நம்மைப் பாதித்துள்ளது. இதில் கட்டாய இடம்பெயர்வுகள் காலத்தின் அடையாளமாக மாறிவிட்டன. இந்த அடையாளம் ஒரு அடிப்படை தேர்வை அலட்சியத்திற்கும் சகோதரத்துவத்திற்கும் இடையிலான தேர்வைத் தேர்ந்தெடுக்க நம் அனைவரையும் அழைக்கின்றது.

2020 ஆம் ஆண்டு பாரியிலும், கடந்த ஆண்டு புளோரன்ஸிலும் நடைபெற்ற மத்திய தரைக்கடல் கூட்டங்கள், அதன் தொடர்ச்சியாகப் பிறகு மர்சேய்லிலும் நடைபெற்றது. இது  ஒரு தனிமைப்படுத்தப்பட்ட நிகழ்வு அல்ல, 1950ஆம் ஆண்டுகளின் இறுதியில் புளோரன்ஸ் நகர மேயர் ஜோர்ஜோ லா பீரா அவர்கள் ஏற்பாடு செய்த "மத்திய தரைக்கடல் கூட்டாண்மைகளில்" அதன் தொடக்கக் கூட்டத்தின் ஒரு முன்னோக்கிய படி. திருத்தந்தை புனித ஆறாம் பவுல் அவர்களின் Populorum Progressio என்ற சுற்றுமடல் வலியுறுத்திய "அனைவருக்கும் அதிக மனிதநேயத்துடன் கூடிய உலகம், பிற அமைப்புக்களின் உதவியின்றி,  பிறர் வளர்ச்சிக்குத் தடையின்றி, அனைவருக்கும் கொடுக்கவும் பெறவும் வளர்ச்சி பெற்ற ஒரு உலகம்” என்பதற்கு பதிலளிக்கும் வகையில் இக்கூட்டங்கள் நடைபெறுகின்றன.

Marseille நிகழ்விலிருந்து மத்தியதரைக் கடலைப் பற்றிய ஒரு பார்வை வெளிப்பட்டது, நான் வெறுமனே மனிதனாக, கருத்தியலற்ற, முற்போக்கு எண்ணங்களற்ற, அரசியல் ரீதியாக அல்ல மாறாக ஒரு மனிதனாகப் பங்கேற்றேன். மர்சேய்லில்  மீற முடியாத மனித மாண்பு, ஆச்சரியப்படுத்தும் வகையில் ஒரு நம்பிக்கைப் பார்வையும் தோன்றியது. மனிதாபிமானமற்ற சூழ்நிலைகளை அனுபவித்த அல்லது அவற்றைப் பகிர்ந்து கொண்ட மனிதர்களின் கதைகளைக் கேட்கும்போது, ​​அவர்களிடமிருந்து "நம்பிக்கையின் தொழில் வல்லுனர்களாக மாறும் ஆற்றலைப் பெறுகின்றோம். அதன் பிறகு கடவுள் நமக்கு அளிக்கும் பணியினை எதிர்கொள்கின்றோம். இந்தப் பணி எப்போதும் மனித உடன்பிறந்த உறவின் வழியாக கண்கள், கைகள், கால்கள், ஆண்கள் மற்றும் பெண்களின் இதயங்கள் வழியாக செல்கிறது. அவர்கள் அந்தந்த திருஅவை மற்றும் சமூகப் பொறுப்புக்களில், சகோதர உறவுகளையும் சமூக நட்பையும் உருவாக்க முற்படுகிறார்கள்.

சகோதர சகோதரிகளே, இந்த நம்பிக்கையானது "கொந்தளிப்பை" ஏற்படுத்தாது ஏற்படுத்தக் கூடாது, மாறாக அது தன்னை ஒழுங்கமைத்து, நீண்ட, நடுத்தர மற்றும் குறுகிய கால செயல்களில் செயல்பட வேண்டும். இதன் பொருள் என்ன? மக்கள், முழு மாண்புடனும் சுதந்திரத்துடனும் புலம்பெயர்வதைத் தேர்வுசெய்யும் வகையில் பணியாற்றுவதாகும். இது அண்மையில் கொண்டாடப்பட்ட புலம்பெயர்ந்தோர் மற்றும் இடம்பெயர்ந்தோர் உலக நாளின் கருப்பொருளாகும். முதலில், அனைவரும் தங்கள் சொந்த நாட்டில் அமைதி, பாதுகாப்பு மற்றும் செழுமையுடன் வாழ முடியும் என்பதை உறுதிப்படுத்த நாம் அனைவரும் உழைக்க வேண்டும். இதற்கு தனிப்பட்ட மனமாற்றம், சமூக ஒற்றுமை, உள்ளூர் மற்றும் பன்னாட்டு அளவில் அரசாங்கங்களின் உறுதியான அர்ப்பணிப்புகள் தேவை. இரண்டாவதாக, தங்கள் நாட்டில் இருக்க முடியாதவர்களுக்கு, பயணத்தின் போது அவர்களின் பாதுகாப்பு உறுதிசெய்யப்பட்டு, அவர்கள் வரும் இடத்தில் அவர்கள் வரவேற்கப்பட்டு ஒருங்கிணைக்கப்படும் வகையில் கட்டமைப்புகளை வழங்குவது கேள்விக்குறியாக உள்ளது.

மற்றொரு  நிறைவான அம்சம் உள்ளது: நமது ஐரோப்பிய சமூகங்களுக்கு, குறிப்பாக புதிய தலைமுறைகளுக்கு நாம் நம்பிக்கையை மீட்டெடுக்க வேண்டும். உண்மையில், நாம் முதலில் எதிர்காலத்திற்கான திறந்த மனம் இல்லையென்றால் மற்றவர்களை எப்படி வரவேற்க முடியும்? நம்பிக்கை இல்லாத இளைஞர்கள், தங்களுடைய தனிப்பட்ட வாழ்வில் மறைந்து இருப்பவர்கள், தங்களின் இக்கட்டான நிலையைக் கையாளக் கவலைப்படுபவர்கள், சந்திப்பதற்கும் பகிர்வதற்கும் எப்படித் தங்கள் உள்ளங்களைத் திறக்க முடியும்? தன்னலம், நுகர்வுத்தன்மை வெற்றிடம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட நமது சமூகங்கள் ஆன்மாவையும் ஆவியையும் ஆற்றலால் நிறைந்து திறக்க வேண்டும், இதனால் அவர்கள் நெருக்கடியை ஒரு வாய்ப்பாகப் பார்க்கவும், அதை நேர்மறையான வழியில் எதிர்கொள்ளவும் முடியும். எடுத்துக்காட்டாக, சில ஐரோப்பிய சமூகங்களைப் பாதிக்கும் குளிர்காலத்தைப் பற்றி சிந்திப்போம்:  அதிக எண்ணிக்கையில் காணப்படும் புலம்பெயர்ந்தோரைக் காணும் நமது குழந்தைகள் எதிர்கால நம்பிக்கையைக் கண்டறிய உதவ வேண்டும். அவர்களின் முகங்களில் தூரத்தில் இருந்து வந்த அம்மக்கள் நமது சகோதரர்கள் என்ற நம்பிக்கையைப் பிரதிபலிக்கச் செய்ய வேண்டும்.

ஐரோப்பா தனது ஆர்வத்தையும் உற்சாகத்தையும் மீண்டும் கண்டுபிடிக்க வேண்டும், மர்சேய்லில் இதை நான் அவர்களில் கண்டுபிடித்தேன்.  மறைமாவட்ட ஆயர், கர்தினால் அவெலின், அருள்பணியாளர்கள், துறவறத்தார், இறைப்பணியாற்றும் பொது நிலையினர் ஆகிய அனைவரிலும், கடவுளின் பிறரன்புப்பணிகளைக் கண்டேன். கல்விப்பணி தொண்டுப்பணிகளாற்றும் மக்கள், நம்பிக்கையோடு வெலோட்ரோம் விளையாட்டரங்கத்தில் நடைபெற்ற திருப்பலியில் பங்கேற்றனர். மர்சேய்ல் மக்கள் அனைவருக்கும் பிரான்ஸ் குடியரசுத் தலைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன், அவருடைய உடனிருப்பு  மர்சேய்லில் நடந்த நிகழ்வில் பிரான்ஸ் முழுவதன் கவனத்தையும் ஈர்த்தது. மார்சேயில் மக்கள் நோத்ரே தெம் தி லா கார்தே என்று போற்றப்படும் அன்னை மரியா மத்தியதரைக் கடல் மக்களின் பயணத்தில் உடன்வரட்டும். இதனால் அப்பகுதி எப்பொழுதுமே உறுதியான நாகரிகம் மற்றும் நம்பிக்கையின் அடையாளமாக விளங்கட்டும்.

இவ்வாறு தனது மறைக்கல்வி உரையினை நிறைவு செய்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இத்தாலிய மொழி பேசும் திருப்பயணிகள் அனைவரையும் அன்புடன் வரவேற்றார். குறிப்பாக, பெட்ரோனா மற்றும் சைராகுஸின் திருப்பயணிகள், பலேர்மோவின் விஸ்கொன்தி கொன்சாகா நிறுவன மாணவர்களையும் வாழ்த்தினார்.

இறுதியாக, இளைஞர்கள், நோயாளிகள், முதியவர்கள் மற்றும் புதுமணத் தம்பதிகளை நினைவுகூர்ந்து செபிப்பதாக எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இன்றைய நாளில் திருஅவை நினைவுகூரும் புனித வின்சென்ட் தெ பால், அயலாருக்கு அன்பு செலுத்துவதை நமக்கு நினைவூட்டுகின்றார் என்றும் எடுத்துரைத்தார்.

மற்றவர்களிடத்தில் கவனம் செலுத்தும் மனப்பான்மையையும், தேவையில் இருப்பவர்களிடத்தில் திறந்த மனப்பான்மையையும் வளர்த்துக் கொள்ளுமாறு அனைவரையும் கேட்டுக்கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் விண்ணகத்தந்தையை நோக்கிய செபத்திற்குப் பின் கூடியிருந்த திருப்பயணிகளுக்குத் தன் அப்போஸ்தலிக்க ஆசீரை வழங்கினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

27 September 2023, 08:44