தேடுதல்

பாகிஸ்தானில் எழுத்தறிவு தினம் சிறப்பிப்பு பாகிஸ்தானில் எழுத்தறிவு தினம் சிறப்பிப்பு  (ANSA)

எழுத்தறிவுக் கல்வி, வளர்ச்சிக்கான அடிப்படை ஆதாரம்

நவீன சமுதாயம் எதிர்நோக்கி வரும் மூன்று சவால்களையும் கல்வியையும் இணைத்து அவைகளுக்கானப் பரிந்துரைகளையும் முன்வைத்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

எழுத்தறிவுக் கல்வி என்பது ஒவ்வொரு மனிதனின் வளர்ச்சிக்கான அடிப்படை ஆதாரமாக இருந்து, சமுதாயத்தில் இணக்கமாக ஒன்றிணைவதற்கும், சமுதாய முன்னேற்றத்தில் பங்கேற்கவும் உதவுகிறது என உலக எழுத்தறிவு தினத்திற்கு திருத்தந்தை வழங்கியுள்ள செய்தியில் கூறியுள்ளார்.

செப்டம்பர் 8, வெள்ளிக்கிழமையன்று சிறப்பிக்கப்பட்ட உலக எழுத்தறிவு தினத்தையொட்டி UNESCO  தலைமை இல்லம் இருக்கும் பாரீசில் இடம்பெறும் பன்னாட்டுக் கூட்டத்திற்கு திருத்தந்தையின் செய்தியை அனுப்பியுள்ள திருப்பீடச் செயலர், கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், நம் இக்காலத்தின் சவால்களை சமாளிப்பதில் அனைவரின் பங்கேற்பையும் எதிர்பார்க்கும் திருத்தந்தையின் ஆவலையும் அதில் தெரிவித்துள்ளார்.

நவீன சமுதாயம் எதிர்நோக்கி வரும் மூன்று சவால்களையும் கல்வியையும் இணைத்து அவைகளுக்கானப் பரிந்துரைகளையும் முன்வைத்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்,  அமைதியை ஊக்குவிப்பதற்கான கல்வி,  எண்மம் (digital ) கல்வி, ஒன்றிணைந்த சுற்றுச்சூழலுக்கான கல்வி என அவைகளைச் சுட்டிக்காட்டியுள்ளார்.

அமைதிக்கான கல்வி என்ற தலைப்பின் கீழ், இன்றைய முரண்பாடுகளின் நிலைகளைச் சுட்டிக்காட்டும் திருத்தந்தை, அமைதியை கற்றுக்கொள்ளும் பாதையில் பேச்சுவார்த்தைகளுக்கான மதிப்பீடுகளை மீண்டும் கொணர்தல், இரக்கத்தைச் செயல்படுத்தல், மற்றவர்களுக்கான மதிப்பை வெளிப்படுத்தல் போன்றவைகளின் அவசியத்தைச் சுட்டிக்காட்டியுள்ளார்.

இன்றைய டிஜிட்டல் துறையில் பல்வேறு முன்னேற்றங்கள் இடம்பெற்று வருகின்றபோதிலும், பல இலட்சக்கணக்கான மக்கள் இந்த முன்னேற்றங்களை பகிர்ந்துகொள்ள முடியாமலும், தொழில்நுட்ப வளர்ச்சியில் பங்கெடுக்க முடியாமலும் இருப்பதை நாம் மறந்துவிடமுடியாது என்ற கவலையையும் வெளியிடும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தொழில் நுட்ப முன்னேற்றங்கள் சிலவேளைகளில் தவறான நோக்கத்துடன் பயன்படுத்தப்படுவது குறித்தும் எச்சரித்துள்ளார்.

ஒன்றிணைந்த சுற்றுச்சூழலியலுக்கான கல்வி பற்றி யுனெஸ்கோ என்னும் ஐ.நா.வின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார நிறுவனத்திற்கான செய்தியில் எடுத்துரைக்கும் திருத்தந்தை,  அடுத்திருப்பவர் மற்றும் இயற்கைக்கான அக்கறையை வலியுறுத்துவதாக கல்வி அமையவேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

08 September 2023, 15:15