தேடுதல்

43வது வெளிநாட்டுப் பயணமாக மங்கோலியா சென்றடைந்த திருத்தந்தை

மங்கோலியா நாட்டிற்கான திருத்தந்தையின் திருப்பயண நிகழ்வுகள் செப்டம்பர் 2ஆம் தேதி சனிக்கிழமை காலையிலிருந்தே துவங்குகின்றன.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

ஆகஸ்ட் 31, வியாழக்கிழமை மாலை இத்தாலிய நேரம் 6.30 மணிக்கு, அதாவது இந்திய இலங்கை நேரம் இரவு 10 மணிக்கு  உரோம் நகரிலிருந்து மங்கோலியா நோக்கிய தன் பயணத்தைத் துவக்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், செப்டம்பர் மாதம் முதல் தேதி வெள்ளிக்கிழமையன்று உள்ளூர் நேரம் காலை 10 மணிக்கு, அதாவது இந்திய இலங்கை நேரம் காலை 7.30 மணிக்கு மங்கோலிய தலைநகர் உலான்பாதர் சென்றடைந்தார்.

உலான்பாதரிலுள்ள செஞ்சிஸ்கான் பன்னாட்டு விமானதளத்தில் மங்கோலியா நாட்டிற்கான திருப்பீடத்தூதரக உயர் அதிகாரி பேரருள்திரு Fernando Duarte Barros Reis அவர்கள் விமானத்திற்குள் சென்று திருத்தந்தையை வரவேற்று அழைத்துவர, விமானத்திலிருந்து வெளியே வந்த திருத்தந்தையை மங்கோலியா நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் Batmunkh Battsetseg அவர்கள், அரசு சார்பில் வரவேற்றார்.

தன் 43வது வெளிநாட்டுத் திருப்பயணத்தை மங்கோலியாவில் துவக்க வந்திருக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு முதலில் பாரம்பரிய உடை அணிந்த பெண் ஒருவர் அந்நாட்டு வரவேற்பு முறைப்படி சூடான தயிரை வழங்க, அக்கிண்ணத்தை வாங்கி திருத்தந்தையும் ஒரு வாய் அருந்தினார்.

விமானத்தில் 9 நாடுகளைக் கடந்து 8.278 கிலோமீட்டர் தூரத்தை 9 மணி 30 நிமிடங்கள் பயணம் செய்து மங்கோலியாவைச் சென்றடைந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், செப்டம்பர் முதல் நாள், வெள்ளிக்கிழமை முழுவதும் ஓய்வு எடுத்துக் கொள்கிறார்.

மங்கோலியா நாட்டிற்கான திருத்தந்தையின் திருப்பயண நிகழ்வுகள் செப்டம்பர் 2ஆம் தேதி சனிக்கிழமை காலையிலிருந்தே துவங்குகின்றன.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

01 September 2023, 10:58