தேடுதல்

கர்தினால்  François-Xavier BUSTILLO கர்தினால் François-Xavier BUSTILLO 

le coeur ne se divise pas புத்தகத்திற்கு திருத்தந்தை முன்னுரை

புத்தகத்தின் ஆசிரியர்களான புதிய கர்தினால் François-Xavier Bustillo, திருப்பீடச் செயலகத்தின், பொது விவகாரத் துறை தலைவரான பேராயர் Edgar Peña Parra, முனைவர் Nicolas Diat ஆகியோருக்கு தன் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.

மெரினா ராஜ் – வத்திக்கான்

இதயங்கள் பிரிக்கப்படவில்லை என்ற புத்தகம் இயேசுவை சந்திப்பவர்களின் இதயங்களையும், முழு வாழ்க்கையையும் நற்செய்தியின் மகிழ்ச்சி எவ்வளவு நிரப்புகிறது என்பதை நினைவூட்டுகிறது என்றும், இயேசு கிறிஸ்துவுடன், நமது மகிழ்ச்சி உருவாகி எப்பொழுதும் மீண்டும் மீண்டும் பிறக்கிறது என்றும் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

செப்டம்பர் 30 சனிக்கிழமை இதயம் பிரிக்கப்படவில்லை Le coeur ne se divise pas" என்னும் புத்தகத்திற்கு எழுதியுள்ள முன்னுரையில் இவ்வாறு கூறியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அப்புத்தகத்தின் ஆசிரியர்களான புதிய கர்தினால் François-Xavier Bustillo, திருப்பீடச் செயலகத்தின், பொது விவகாரத் துறை தலைவரான பேராயர் Edgar Peña Parra, முனைவர் Nicolas Diat ஆகியோருக்கு தன் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.  

இதயம் பிரிக்கப்படாதபோது, உள்ளத்தில் வைத்திருக்கும் அன்பு தொடர்ந்து பெருகி அனைவருக்கும் பரவுகிறது என்றும், நாம் அன்பு செய்கின்ற, செபத்தில் சிந்திக்கின்ற, நம்முடைய சகோதர சகோதரிகளுக்கு செய்யும் செயலும் வெளிப்படுத்தும் அன்பும் இயேசுவுக்குப் பணியாற்ற நம்மைத் தூண்டட்டும் என்று குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

கிறிஸ்துவின் இரண்டு வெவ்வேறு வடிவங்களான பணிகளிலிருந்து ஆசிரியர்கள் பெற்ற இனிமையை எடுத்துரைக்கும் இப்புத்தகத்தில் ஆன்மிக இனிமையை அனுபவிக்க முடிகின்றது என்றும், புனித ஜான் ஜான் வியான்னி கூறுவது போல ஒவ்வொரு அருள்பணியாளரின் இதயமும் ஆண்டவர் இயேசுவுக்கே உரியது என்றும், அருள்பணித்துவம் இயேசுவின் இதய அன்பு என்றும் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

விண்ணகத் தந்தையின் இதயம்

விண்ணகத் தந்தையின் இதயத்தை உருவாக்குதல், ஒவ்வொரு நாளும் தந்தையின் ஆன்மிகத்தில் வளரச் செய்தல், தூயவாழ்க்கை, செபம், நற்பண்புகளின் பயிற்சி ஆகியவற்றில் கிறிஸ்துவின் இதயத்திற்கு இதயம் எப்படி இருக்க வேண்டும் என்பதை ஆசிரியர்கள் இப்புத்தகத்தில் வலியுறுத்துகின்றார்கள் என்றும் எடுத்துரைத்துள்ளார் திருத்தந்தை .

தந்தை, எல்லோருடனும் நெருங்கிப் பழக வேண்டும், கேட்க வேண்டும், புரிந்து கொள்ள வேண்டும், இரக்கத்தை உணர வேண்டும் மற்றும் கடவுளின் மக்களுடன் துன்பம், மகிழ்ச்சி மற்றும் கண்ணீரை அனுபவிக்க வேண்டும் என்ற தந்தையின் பண்பை இப்புத்தகம் வலியுறுத்துகின்றது என்பதை கூறியுள்ள திருத்தந்தை, தந்தையாக இருப்பது என்பது தனது வாழ்க்கையையேக் கொடுப்பது என்று கூறியுள்ளார்.

தந்தைத்துவத்தின் வெவ்வேறு வடிவங்களான நம்பிக்கையுள்ள மக்களுக்குக் கற்பித்தல், துன்பப்படுபவர்களுக்கு இரக்கம், அருள்பணியாளர்களிடம் நெருக்கம், இறைமக்கள் மீது அக்கறை போன்றவற்றை சுட்டிக்காட்டிய திருத்தந்தை அவர்கள் ஆயர் என்பவர் ஓர் அதிகாரியாகவோ, பகுதிநேர தந்தையாகவோ இருக்கக்கூடாது என்றும் வலியுறுத்தியுள்ளார்.

மக்கள் மீது அன்பு இல்லாமல் ஒற்றுமை சாத்தியமில்லை என்று வலியுறுத்தியுள்ள திருத்தந்தை அவர்கள், வேறுபாடுகளின்றி, ஒவ்வொரு குழந்தைகளிடமும் அன்பு காட்டுவதைக் கடவுள் பார்க்கிறார் என்றும் திருஅவையின் பன்முகத்தன்மையை தமத்திருத்துவத்தின் வழியாக கடவுள் வெளிப்படுத்துவதை உணர்ந்து கொண்டால், தூய ஆவியானவர் நம்மில் ஒற்றுமையையும், நல்லிணக்கத்தையும் உருவாக்குகின்றார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.  

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

30 September 2023, 11:31