மங்கோலிய திருப்பயண வெற்றிக்கு அன்னைக்கு நன்றி
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்
மங்கோலியா நாட்டிற்கான, அதிலும் குறிப்பாக தலைநகர் உலான்பாதருக்கான திருப்பயணத்தை நிறைவுச் செய்து செப்டம்பர் 4ஆம் தேதி திங்கள்கிழமையன்று மாலை இத்தாலிய நேரம் 5 மணியாளவில் உரோம் நகர் வந்திறங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஒவ்வொரு வெளிநாட்டுத் திருப்பயணத்தின் இறுதியிலும் அன்னை மரியாவுக்கு நன்றிகூறும் நோக்கத்தில் உரோம் நகர் புனித மேரி மேஜர் பேராலயம் சென்று செபிப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திங்கள் மாலையிலும் அப்பேராலயம் சென்று அன்னை மரியா திருப்படத்தின் முன் அமர்ந்து செபித்தார்.
வெளிநாட்டுத் திருப்பயணத்தின் துவக்கத்திலும் திருப்பயணத்தின் இறுதியிலும் மேரி மேஜர் பேராலயத்திற்குச் சென்று அங்குள்ள Maria Salus Populi Romani என்ற அன்னை மரியா திரு உருவப்படத்தின் முன் செபிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மங்கோலியாவில் திருப்பயணத்தை முடித்து உரோம் நகர் Fiumicino பன்னாட்டு விமானத்தளத்திலிருந்து வத்திக்கான் நோக்கி வாகனத்தில் வரும் வழியில் அப்பேராலயம் சென்று செபித்தார்.
இத்திருப்பயணத்தின்போது தன்னை பாதுகாத்து வழிநடத்திய அன்னை மரியாவுக்கு மலர்க்கொத்து ஒன்றையும் அத்திருவுருவப்படத்தின் கீழுள்ள மேடையில் சமர்ப்பித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
உலான்பாதர் விமான தளத்திலிருந்து விமானத்தில் புறப்படும் முன்னர் அந்நாட்டு இளம்பெண் ஒருவர், அந்நாட்டு திருப்பயணத்திற்கான நன்றியாக மங்கோலிய மக்களின் சார்பாக திருத்தந்தைக்கு வழங்கிய மலர்க்கொத்தையே திருத்தந்தை தன்னுடன் விமானத்தில் கொணர்ந்து, அன்னை மரியாவுக்கு சமர்ப்பித்துள்ளார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்