தேடுதல்

உலக புலம்பெயர்ந்தோர் நாளில் செபிக்கும் கைகள் (2019) உலக புலம்பெயர்ந்தோர் நாளில் செபிக்கும் கைகள் (2019) 

இடம்பெயர்தல் கட்டாயத் தீர்வல்ல, முழு சுதந்திரத் தேர்வு

நம் கதவுகளைத் தட்டும் புலம்பெயர்ந்த சகோதர சகோதரிகளை வரவேற்கவும், ஊக்குவிக்கவும், உடன் செல்லவும் மற்றும் ஒருங்கிணைக்கவும் நாம் அழைக்கப்பட்டுள்ளோம்

மெரினா ராஜ் - வத்திக்கான்

இடம்பெயர்தல் என்பது முழுமன சுதந்திரத்துடன் எடுக்கப்பட்ட ஒரு தேர்வாக இருக்கவேண்டும் மாறாக கட்டாய தீர்வாக இருக்கக் கூடாது என்றும், இக்கட்டான சூழ்நிலையில் வாழும் புலம்பெயர்ந்தோர், சொந்த நாட்டில் வாழ்கின்ற அடிப்படை உரிமையை இழந்து தாங்கள் வாழ்கின்ற நாட்டை விட்டு வெளியேறுகின்றனர்   என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

செப்டம்பர் 24 ஞாயிற்றுக்கிழமை வத்திக்கான் வளாகத்தில் கூடியிருந்த திருப்பயணிகளுக்கு வழங்கிய மூவேளை செப உரையின் இறுதியில் இவ்வாறு கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அன்றைய நாளில் சிறப்பிக்கப்பட்ட உலக புலம்பெயர்ந்தோர் மற்றும் இடம்பெயர்ந்தோர் நாளுக்கான கருப்பொருளையும் எடுத்துரைத்தார்.

ஒவ்வொரு ஆணும் பெண்ணும் தாங்கள் வாழ்கின்ற சமூகத்தில் மாண்புள்ள வாழ்க்கை வாழ்வதற்கான உறுதியை அளிப்பது அவசியம் என்றும், வறுமை, போர், காலநிலை நெருக்கடி ஆகியவை பலரை வெளியேற கட்டாயப்படுத்துகின்ற சூழலில், நாம் அனைவரும் திறந்த சமூகங்களை உருவாக்கத் தயாராக இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

புலம்பெயர்ந்து நம் கதவுகளைத் தட்டும் சகோதர சகோதரிகளை வரவேற்கவும், ஊக்குவிக்கவும், உடன் செல்லவும் மற்றும் ஒருங்கிணைக்கவும் நாம் அழைக்கப்பட்டுள்ளோம் என்று கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தனது மர்சேய்ல் திருத்தூதுப் பயணம் நிறைவேற உழைத்த அனைவருக்கும் தன் நன்றியினையும் தெரிவித்தார்.

மேலும் செப்டம்பர் 30 சனிக்கிழமை மாலை தூய பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் நடைபெறும் ஒருங்கிணைந்த உலக ஆயர்கள் மாமன்றத்தின் துவக்கமாக நடைபெற உள்ள கிறிஸ்தவ ஒன்றிப்பு செபவழிபாடு பற்றி நினைவூட்டி அதில் கலந்து கொள்ளவும் திருப்பயணிகளுக்கு அழைப்பு விடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

செப்டம்பர் 30 சனிக்கிழமையன்று நடைபெறும் கிறிஸ்தவ ஒன்றிப்பு விழிப்புணர்வில் பங்கேற்பதற்கான அழைப்பை புதுப்பித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்,  தொடர்ந்து துன்புறுகின்ற மற்றும் துன்புறுத்தப்பட்ட உக்ரைன் மக்களுக்காக செபிக்கும்படியும் கேட்டுக்கொண்டார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

24 September 2023, 14:12