மறைசாட்சியான புனித அரேட்டாஸ் 1500 ஆண்டு ஜூபிலி
மெரினா ராஜ் – வத்திக்கான்
மறைசாட்சியாக மரித்த புனித அரேத்தாஸ் மற்றும் அவருடன் இறந்த ஏறக்குறைய 4000 கிறிஸ்தவர்கள் இறந்ததன் 1500ஆவது ஆண்டை முன்னிட்டு அரபு நாட்டுத் தலத்திருஅவையினருக்கு 2023ஆம் ஆண்டு அக்டோபர் 24 முதல் 2024 அக்டோபர் 23 வரை நிறைபலன் வழங்கும் யூபிலி ஆண்டாக அறிவித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
6 ஆம் நூற்றாண்டில் இஸ்லாமியத்திற்கு முந்தைய அரேபியாவில் கொல்லப்பட்ட 4000 கிறிஸ்தவர்கள் மற்றும் புனித அரேத்தாஸ் ஜூபிலி ஆண்டை முன்னிட்டு, ஐக்கிய அரபு மற்றும் பஹ்ரைனில் புனித கதவுகளை அப்போச்தலிக்க நிர்வாகிகளான Aldo Berardi மற்றும் Paolo Martinelli திறக்க உள்ளனர்.
அரேபிய கத்தோலிக்கத் தலத்திருஅவையானது அரேபியாவில் உள்ள நஜ்ரானில் 523 இல் கொல்லப்பட்ட புனிதர்கள் அரேத்தா மற்றும் அவருடன் இறந்த பிற கிறிஸ்தவர்களின் 1500 வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வேளையில் வரலாற்றுச் சிறப்புமிக்க இவ்வாண்டை யூபிலி ஆண்டாக அறிவித்துள்ளது.
பஹ்ரைன் அவாலியில் உள்ள அரேபியாவின் அன்னை மரியா பேராலயத்தில், நவம்பர் 4 ஆம் தேதி பஹ்ரைன் உள்ளூர் நேரம், 11.00 மணிக்கு, வட அரேபியாவின் அப்போஸ்தலிக்க நிர்வாகி பேரருள்திரு ஆல்தோ பெரார்டி தலைமையில் ஜூபிலியின் தொடக்க நிகழ்வுகளாக புனித கதவு திறக்கப்பட்டு ஆரம்பிக்கப்பட உள்ளன.
அதேபோல், நவம்பர் 9 வியாழன் அன்று அபுதாபி உள்ளூர் நேரம் மாலை 6.00 மணிக்கு, அபுதாபியில் உள்ள புனித யோசேப்பு பேராலயத்தில் தெற்கு அரேபியாவின் அப்போஸ்தலிக்க நிர்வாகி பேரருள்திரு பவுலோ மர்த்தினெல்லி தலைமையில் புனித கதவு திறக்கப்பட உள்ளது.
இந்த யூபிலி ஆண்டின் நினைவாக கான்ஸ்டாண்டிநோபில் கிறிஸ்தவ ஒன்றிப்பு முதுபெரும்தந்தை முதலாம் பர்த்தலோமேயுவின் பரிசாக புனித அரேத்தாஸ் நினைவுச்சின்னமானது நவம்பர் மாதம் பஹ்ரைனுக்குக் கொண்டுவரப்பட உள்ளது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்