தேடுதல்

பிரேசில் நாட்டுப் பாதுகாவலியான Abarecida அன்னை மரியா பிரேசில் நாட்டுப் பாதுகாவலியான Abarecida அன்னை மரியா  

பிரேசில் நாட்டுப் பாதுகாவலியான Abarecida அன்னை மரியா

2016 செப்டம்பர் 3, அன்று, வத்திக்கான் தோட்டத்தில் அபரேசிதா மாதாவின் படத்தை திறந்து வைத்த திருத்தந்தை பிரான்சிஸ், "ஏழைகள், கைவிடப்பட்டவர்கள், கைவிடப்பட்ட முதியவர்கள், தெருவோரக் குழந்தைகளுக்காக செபிக்க உலக மக்களுக்கு அழைப்பு விடுத்தார்

மெரினா ராஜ் – வத்திக்கான்

ஏழைத் தொழிலாளர்களால் கண்டெடுக்கப்பட்ட பிரேசிலின் பாதுகாவலரான அபரேசிதா அன்னை மரியா, பிரேசில் மக்களை ஆசீர்வதிப்பாராக என்றும், வேலைவாய்ப்பு, கல்வி, மனித மாண்பு ஆகியவற்றை நாடும் ஒவ்வொரு மக்களாலும் அன்றாடம் கண்டறியப்படுபவராக இருக்கட்டும் என்றும் காணொளிச்செய்தி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

அக்டோபர் 12 வியாழன் அன்று பிரேசில் நாட்டின் பாதுகாவலரான தூய அபரேசிதா அன்னை மரியா திருவிழாவை முன்னிட்டு பிரேசில் மக்களுக்கு அனுப்பிய வாழ்த்துக் காணொளிச் செய்தியில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

அபரேசிதா அன்னை மரியாவை தன் இதயத்தில் சுமந்து பிரேசில் நகரத்தையும் அதில் வாழும் மக்களையும் நினைவுகூர்ந்து செபிப்பதாகவும், பிரேசில் மக்கள் அனைவரையும் அன்னை மரியா கவனித்து ஆசீர் அளிக்கட்டும் என்று கூறி தனது அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

10 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது 2013ஆம் ஆண்டு ஜூலை 24, அன்று பிரேசிலில் உள்ள அபரேசிதா அன்னை மரியா திருத்தலத்திற்குத் தான் மேற்கொண்ட பயணத்தை நினைவுகூர்ந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அங்கு தான் நிறைவேற்றிய திருப்பலியில் 2007 மே மாதம் நடைபெற்ற இலத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் ஆயர்களின் ஐந்தாவது பொதுப்பேரவையை நினைவுகூர்ந்து எடுத்துரைத்ததையும் குறிப்பிட்டுள்ளார்.

அபரேசிதா அன்னை மரியாவின் திருத்தல வளர்ச்சிக்கு 5ஆவது ஆயர் பொதுப்பேரவை முக்கிய பங்கு வகித்துள்ளது என்று குறிப்பிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மேய்ப்புப்பணியாளர்களின் பணி மற்றும் எளிய மக்களின் நம்பிக்கை ஆகியவற்றிற்கு இடையிலான சந்திப்பில் இத்திருத்தலமானது உருப்பெற்றது என்றும் கூறியுள்ளார்.

கிறிஸ்துவைத்தேடும் திருஅவை, அவரை எங்களுக்குக் காட்டுங்கள் என்று அன்னை மரியாவை நாடுகின்றது என்றும், உண்மையான சீடத்துவம் மரியாவிடம் இருந்து கற்றுக்கொள்ளப்படுகின்றது என்றும் இத்தகைய விழிப்புணர்வில் திருஅவை பணிபுரிகின்றது என்றும் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

2016 செப்டம்பர் 3, அன்று, வத்திக்கான் தோட்டத்தில் அபரேசிடா மாதாவின் படத்தை திறந்து வைத்த திருத்தந்தை பிரான்சிஸ், "ஏழைகள், கைவிடப்பட்டவர்கள், கைவிடப்பட்ட முதியவர்கள், தெருவோரக் குழந்தைகளுக்காக செபிக்க உலக மக்களுக்கு அழைப்பு விடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

12 October 2023, 12:59