தேடுதல்

திருத்தந்தை பிரான்சிஸ் திருத்தந்தை பிரான்சிஸ்   (ANSA)

தூய ஆவியின் ஆற்றலால் செயல்படும் ஆயர் மாமன்றம்

திருஅவை என்பது நல்லிணக்கத்தின் ஒரே குரல் இது தூய ஆவியானவரால் கொண்டு வரப்பட்டது

மெரினா ராஜ் - வத்திக்கான்

ஆயர் மாமன்றம் என்பது தற்போதைய பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காகவோ அல்லது கருத்துக்களை வழங்குவதற்காகவோ நடக்கும் நண்பர்களின் சந்திப்புக் கூட்டமல்ல என்றும், ஆயர் மாமன்றத்தின் முக்கியமான நபராக தூய ஆவியார் இருந்து செயல்படுகின்றார், நம்மை வழி நடத்துகின்றார் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

அக்டோபர் 4 புதன்கிழமை மாலை வத்திக்கான் புனித ஆறாம் பவுல் அரங்கத்தில் நடைபெற்ற 16ஆவது உலக ஆயர்கள் மாமன்றத்தின் தொடக்க உரையில் இவ்வாறு கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நம்மை வழிநடத்தும் தூயஆவியானவர் நம்மிடையே இருந்தால், அது ஓர் அழகான ஒருங்கிணைந்த பயணமாக, ஆயர் மாமன்றமாக இருக்கும் என்றும் வலியுறுத்தினார்.

தனிப்பட்ட, மனித, கருத்தியல் நலன்களுக்காக முன்னோக்கிச் செல்வதற்கான நோக்கம் மற்றும் வழிகள் நம்மிடையே இருந்தால், அது ஆயர் மாமன்றமாக இருக்காது அது ஒரு பாராளுமன்றக் கூட்டமாகவே இருக்கும் என்று கூறிய திருத்தந்தை அவர்கள், புனித பசிலியோ அவர்களின் கட்டுரைகளைக் குறித்து ஆயர் மாமன்ற உறுப்பினர்களிடம் எடுத்துரைத்தார்.

உலக ஆயர்கள் மாமன்றத்தில் பங்கேற்றவர்கள்
உலக ஆயர்கள் மாமன்றத்தில் பங்கேற்றவர்கள்

ஆங்கிலம், பிரஞ்சு, போர்த்துகீசியம் மற்றும் இஸ்பானியம் மொழிகளில் வழங்கப்பட்ட புனித பசிலியோவின் கருத்துக்களைக் குறித்து சிந்திக்கவும் தியானிக்கவும் அழைப்பு விடுத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தூயஆவியானவர் திருஅவை வாழ்க்கையில் முக்கிய பங்கு வகிப்பவர் என்றும், மனிதர்களுக்கான மீட்பின் திட்டம் ஆவியின் ஆற்றலால் நிறைவேறுகிறது என்றும் எடுத்துரைத்தார்.

தூய ஆவியானவர் தான் முன்னின்று நம்மை நடத்துகிறார் என்பதை நாம் புரிந்து கொள்ளாவிட்டால், தூய ஆவியா? அது என்ன அதைப்பற்றி நாங்கள் கேள்விப்பட்டதே இல்லையே என்ற நிலையில் இருப்போம் என்று கூறிய திருத்தந்தை அவர்கள், தூய ஆவியின் ஆற்றலால் பெந்தெகோஸ்தே நாளில் திருத்தூதர்களிடையே ஏற்படுத்திய நல்லிணக்கம் நமது மத்தியிலும் ஏற்படும் என்றும் கூறினார்.

மீட்பின் வரலாற்றில் இணக்கத்தை ஒருங்கிணைப்பவராக, ஒற்றுமையற்ற பகுகுதிகளுக்கு இடையிலான ஒற்றுமையின் பிணைப்பாக நம்மில் தூய ஆவியானவர் செயல்படுகின்றார் என்றும், நாம் அனைவரும் ஒன்று என்று உணரும் இந்த ஆயர் மாமன்றத்தில் நம்மில் காணப்படும் சிறு நுணுக்கங்களில் ஆவியானவர் செயல்படுகின்றார் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.   

உலக ஆயர்கள் மாமன்றத்தில் பங்கேற்றவர்கள்
உலக ஆயர்கள் மாமன்றத்தில் பங்கேற்றவர்கள்

திருஅவை என்பது நல்லிணக்கத்தின் ஒரே குரல்

திருஅவை என்பது நல்லிணக்கத்தின் ஒரே குரல் இது தூய ஆவியானவரால் கொண்டு வரப்பட்டது என்று எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள், இதன்படியே நாம் திருஅவையை உருவாக்க வேண்டும் என்றும், கிறிஸ்தவ சமூகம் மற்றும் அதில் உள்ள ஒவ்வொரு நபர்களின் தனித்தன்மைகள் அனைத்தும் ஒன்றிணைக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

ஒரு தாய் நம்மை வழிநடத்துவது போல தூய ஆவியானவர் நம்மைக் கரம்பிடித்து வழி நடத்துகின்றார் என்றும், இத்தகைய ஆறுதல் அளிக்கும் மற்றும் திருஅவையைக் காக்கும் தூய ஆவியானவரின் குரலைக் கேட்டு அதன்படி நடக்கவும், பகுத்தறிந்து வாழக் கற்றுக்கொள்ளவும், தெளிந்து தேர்வுசெய்யவும் வலியுறுத்தினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

தூய ஆவியானவருக்கும் வருத்தம் வருவிக்கும் வெற்று வார்த்தைகள்

வெற்று வாத்தைகள், புறம்பேசுதல் ஆகியவை தூய ஆவியானவரை வருத்தம் அடையச் செய்கின்றன என்று கூறிய திருத்தந்தை அவர்கள், வார்த்தைக்கும் ஆவியானவருக்கு இடையே மிக முக்கியமான தொடர்பு உள்ளது என்றும், வெற்று வார்த்தைகள் என்ற கொடிய நோயிலிருந்து நாம் மீளவும், தூயஆவி நம்மைக் குணப்படுத்தவும் நாம் அனுமதிக்க வேண்டும் என்று கூறினார்.

பத்திரிகையாளர்களின் பணி மிகவும் முக்கியமானது என்று கூறிய திருத்தந்தை, ஆயர்கள் மாமன்றம் தூயஆவியின் ஆற்றலால் நடைபெறுகின்றது என்பதை மக்களுக்கு எடுத்துரைக்க உதவும் பத்திரிக்கையாளர்களுக்குத் தன் நன்றியினையும், பேசுவதை விட கேட்பதே முக்கியம் என்பதை மக்களுக்கு அறிவிப்பவர்களாக இருக்க அவர்களுக்கு நாம் உதவ வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

05 October 2023, 10:25