தேடுதல்

திருநற்கருணை ஆராதனை திருஅவையின் மிக முக்கியமான சாரம்

அமைதியில் கடவுளை ஆராதிப்பதன் வழியாக மட்டுமே கடவுளுடைய வார்த்தை நம் வார்த்தைகளில் குடியிருக்கும்.

மெரினா ராஜ் – வத்திக்கான்

அன்பு என்பது ஆராதிப்பது, ஆராதனையின் வழியாகவே நாம் கடவுளின் அளவற்ற மற்றும் ஆச்சர்யமுள்ள அன்பிற்கு பதிலளிக்கின்றோம் என்றும்,  திருநற்கருணை ஆராதனை, திருஅவையின் மிக முக்கியமான சாரம் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்

அக்டோபர் 29 ஞாயிற்றுக்கிழமை 16ஆவது உலக ஆயர்கள் மாமன்றத்தின் நிறைவை முன்னிட்டு வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவிலில் நடைபெற்ற திருப்பலியில் தலைமையேற்று மறையுரையாற்றியபோது இவ்வாறு கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

பரிசேயர் மற்றும் சதுசேயரின்  திருச்சட்ட நூலில் தலை சிறந்த கட்டளை எது என்ற கேள்விக்கு இயேசுவின் பதில்கள் குறித்த நற்செய்தியைப் பகுதியை வாசித்து மறையுரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஒருங்கிணைந்த பயணக்கூட்டத்தில் பங்கேற்ற அனைவரும் முதன்மையானது அடிப்படையானதுமான அன்பை முக்கியமாகக் கருதவேண்டும் என்றும், அந்த அன்பிலிருந்து தான் எல்லாமே உருவாகின்றது, மீண்டும் தொடங்குகின்றது என்றும் எடுத்துரைத்தார். 

கடவுளை அன்புசெய்யுங்கள், உங்களைப்போல உங்கள் அயலாரையும் அன்புசெய்யுங்கள் என்ற நற்செய்தி வரிகளை சுட்டிக்காட்டிய திருத்தந்தை அவர்கள், அன்பு செய்வது என்பது நமது உத்திகள், மனித கணக்கீடுகள், உலக நாகரீகங்கள் கொண்டு அல்ல மாறாக    முழுமனதுடன் கடவுளையும் அயலாரையும் அன்புசெய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.

அன்பின் வெளிப்பாடுகளை கடவுளை ஆராதித்தல் மற்றும் அவருக்குப் பணியாற்றுதல் என்பவற்றின் வழியாக மொழிபெயர்க்கலாம் என்று கூறி  இந்த இரண்டு வினைச்சொற்களும் இதயத்தின் இயக்கங்களை பிரதிபலிக்கின்றன என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

திருத்தந்தை பிரான்சிஸ்
திருத்தந்தை பிரான்சிஸ்

அன்பு செய்வது என்பது ஆராதிப்பது

அன்பு என்பது ஆராதிப்பது, ஆராதனையின் வழியாக நாம் கடவுளின் அளவற்ற மற்றும் ஆச்சர்யமுள்ள அன்பிற்கு பதிலளிக்கின்றோம் என்று கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருநற்கருணை ஆராதனை திருஅவையின் மிக முக்கியமான சாரம் என்பதை உணரவேண்டும் என்றும் கடவுள் மட்டுமே இறைவன், அவரே நம் வாழ்வின் பாதை, திருஅவையின் பாதை, வரலாறு என்பனவற்றை அவரது அன்பின் மென்மை நமக்கு வெளிப்படுத்துகின்றது என்றும் கூறினார்.

நமது வாழ்வின் நோக்கம் அவர் என்பதை நாம் அவரை ஆராதிப்பதன் வழியாக கண்டடைகின்றோம் நாம் மீட்கப்படுகின்றோம் என்றும், வெற்றிக்கான ஆசை, பணத்தின் மீதான பேராசை, வீண்பெருமை போன்ற உலகியல் செயல்பாடுகளால் அலகை நம் உள்ளத்தில் நுழைகின்றது என்பதனை மறந்துவிட வேண்டாம் என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

நமது ஆன்மிகம், மேய்ப்புப்பணித்திறன், கருத்துக்கள் போன்றவையே நமது வாழ்வின் மையமாக இருக்கட்டும் என்று வலியுறுத்திய திருத்தந்தை அவர்கள், திரு நற்கருணை முன் அமர்ந்து நல்ல மேய்ப்பராகிய இயேசுவுடன் நெருக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள திருஅவை தலத்திருஅவை மறைமாவட்டங்கள் , மற்றும் சமூகங்கள் நேரம் ஒதுக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.   

அமைதியில் கடவுளை ஆராதிப்பதன் வழியாக மட்டுமே கடவுளுடைய வார்த்தை நம் வார்த்தைகளில் குடியிருக்கும், என்றும் திரு நற்கருணையில் அவருக்கு முன்பாக அமர்ந்திருக்கும் நாம் அவருடைய தூய ஆவியின் ஆற்றலால் தூய்மைப்படுத்தப்பட்டு,  புதுப்பிக்கப்பட்டு, மாற்றமடைகின்றோம் என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ். 

திருத்தந்தை பிரான்சிஸ்
திருத்தந்தை பிரான்சிஸ்

அன்பு செய்வது என்பது பணியாற்றுவது

உடன் வாழும் மனிதர்களிடத்தில் அன்புசெலுத்தாமல் கடவுளுக்கு அன்பு செலுத்துவது என்பது உண்மையான அன்பாகாது என்றும், கடவுளை  ஆராதுப்பது அவருடைய அன்பினால் உடன் வாழும் சகோதரர்களை அன்பு செய்வது ஆகியவை திருஅவையின் மிகப்பெரிய மற்றும் வற்றாத சீர்திருத்தம் என்றும் கூறினார் திருத்தந்தை.

காயப்பட்ட மனிதகுலத்தின் பாதங்களைக் கழுவுகின்ற அவர்களுக்குப் பணிபுரிகின்ற ஆராதிக்கும் திருஅவையாகவும் பணியாற்றும்  திருஅவையாக நாம் இருப்பதால், பலவீனமானவர்கள், வெறுத்து ஒதுக்கப்பட்டவர்கள், நிராகரிக்கப்பட்டவர்கள் ஏழைகள் ஆகியோர் உடன்பயணித்து அன்பின் மென்மையால் அவர்களை சந்திக்க திருஅவை நம்மை அழைக்கின்றது என்றும் கூறினார்.

போரின் கொடுமைகளால் பாதிக்கப்பட்டவர்கள், புலம்பெயர்ந்தோர், தனிமை மற்றும் வறுமையினால் துன்புறுபவர்கள், வாழ்க்கைச் சுமைகளால் நசுக்கப்பட்டவர்கள், குரலற்றவர்கள், கண்ணீர் சிந்துபவர்கள், சுரண்டல் மற்றும் வன்முறையினால் பாதிக்கப்பட்டவர்கள் ஆகிய அனைவரையும் நினைவுகூர்ந்து செபிக்க வலியுறுத்தினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

பலவீனமானவர்களை சுரண்டுவது மனித உடன் பிறந்த உறவை சிதைத்து சமுதாயத்தை சீரழிக்கும் பெரும் பாவம் என்று சுட்டிக்காட்டிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இயேசுவின் சீடர்களாகிய நாம், நற்செய்தியின் புளிக்காரமாக செயல்பட்டு கடவுளை முதல் இடத்திலும் அவர் விரும்பும் ஏழைகளையும் பலவீனமானவர்களையும் அதற்கு அடுத்த இடத்தில் வைத்து வாழ வலியுறுத்தினார்.

இத்தகைய திருஅவையையே நாம் கனவு காண அழைக்கப்பட்டிருக்கின்றோம் என்றும், வரவேற்கின்ற, பணியாற்றுகின்ற இரக்கத்துடன் ஏழைகளுக்கு உதவுகின்ற ஒரு திருஅவையாக இருக்க நாம் அழைக்கப்படுகின்றோம் என்று எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள், அனைவரையும் வரவேற்கும் துறைமுகமாக திருஅவை செயல்பட வேண்டும் என்றும் கூறினார்.

நல்லவர்கள் தீயவர்கள் என யாராக இருந்தாலும் துறைமுகமானது நகருக்குள் நாட்டிற்குள் நுழைய அனுமதிக்கின்றது என்று சுட்டிக்காட்டிய திருத்தந்தை அவர்கள், .16ஆவது உலக ஆயர்கள் மாமன்றம் நிறைவு பெறும் வேளையில் தூய ஆவியின் உரையாடலில்" இறைவனின் மென்மையான பிரசன்னத்தை அனுபவிக்கவும் மனித உடன்பிறந்த உணர்வின் அழகைக் கண்டறியவும் ஒருவருக்கொருவர் செவிமடுத்ததற்காக தன் நன்றியினையும் தெரிவித்து தொலைநோக்கு பார்வையுடன் செயல்பட கேட்டுக்கொண்டார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

29 October 2023, 11:08