தேடுதல்

கடவுளை அன்புசெய்தல் அயலாரை அன்புசெய்தல்

கடவுள் எப்போதும் நமக்கு முன் இருக்கிறார், அவருடைய எல்லையற்ற மென்மையால் நமக்கு மிக அருகில் இருந்து அவரது இரக்கத்தையும், கனிவையும் நமக்கு வெளிப்படுத்துகின்றார்

மெரினா ராஜ் - வத்திக்கான்

அன்பை சுடர்விடும் ஒரு துளி நீராகக் கருதி வாழ்ந்த புனித அன்னை தெரசாபோல , பல விடயங்களை மாற்றக்கூடியது ஒரு துளி அன்பு என்பதை அறிந்து கடவுளை அன்புசெய்தல் என்னும் முதல் அடியையும்,  உடன் வாழும் சகோதர சகோதரிகளை  அன்பு செய்தல் என்னும் இரண்டாவது அடியையும் எடுத்து வைப்போம் என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

அக்டோபர் 29 ஞாயிற்றுக்கிழமை வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் கூடியிருந்த திருப்பயணிகளுக்கு வழங்கிய மூவேளை செப உரையின் போது இவ்வாறு கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கடவுளின் கைகளிலிருந்து அன்பு செய்வதை நாம் கற்றுக்கொள்கின்றோம் என்றும் எடுத்துரைத்தார்.

இறைவனின் எல்லையற்ற  அன்பு நம் உடன் சகோதரர்களுக்குத் தாராளமாக அன்பைக் கொடுக்க நம்மைத் தூண்டுகின்றது, கிறிஸ்துவின் பணி நம்மை அன்புசெய்யத் தூண்டும் பலத்தை தன்னுள் கொண்டுள்ளது என்ற புனித பவுலின் வார்த்தைகளை நினைவுகூர்ந்த திருத்தந்தை அவர்கள், கிறிஸ்துவின் பேரன்பே நம்மை ஆட்கொள்கின்றது (2 கொரி 5:14). எல்லாமே அவரிடமிருந்தே தொடங்குகிறது என்றும், கடவுளின் அன்பு, இயேசுவின் அன்பு என்ற வேர் நம்மிடம் இல்லையென்றால் மற்றவர்களை நம்மால் உண்மையாக அன்பு செய்ய முடியாது என்றும் கூறினார்.

நம் உடன் வாழும் சகோதர சகோதரிகளை அன்பு செய்வதன் வழியாக ஒரு கண்ணாடியைப் போல, தந்தையின் அன்பை நாம் பிரதிபலிக்கிறோம் என்றும் கண்ணால் காணாத இறைவனை, காணும் சகோதரர்களை அன்பு செய்வதன் வழியாக நாம் அன்பு செய்கின்றோம் என்றும் கூறினார் திருந்தந்தை பிரான்சிஸ்.

ஒருமுறை புனித அன்னை தெரசாவிடம், ஒரு பத்திரிக்கையாளர் ஒருவர் உலகை மாற்றமுடியும் என்ற மாயையில் இருக்கின்றீர்களா என்று கேட்டதற்கு பதிலாக, "நான் உலகை மாற்ற முடியும் என்று ஒருபோதும் நினைக்கவில்லை! மாறாக நான் ஒரு துளி சுத்தமான  நீராக மட்டுமே இருக்க முயற்சித்தேன், அதில் கடவுளின் அன்பு அதில் சுடர்விட முடியும் என்றும் கூறியதாக எடுத்துரைத்தார் திருத்தந்தை.

எப்போதும் நமக்கு முன் இருக்கும் கடவுளின் அன்பைப் பற்றி நினைத்து, முதலில் என்னை அன்பு செய்யும் இறைவனுக்கு நான் நன்றியுள்ளவனா? நான் கடவுளின் அன்பை உணர்கிறேனா, அவருக்கு நன்றியுள்ளவனாக இருக்கிறேனா? அவருடைய அன்பைப் பிரதிபலிக்க முயற்சிக்கிறேனா? என் உடன் வாழும் சகோதரர்களை அன்புசெய்தல் என்ற இரண்டாவது படியை எடுக்க நான் என்னை அனுமதிக்கின்றேனா? என்று நமக்குள் நாமே கேள்வி கேட்க வலியுறுத்தினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

29 October 2023, 12:35