எம்மாவூ சீடர்கள் போல நற்செய்தி அறிவிக்கும் ஆர்வம் கொண்டு வாழ...
மெரினா ராஜ் – வத்திக்கான்
இயேசுவின் வாழ்வை எடுத்துரைக்கும் நற்செய்தியின் வழியாக அவரின் இதயத்தை அறிந்து கொள்ளுதல், சகோதரத்துவ பகிர்தலில் இறைவார்த்தையை வளப்படுத்துதல் மற்றும் ஆழப்படுத்துதல், மகிழ்வான பணியால் அதை மற்றவர்களுக்கு வெளிப்படுத்துதல் ஆகிய பண்புகள் கொண்டு வாழ வேண்டும் என்றும், எம்மாவூ சீடர்கள் போல நற்செய்தியை அறிவிக்கும் ஆர்வம் கொண்டு வாழ வேண்டும் என்றும் வலியுறுத்தினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
அக்டோபர் 2 திங்கள்கிழமை வத்திக்கானின் கிளமெந்தினா அறையில் திருஇருதய மறைப்பணியாளர்கள் சபையின் 26ஆவது பொதுப்பேரவையை முன்னிட்டு அதன் உறுப்பினர்கள் ஏறக்குறைய 90 பேரை சந்தித்த போது இவ்வாறு கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சபையின் நிறுவனரான Jules Chevalier போல மறைப்பணி ஆர்வம் கொண்டு வாழவும் வலியுறுத்தினார்.
நற்செய்தியின் வழியாக இயேசுவின் இதயத்தை அறிதல்.
சிறியவர்கள், ஏழைகள், துன்பப்படுவோர், பாவிகள் என மனிதகுல மக்கள் அனைவரின் துயரங்களும் தன்னைத் தொடும்படி வாழ்ந்த இயேசு, தனது மென்மையான இரக்கம் நிறைந்த இதயத்தை நமக்காகக் கையளிப்பதில் மகிழ்ச்சி அடைகின்றார் என்றும், மனித குலத்திற்காக சிலுவை வரை தன்னைக் கையளித்து பாடுகள் பட்டு இறந்த அவரின் இதய அன்பை உணரவேண்டும் என்றும் வலியுறுத்தினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
எம்மாவூ செல்லும் பாதையில், சீடர்களின் உள்ளங்கள் பற்றி எரியச்செய்யும் வகையில் இருந்த இயேசுவின் வார்த்தைகள், வெறும் கோட்பாடுகள் அல்ல மாறாக தந்தையின் திருஉளத்தை முழுவதுமாக நிறைவேற்றிய, தெய்வீக இதயம் என்றும் சுட்டிக்காட்டிய திருத்தந்தை, இத்தகைய தெய்வீக இதயத்தைப் புரிந்து கொண்டு இதயத்தில் வைத்து தியானித்து வாழ்ந்த அன்னை மரியா போல வாழ வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
சகோதரத்துவ பகிர்வில் இறைவார்த்தையை ஆழப்படுத்துதல்
இயேசுவை அடையாளம் கண்டுகொண்ட எம்மாவூ சீடர்கள் வியப்புடன் ஒருவர் மற்றவரிடம் பகிர்ந்து கொண்டனர் என்று கூறிய திருத்தந்தை அவர்கள், இயேசுவை சந்திக்கும் போது நமது உள்ளத்தில் எழும் வியப்புக்களை ஒருவர் மற்றவருடன் பரிசாகப் பகிர்ந்து கொள்ளவேண்டும் என்றும் கூறினார்.
இயேசுவை சந்திப்பதற்கு முன்பு ஏமாற்றங்கள் மற்றும் தோல்விகளைப் பற்றி மட்டுமே சிந்தித்து உரையாடி வந்த சீடர்கள் உயிர்த்த இயேசுவைக் கண்டதற்குப் பின்பு, மகிழ்ச்சியுடன் நம்பிக்கை அளிக்கக்கூடிய வார்த்தைகளை மட்டுமே பகிர்ந்து கொண்டனர் என்று எடுத்துரைத்தார் திருத்தந்தை.
மகிழ்வான பணியினால் அறிவித்தல்
எம்மாவூ சீடர்கள் சிறிதும் தாமதிக்காமல் எருசலேமுக்குத் திரும்பி வந்து உடன் சீடர்களுடன் தங்களது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர் என்று கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தான் என்ற தன்முனைப்பிலிருந்து விடுபட்டு, பொதுவான இல்லம், குடும்பம், சமூகம் என அனைத்தின் நலனுக்காக இறைவார்த்தையை மகிழ்வுடன் அறிவிக்க வேண்டும் என்றும் எடுத்துரைத்தார்.
ஏழைகள், புலம்பெயர்ந்தோர்க்கு ஏற்படும் துன்பங்கள் மற்றும் அநீதிகள், உலகில் தொடர்ந்து எழுந்து நம்மைக் கேள்விக்குள்ளாக்குகின்றன என்று கூறிய திருத்தந்தை அவர்கள், அத்தகையவர்களை எதிர்கொண்டு, கிறிஸ்துவின் இதய இரக்கத்தில் நம்மை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என்றும், இயேசுவைப் போல அன்பு செய்யவும், நமது நற்செயல்களின் வழியாக அவருடைய இரக்கத்தை வெளிப்படுத்தவும் நம்மை அனுமதிக்க வேண்டும் என்றும் கூறினார்.
நெருக்கம், இரக்கம் மற்றும் மென்மை
கடவுளின் தன்மைகளான நெருக்கம், இரக்கம் மற்றும் மென்மை கொண்டு வாழ வலியுறுத்திய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நெருக்கமானவராக, இரக்கமுள்ளவராக, மென்மையானவராக இருக்கும் கடவுள் போல, மற்றவர்களிடம் நாமும் இருக்கவேண்டும் என்றும், இயேசுவோடு உரையாடும்போது இந்த நெருக்கம், இரக்கம், மென்மை ஆகியவற்றை நாம் பெறுகின்றோம் என்றும் கூறினார்.
செபமற்ற செயல் பயனற்றது, செபத்தினால் இவை அனைத்தும் நிச்சயம் நமக்குக் கிடைக்கும் என்று வலியுறுத்திய திருத்தந்தை, தனிப்பட்ட மற்றும் அர்ப்பண வாழ்வை அழிக்கும் சோகம் என்னும் புழுவை விட்டு விலகுங்கள் என்றும், மனம் திரும்புதலுக்கான வருத்தமல்ல மாறாக அன்றாட வாழ்வில் வரும் தேவையற்ற வருத்தம் என்னும் சோகம் நம் வாழ்வை புழுப் போல அழித்துவிடும் என்றும் கூறினார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்