தேடுதல்

சூறாவளியால் பாதிக்கப்பட்ட பகுதி சூறாவளியால் பாதிக்கப்பட்ட பகுதி   (ANSA)

சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் திருத்தந்தை ஆறுதல்

குவாதலுப்பே அன்னை மரியா பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதலையும் பாதுகாப்பையும் தர அருள்வேண்டி செபிக்கின்றேன். திருத்தந்தை பிரான்சிஸ்

மெரினா ராஜ் - வத்திக்கான்

மெக்சிகோவின் அகாபுல்கோவை தாக்கிய மிகவும் வலுவான சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்களுடன் தனது ஆன்மீக நெருக்கத்தை தெரிவித்துக் கொள்வதாகவும், பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்காக சிறப்பாக செபிப்பதாகவும் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

அக்டோபர் 29 ஞாயிற்றுக்கிழமை வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் கூடியிருந்த திருப்பயணிகளுக்கு வழங்கிய மூவேளை செப உரையின் இறுதியில் இவ்வாறு தெரிவித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சூறாவளியினால் இறந்த 39 பேரின் ஆன்மா இறைவனில் நிறையமைதியடைய செபிப்பதாகவும் கூறினார்.

பாதிக்கப்பட்டவர்களுக்காகவும், அவர்களது குடும்பத்தினருக்காகவும், கடுமையான பாதிப்புக்குள்ளானவர்களுக்காகவும் தொடர்ந்து செபிப்பதாக எடுத்துரைத்த திருத்தந்தை குவாதலுப்பே அன்னை மரியா பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதலையும் பாதுகாப்பையும் தர அருள்வேண்டி செபிப்பதாகவும் எடுத்துரைத்தார்.

அக்டோபர் 25 புதன்கிழமை பசிபிக் பெருங்கடலில் ஏற்பட்ட ஓடிஸ் சூறாவளியால் மெக்சிகோவின் கரையோரப்பகுதியும் சுற்றுலாத்தளமுமான அகாபுல்கோ அதிகமாக பாதிக்கப்பட்டது. இதுவரை இறந்தவர்களின் எண்ணிக்கை 39 என்றும், 10க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.

மணிக்கு 264 கிலோமீட்டர் வேகத்தில் வீசிய காற்றினால் அப்பகுதியின் கட்டிடங்கள் அனைத்தும் சேதமடைந்துள்ளன. பசிபிக் பெருங்கடலில் ஏற்பட்ட சூறாவளிகளின் வரலாற்றில் ஓடிஸ் சூறாவளி மிகவும் சக்திவாய்ந்த சூறாவளியாக உள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

29 October 2023, 12:43