புலம்பெயர்ந்த மனிதருக்கு திருத்தந்தை ஆறுதல்
மெரினா ராஜ் - வத்திக்கான்
நவம்பர் 17 வெள்ளிக்கிழமை பிற்பகலில் உரோம் சாந்தா மார்த்தா இல்லத்தில் பாடோ என்றழைக்கப்படும் புலம்பெயர்ந்த மனிதரைச் சந்தித்து அவருக்கு ஆறுதல் கூறி ஆசீரளித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
கேமரூனைச் சார்ந்த பாடோ என்று அழைக்கப்படும் எம்பெங்கு நிம்பிலோ கிரெபினை (Mbengue Nyimbilo Crepin) சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தனது மனைவி மற்றும் ஆறுவயது மகளை இழந்த அவருக்கு ஆறுதல் கூறி அவர்களின் ஆன்ம இளைப்பாற்றிக்காகத் தொடர்ந்து செபிப்பதாகவும் எடுத்துரைத்தார்.
துனிசிய அதிகாரிகளால் லிபியா மற்றும் துனிசியாவிற்கும் இடையே உள்ள பாலைவனத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட பாடோ 2023 ஆம் ஆண்டு ஜூலை மாதம் தனது மனைவியையும் ஆறு வயது மகளையும் இழந்தார். இந்த துயரமான நிகழ்வைத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு எடுத்துரைத்தார் பாடோ.
தங்கள் சொந்த நாட்டிலிருந்து புலம்பெயர்ந்து ஐரோப்பாவை அடைய முயற்சிக்கும் ஆயிரக்கணக்கான மக்களின் வேதனையான கதைகளைக் கேட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அத்தகைய மக்களுக்காகப் பணியாற்றுபவர்களின் அர்ப்பண மன நிலையையும் பாராட்டினார்.
புலம்பெயர்ந்தோரின் படிப்பு மற்றும் வேலைக்காகக் கொடுக்கப்படும் சலுகைகள் என்பது ஒரு கடன் என்று எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள் இத்தகைய பணிகள் அதிகமான மற்றும் மிகுதியான பணியல்ல மாறாக ஒரு கடமை என்றும் எடுத்துரைத்தார்.
தன்னை சந்திக்க வந்த புலம்பெயர்ந்தோர்க்காக இறுதியில் செபித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புலம்பெயர்ந்தோர் மற்றும் இடம்பெயர்ந்தோர்க்காகப் பணியாற்றுபவர்கள், இங்கு வர இயலாத நிலையில் இருப்பவர்கள், தடுப்பு முகாம்களில் இருப்போர் என அனைவரையும் நினைவுகூர்ந்து, வதை முகாம்களில் துன்புறும் ஏராளமான மக்களுக்காக அவர்களின் மீட்பிற்காக உழைக்கவேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
புலம்பெயர்ந்த மனிதரான பாடோவோடு, ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற திருப்பீட அமைப்பின் தலைவர் கர்தினால் மைக்கேல் செர்னி, மத்திய தரைக்கடல் பகுதிகளில் உள்ள புலம்பெயர்ந்தோர் மற்றும் இடம்பெயர்ந்தோர்க்காகப் பணியாற்றுபவர்கள், புலம்பெயர்ந்தோரை வரவேற்கும் அமைப்புக்களின் உறுப்பினர்கள், என பலர் உடனிருந்தனர்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்