தேடுதல்

Celtic கால்பந்தாட்டக் கழகத்தினருடன் திருத்தந்தை பிரான்சிஸ் Celtic கால்பந்தாட்டக் கழகத்தினருடன் திருத்தந்தை பிரான்சிஸ்   (Vatican Media)

விளையாட்டின் தரம், ஒற்றுமையில் வெளிப்பட வேண்டும்!

சமுதாயத்திலுள்ள ஆண்களும் பெண்களும் உங்களை சிறந்த கால்பந்தாட்ட வீரர்களாக மட்டுமல்ல, அன்பும், இரக்கமும், பரிவும் கொண்ட பெரிய இதயமுள்ளவர்களாகவும் உங்களை அவர்கள் காண வேண்டும் : திருத்தந்தை பிரான்சிஸ்

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

ஒரு போட்டியில் தோற்பதை விட வெற்றி பெறுவது எப்போதும் விரும்பத்தக்கது என்பது உண்மைதான் என்றாலும், அது மிக முக்கியமான அம்சம் அல்ல! என்றும் ஆடுகளத்திற்கு வெளியேயும் வெற்றி பெறும்போதும் தோற்கும்போதும் நீங்கள் கொடுக்கும் எடுத்துக்காட்டுதான் மிகவும் முக்கியமானது என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

நவம்பர் 29, இப்புதனன்று, Celtic கால்பந்தாட்டக் கழகத்தினரைத் திருப்பீடத்தில் சந்தித்தபோது இவ்வாறு கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கால்பந்தாட்டம் என்பது துணிச்சல், விடாமுயற்சி, தாராள மனப்பான்மை மற்றும் கடவுள் கொடுத்த மனித மாண்பிற்கு மரியாதை போன்ற நற்பண்புகளையும் உள்ளடக்கியுள்ளது என்றும் எடுத்துக்காட்டினார்.

Celtic கால்பந்தாட்ட கழகம் கிளாஸ்கோ நகரில் வறுமையை ஒழிக்கும் குறிப்பிட்ட குறிக்கோளுடன் 1887-இல் நிறுவப்பட்டது என்பதை எடுத்துக்காட்டிய திருத்தந்தை, இது உண்மையிலேயே நமது சகோதரர் சகோதரிகளில் மிகவும் தேவையில் உள்ளவர்களுக்காக உதவும் ஒரு பிறரன்பு நிறுவனமாகும் என்றும், ஆனாலும், அதன்பிறகு கால்பந்து உலகம் எவ்வளவோ மாறிவிட்டது என்பதையும் சுட்டிக்காட்டினார்.

குறிப்பாக, 'இதுவொரு மிகவும் அழகான விளையாட்டு' என்பதன் பெயரில் இதன் நிதித் தடம் வெகுவாக அதிகரித்துள்ளது என்றும், சில வேளைகளில் பண இலாபத்தின் காரணங்களுக்காக மட்டுமே கால்பந்தை கவர்ச்சிகரமானதாக மாற்றும் ஆபத்தும் உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை.

உங்கள் கால்பந்தாட்டக் கழகத்தின் மதிப்புமிக்க மரபு, உங்கள் தோள்களில் ஒரு பெரிய பொறுப்பை வைக்கிறது என்றும், குறிப்பாக, இளைஞர்களுக்கு எடுத்துக்காட்டாக இருக்க உங்களுக்கு நினைவூட்டுகிறது என்றும் விளக்கிய திருத்தந்தை, சிறந்த விலையாட்டு வீரர்களாக உங்களின் தரத்தை விளையாட்டில் மட்டுமல்ல, உங்களின் ஒற்றுமையிலும் காண்பிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

இந்நிலையில், சமுதாயத்திலுள்ள ஆண்களும் பெண்களும் உங்களைச் சிறந்த கால்பந்தாட்ட வீரர்களாக மட்டுமல்ல, அன்பும், இரக்கமும், பரிவும் கொண்ட பெரிய இதயமுள்ளவர்களாகவும் அவர்கள் உங்களை காண வேண்டும் என்றும் அறிவுறுத்தினார் திருத்தந்தை

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

29 November 2023, 13:43