தேடுதல்

வெனிசுவேலா ஆலயம் வெனிசுவேலா ஆலயம்  (AFP or licensors)

சக வாழ்வை மனிதாபிமானதாக்கி உடன்பிறந்த உணர்வு நிலையை எழுப்புதல்

கலாச்சாரத்திலும் வரலாற்றிலும் மிகுந்த வளமுடைய இலத்தீன் அமெரிக்கா, மிக ஆழமான மத உணர்வுகளையும், உடன்பிறந்த நிலை பற்றிய அனுபவங்களையும் தன்னுள் கொண்டுள்ளது

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

ஒருவர் ஒருவருக்கிடையேயான வேறுபாடுகளையும் சவால்களையும் அங்கீகரித்து, ஒருவர் மற்றவருக்கு செவிமடுத்து செயல்படும்போது சமூக ஒப்புரவுக்கும் பொதுநலனைக் கட்டியெழுப்புவதற்கும் நாம் பங்காற்றமுடியும் என பொலிவாரியன் நாடுகளின் திருஅவைக்கும் அரசியல் தலைவர்களுக்கும் இடையேயான கூட்டத்திற்கு வாழ்த்துச் செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

தென் அமெரிக்காவில் பொலிவேரியன் நாடுகள் என அழைக்கப்படும் பொலிவியா, கொலம்பியா, ஈக்குவதோர், பானமா, பெரு, வெனிசுவேலா ஆகிய ஆறு நாடுகளின் கத்தோலிக்க ஆயர்கள் மற்றும் பொதுநிலையினர் இணைந்து, அந்நாடுகளின் அரசியல் தலைவர்களை இம்மாதம் 22ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை சந்தித்து உரையாடி வரும் கூட்டத்திற்கு தன் செய்தியை அனுப்பியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

நவீன காலத்தின் சமூக மற்றும் அரசியல் நிலைகளை கருத்தில்கொண்டு பொதுநிலையினருக்கும் ஆயர்களுக்கும் நல்வழிகாட்டுதல்களை தொடர்ந்து வழங்கிவரும் இலத்தீன் அமெரிக்காவுக்கான பாப்பிறை அவையின் தூண்டுதலின்பேரில் இலத்தீன் அமெரிக்க ஆயர்களால் நடத்தப்படும் இந்த சந்திப்புக் கூட்டத்திற்கு முதலில் தன் நன்றியை வெளியிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

கலாச்சாரத்திலும் வரலாற்றிலும் மிகுந்த வளமுடைய இலத்தீன் அமெரிக்கா, மிக ஆழமான மத உணர்வுகளையும், உடன்பிறந்த நிலை பற்றிய அனுபவங்களையும் தன்னுள் கொண்டுள்ளது என்ற திருத்தந்தை, கடந்த காலத்தின் வன்முறை மற்றும் சகோதரத்துவமற்ற நிலைகளால் விளைந்த பாவங்களாலும் மீட்பின் அடையாளங்களாலும் இலத்தீன் அமெரிக்கா அடையாளப்படுத்தப்பட்டுள்ளதையும் தன் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

நவீன உலகின் சக்திமிக்க இன்றைய கலாச்சார ஓட்டங்கள், இலத்தீன் அமெரிக்காவில் ஊடுருவியுள்ளபோதிலும், அதன் தனித்தன்மை காப்பாற்றப்பட்டு வருகின்றது என்ற திருத்தந்தை, இலத்தீன் அமெரிக்காவிற்கு இன்றைய தலைமுறையின் பங்களிப்பும் படைப்பாற்றலும் தேவைப்படுகின்றன என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

சக வாழ்வை மேலும் மனிதாபிமானதாக மாற்றி உடன்பிறந்த உணர்வு நிலையை கட்டியெழுப்பும் பணியில் திருஅவையின் சிறப்புப் பங்களிப்பையும் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

நண்பர்களுக்காக உயிரைக் கொடுப்பது, எதிரிகளையும் அன்புச் செய்வது என்ற இயேசுவின் இரு  போதனைகளைச் சுட்டிக்காட்டிய திருத்தந்தை அவர்கள், இவைகளைக் கடைப்பிடிப்பது, மன்னிப்பின் மௌன நடவடிக்கைகளையும், தன்னையேக் கையளிக்கும் செயல்களையும், சான்று வாழ்வையும் எதிர்பார்க்கின்றன என்பதையும் எடுத்துரைத்துள்ளார்.

நல்ல சமாரியர் பாதையில் அரசியலை நடத்தி, உடன்பிறந்த உணர்வின் பாலத்தைக் கட்டியெழுப்பும் மக்கள் இன்று தேவைப்படுகிறார்கள் எனக் கூறும் திருத்தந்தையின் செய்தி, ஒவ்வொருவரும் ஒருவர் மற்றவரை உடன்பிறப்புக்களாக ஏற்று சமூக நட்புணர்வை வளர்க்க வேண்டும் எனவும் விண்ணப்பிக்கிறது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

24 November 2023, 14:46