திருத்தந்தை: நாம் படித்தறிய வேண்டிய வாழும் புத்தகம் இயேசுவே!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
ஒவ்வொரு நற்கருணைப் பேழையிலும் புனிதப்படுத்தப்பட்ட ஒவ்வொரு திருக்கிண்ணத்திலும், சிலுவை எழுவதைக் காண்கிறோம், என்றும், ‘எனது வலியைக் குறைக்க உங்களால் எதுவம் செய்ய இயலுமா’ என்றே இயேசு நம் ஒவ்வொருவரிடமும் கேட்கிறார் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
நவம்பர் 16, இவ்வியாழனன்று, அமெரிக்காவில் வாழும் இஸ்பானிய மொழிபேசும் குருக்களைத் திருப்பீடத்தில் சந்தித்தபோது இவ்வாறு உரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், என்றும் வாழும் புத்தகமாகிய இயேசுவைப் படித்தறிய வேண்டுமென நான் உங்களுக்குப் பரிந்துரைக்கின்றேன் என்றும் தெரிவித்தார்.
அமெரிக்காவில், அடுத்த ஆண்டு ஒரு தேசிய நற்கருணை மாநாடு தயாராகி வருகிறது என்றும், அருளாளர் Charles Acutis மற்றும் புனித Manuel González ஆகியோர் அதன் பாதுகாவலர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் என்றும் எடுத்துக்காட்டிய திருத்தந்தை, இவ்விருவரும் திருஅவையின் பல புனிதர்களைப் போலவே வாழும் புத்தகமாகிய இயேசுவைப் படிக்கும் கலையில் சிறந்து விளங்கினர் என்றும் கூறினார்.
புனித மனுவேலின் மறைக்கல்வி போதனைகளிலிருந்து துல்லியமாக நீங்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்க விரும்புகிறேன் என்று உரைத்த திருத்தந்தை, விசுவாசிகள் குழு ஒன்றிடம் உரையாற்றிய அவர், கல்வாரியில் புனிதப் பெண்களின் பங்கைப் பற்றி சிந்தித்து, இயேசுவினுடைய சிலுவைக்கு முன் ஒவ்வொரு சீடருக்கும் அன்றும் இன்றும் அவர்கள் முன்மாதிரியாகத் திகழ்கின்றனர் என்பதையும் எடுத்துரைத்தார் என்றும் சுட்டிக்காட்டினார்.
இவ்விதமான துயரங்களையெல்லாம் கல்வாரியில் அனுபவித்த இயேசு, தனது துயரங்களை நிறுத்தவில்லை' என்றும், ஒவ்வொரு நற்கருணைப் பேழையிலும், திருப்பொழிவு செய்யப்பட்ட ஒவ்வொரு திருக்கிண்ணத்திலும், சிலுவை எழுவதைக் காண்கிறோம் என்றும், அவரது வலியைக் குறைக்க நம்மால் எதுவும் செய்ய முடியுமா என்று இயேசு நம்மைப் பார்த்துக் கேட்கிறார் என்றும் புனித மனுவேல் கூறியதை நினைவு கூர்ந்தார் திருத்தந்தை.
ஆனால், துன்பப்படும் ஒவ்வொரு சகோதரர் சகோதரிகளிடமும் இரக்கம் நிறைந்த இயேசு என்னும் நற்கருணைப் பேழை உடனிருக்கின்றது என்பதை உணர்ந்துகொள்ளுங்கள் என்று அவர்களிடம் அறிவுறுத்திய திருத்தந்தை, கடவுள் உங்களிடம் கேட்பதெல்லாம் அம்மக்களைக் கைவிட்டுவிடாதீர்கள் என்பதுதான் என்றும் எடுத்துக்காட்டினார்.
புனித மனுவேல், தனது பரிந்துரைகளில், எல்லாவற்றிற்கும் மேலாக, இன்று ஒரு அருள்பணியாளரிடம் இருக்கவேண்டியது எளிய இறைவேண்டல், நெருக்கமான வார்த்தை, சகோதரத்துவ ஏற்றுக்கொள்ளல் மற்றும் விடாமுயற்சி என்பதைக் குறிப்பிட்டார் என்றும் கூறினார் திருத்தந்தை.
சகோதரர்களே, உன்னதமான சிந்தனைகளிலோ, நன்கு வடிவமைக்கப்பட்ட மேய்ப்புப் பணித் திட்டங்களிலோ மட்டும் உங்கள் நம்பிக்கையை வைக்காதீர்கள், குற்றங்களைத் தேடாதீர்கள், ஆனால், உங்களை அழைத்தவரிடம் உங்களையே முழுமையாகக் கையளித்து நம்பிக்கையையும் நிலைத்தன்மையையும் மட்டுமே கேட்க வேண்டும் என்றும், அனைத்தையும் நிறைவுறச்செய்யும் அவர், உங்கள் முயற்சிகள் நல்ல பலனைத் தருவதை உறுதிசெய்வார் என்றும் உரைத்தார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்