தேடுதல்

சொல்லும் செயலும் ஒன்றிணைந்து செல்லும் வாழ்க்கை வாழ

இரண்டுவிதமான மாறுபட்ட வாழ்க்கை நிலை கொண்ட இதயமானது கிறிஸ்தவர்களாகிய நமது சான்றுள்ள வாழ்வையும் நம்பிக்கையையும் ஆபத்தில் ஆழ்த்துகின்றது

மெரினா ராஜ் – வத்திக்கான்

மறைநூல் அறிஞர்கள் மற்றும் பரிசேயர்கள் சொல்கிறார்கள் ஆனால் அதன்படி செய்வதில்லை என்றும், அவர்கள் செய்யும் அனைத்து செயல்களையும் மக்கள் பார்க்கவேண்டும் என்றே செய்கின்றார்கள் என்றும் எடுத்துரைத்து, சொல்லுதல் - செயல்படுதல், உள்புறம் - வெளிப்புறம் ஆகிய இரண்டிற்கும் இடையே உள்ள தூரத்தில் கவனம் செலுத்த அழைப்புவிடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

நவம்பர் 5 ஞாயிற்றுக்கிழமை வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் குழுமியிருந்த திருப்பயணிகளுக்கு வழங்கிய மூவேளை செப உரையின்போது இவ்வாறு கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மறைநூல் அறிஞர்கள் மற்றும் பரிசேயர்கள் இறைவார்த்தையை மக்களுக்குக் கற்பித்தல், ஆலயத்தின் அதிகாரிகள் என்ற முறையில் மக்களால் மதிக்கப்படுதல் என்னும் இரண்டு வாழ்க்கை நிலையை வாழ்கின்றனர் என்றும் சுட்டிக்காட்டினார்.

இவர்களின் இந்த இரட்டைத்தன்மை கொண்ட வாழ்க்கைக்கு சவால் விடுவதாக இயேசுவின் வார்த்தைகள் அமைந்துள்ளன என்று கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இறைவாக்கினர் எசாயா குறிப்பிடுவது போல வாய்ச் சொல்லால் இம்மக்கள் என்னை அணுகுகின்றனர், உதட்டினால் என்னைப் போற்றுகின்றனர், அவர்கள் உள்ளமோ என்னை விட்டுத் தொலையில் இருக்கிறது என்ற இறைவார்த்தைக்கேற்ப அவர்கள் வாழ்கின்றார்கள் என்றும் எடுத்துரைத்தார்.

சொல்லும் செயலும்

இத்தகைய இரண்டுவிதமான மாறுபட்ட வாழ்க்கை நிலை கொண்ட இதயமானது கிறிஸ்தவர்களாகிய நமது சான்றுள்ள வாழ்வையும் நம்பிக்கையையும் ஆபத்தில் ஆழ்த்துகின்றது என்றும், நமது பலவீனத்தினாலேயே, சொல்லும் செயலும் மாறுபட்ட வாழ்க்கையை நாம்  வாழ்கின்றோம் என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

சமுகம் மற்றும் திருஅவை வாழ்க்கைக்கு அழைக்கப்பட்டுள்ள நாம், பிளவுபட்ட இதயத்தோடு அல்ல மாறாக உண்மையான அருள்பணியாளராக, மேய்ப்புப்பணியாற்றுபவராக, அரசியல்வாதியாக, ஆசிரியராக, பெற்றோராக, மற்றவர்களுக்கு எதைச் சொல்கின்றோமோ அதை நாம் முதலில் செய்பவர்களாக, நம்பிக்கையுள்ள சான்றுகளாக மாறவேண்டும் என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

உள்புறம் மற்றும் வெளிப்புறம்

உள்புறத்தை விட வெளிப்புறம் முதன்மையானது என்று எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள், மறைநூல் அறிஞர்களும் பரிசேயர்களும் தங்கள் நற்பெயரைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்பதற்காக அனைத்தையும் மறைக்கின்றார்கள் என்றும், மக்கள் தங்களது உள்ளத்தில் இருப்பவற்றைக் கண்டுகொள்ளாமல் இருக்கவேண்டும் என்பதற்காகவே இவ்வாறு செயல்படுகின்றார்கள் என்றும் கூறினார்.

தங்களது வாழ்க்கை, முகம் மற்றும் இதயத்தை இச்செயல்களால் மறைக்கும் இத்தகையவர்கள், தங்களை நல்லவர்கள் போல மக்கள் முன் காட்டிக் கொள்ள இச்செயலைச் செய்கின்றார்கள் என்று கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இத்தகையவர்கள் உண்மையான வாழ்க்கை வாழத் தெரியாதவர்கள் என்றும், பல நேரங்களில் நாமும் இத்தகைய பிளவுபட்ட இதயத்தோடு வாழ தூண்டப்படுகின்றோம் என்றும் கூறினார்.

மற்றவர்களுக்கு போதிப்பதை விட அதனை நாம் நடைமுறைப்படுத்த முயற்சிக்கின்றோமா? நாம் சொல்வது சொன்றும் செய்வது ஒன்றுமாக இருக்கின்றதா?

நம்மை நல்லவர்களாகக் காட்டிக்கொள்ளவும், நமது இயல்பு நிலையை மறைப்பதிலும் கவனம் செலுத்துகின்றோமா? அல்லது நமது வாழ்க்கையை செம்மைப்படுத்தும்வகையில் நமது இதயநேர்மையுடன் வாழ்கின்றோமா என்று சிந்தித்து செயல்பட வலியுறுத்தினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

05 November 2023, 12:50